அல்சரைத் தடுப்பது எப்படி?

 அல்சரைத் தடுப்பது எப்படி? அறிகுறிகள்.... உணவுப் பழக்க வழக்கங்கள்... எச்சரிக்கைகள்.





இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று சிதைவடையும். இதை 'இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.


தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, மேல் சிறுகுடல் பகுதி ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் பொதுவாக 'பெப்டிக் அல்சர்'என்று அழைக்கப்படுகிறது. அதாவது வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுப்பாதையின் பாதுகாப்பு சளிச்சவ்வை அழித்து விடும்.


இந்த பெப்டிக் அல்சர் உடலினுள் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். பெப்டிக் அல்சர் இரண்டு வகைப்படும் இரைப்பைப் புண் கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்றும் மேல் சிறுகுடலில் புண் என்றால் அது டியோடினல் அல்சர் ( Deodenal Ulcer) என்றும் அழைக்கப்படுகிறது.


சளிச்சவ்வு மிகவும் மெலிதானாலோ அல்லது நம் வயிறு அமிலங்களை அதிக அளவில் சுமந்தாலோ அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் ஹெச்.பைலோரி எனப்படும் ஹெலிகோபாக்டர் பைலோரி எனும் பாக்டீரியாதான், இதில் நம்மில் பாதிப்பேருக்கு இருப்பதே. இந்த எச். பைலோரி ஒருவரிலிருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடியது. முத்தத்தினாலும் பரவும், மேலும் சுத்தமில்லாத உணவு, தண்ணீரினாலும் இந்த பாக்டீரியா தொற்றும்.


தவறான உணவுப்பழக்க வழக்கங்கள்:


காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது; மது அருந்துதல், புகைபிடித்தல், குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது; உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு காரணமாக அமைகின்றன.


மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் அமிலச்சுரப்பை அதிகரித்து இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் ஏற்பட வாய்ப்புள்ளது.


இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது, எனவே முன் கூட்டியே எண்டோஸ்கோபி, பயாப்சி எடுத்துவிடுவது நல்லது.

தவிர்க்க வேண்டிய பழக்கம்.




இதற்கு மருந்தாக ஆண்ட்டி ஆசிட் மருந்துகள் கொடுக்கப்படும், ரேனிடிடின் உள்ளிட்ட ஹெச்-2 ரிசப்டார் ஆண்டகனிஸ்ட்கள் கொடுக்கப்படும் அடுத்த கட்டமாக புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களான ஓமிப்பிரசோல், லான்சபிரசோல், பேண்டப்ரசோல் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள்.


வேகவைத்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம், ஃபாஸ்ட் புட் அறவே தவிர்ப்பது நல்லது. மனத்தக்காளிக் கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.


முதலில் அல்சர் இருந்தால் நாமாகவே சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. மருத்துவர்களிடம் காட்டினால்தான் அது எந்த வகையான அல்சர், ஹெச். பைலோரி இருக்கிறதா போன்றவற்றை சோதனை செய்து மருந்துகள் அளிக்க முடியும்.

மதுபானம்




அமாக்சிசிலின் மற்றும் கிளாரித்ரோ மைசின், இதனுடன் ஓமிபிரசோல் போன்ற புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் மாத்திரைகளை மருத்துவர்கள் அளிக்கலாம். பென்சிலின் அலர்ஜி இருந்தால் மருத்துவர்கள் அமாக்சிசிலினுக்குப் பதில் மெட்ரோனிடாசோல் கொடுக்கலாம். எந்த மருந்தாக இருந்தாலும் 10-15 நாட்களுக்கு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.


நம் குடலில் மில்லியன் கணக்கில் பாக்டீரியாக்கள் உள்ளன, இதில் எச்.பைலோரி வகைதான் நோயை உருவாக்கும். மற்றவை நல்லதே செய்யும். இப்படி நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பாக்டீரியாக்கள் புரோபயாட்டிக்குகள் என்று அழைக்கப்படுகிறது.


இது நம் உணவுப்பொருட்களில் உள்ளது, தயிர், வெண்ணெய், சீஸ் போன்ற பால் பொருட்களில் அதிகம் உள்ளது. முட்டை, மீன் ஆகியவையும் சாப்பிடலாம். புதினா, தேங்காய்ப்பால் ஆகியவையும் உதவும். தவிர்க்க வேண்டியவை ஆல்கஹால், புகைப்பழக்கம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகள், அல்சர் பிரச்னை உள்ளவர்கள் சோடா மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,