நடிகர் ஜெய்சங்கர்

 இன்று (ஜூலை 12-ந் தேதி) நடிகர் ஜெய்சங்கர் பிறந்தநாள்


.இந்நாளையொட்டி (ஆந்தை உள்ளிட்ட) பலருக்கும் கண்ணொளி வழங்கி வரும் ஜெய்சங்கர் மகன் விஜய்சங்கர் முன்னொரு முறை நம்மிட(மு)ம் பகிர்ந்த விஷயத்தை ஷேர் செய்கிறோம்,
சட்டக் கல்லூரியில் படித்து வந்த என் அப்பா சினிமா மீது கொண்ட மோகத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அப்பாவின் 100-வது படமான இதயம் பார்க்கிறது என்ற படத்தில் கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்து இருப்பார். அப்போது தனது குழந்தைகளில் ஒருவரை கண் டாக்டராக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் கண் டாக்டருக்கு படித்து கண் டாக்டர் ஆனதும் அப்பா என்னை கட்டியணைத்து நான் திரைப்படத்துறையில் பன்றது ஒன்றும் இல்லை. நீ என்னை விட பெரிதாக சாதிச்சுட்டே என்று கூறி சந்தோஷப்பட்டார். அதைப் போல என் தம்பியை என்ஜினீயருக்கும், தங்கையை டாக்டருக்கும் படிக்க வைத்தார்.
அந்த காலத்தில் அப்பா நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமையன்று வெளிவந்து வசூலை வாரிக் குவிக்கும். இதனால் ‘வெள்ளிக்கிழமை’ ஹீரோ என்று அழைக்கப்பட்டார். அப்பாவை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிடுவதற்கு பணமின்றி சிரமப்பட்டார். அந்த தயாரிப்பாளரை வீட்டுக்கு அழைத்து வந்து பீரோவில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்து நீங்க படத்தை வெளியிடுங்கள். அடுத்த படத்துக்கும் பூஜை செய்யுங்கள். நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று கூறினார்.
அப்பா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது அவர்களை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய சொந்த செலவில் விருந்து ஏற்பாடு செய்வார். தான் இப்படி செய்தால் மற்றவர்களும் இதேபோல் செய்ய முன் வருவார்கள் என்று கூறுவார்.
துணிவே துணை படப்பிடிப்பின்போது என்னை ஹெலிகாப்டரில் அமர வைத்து சுற்றி பறக்கச் செய்தார். அப்பா தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டு இருந்தபோது, சிலர் நீங்கள் ஏன் சம்பளத்தை உயர்த்தி வாங்கக்கூடாது என்று கூறினர். அதற்கு அப்பா ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களோ அதை விட தயாரிப்பாளர் அதிகமாகவே கொடுக்கிறார்கள் என்று கூறி விடுவார்.
ஒரு சமயம் தமிழ்நாட்டில் பலத்த புயல் மழையால் வெள்ளம் வந்தபோது அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை ராமாபுரம் தோட்டத்தில் சந்தித்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். ரஜினிகாந்த் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். முதன் முதலாக அப்பாவின் ரசிகராக வீட்டுக்கு வந்தார். அதன்பின் அடிக்கடி வீட்டுக்கு வருவார். எனக்கு 8 வயதில் இருந்தே ரஜினிகாந்தை தெரியும். அப்போது அதிகமான படங்களில் அப்பா ‘ஹீரோ’வாக நடித்துக்கொண்டு இருந்தார். ‘முரட்டுக்காளை’ படத்தில் அப்பாவை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க ஏவி.எம். சரவணன் விருப்பப்பட்டார். எங்களுக்கு அப்பாவை வில்லனாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் ரஜினிக்கும், அப்பாவுக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. சரவணன் சார் சொன்னதுக்காகவும், ரஜினி மீதான அன்புக்காகவும் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
முரட்டுக்காளை படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. ரஜினி ஒரு பெரிய உயரத்தை தொடுவார் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அவர் சொன்ன மாதிரியே ரஜினி ‘சூப்பர் ஸ்டார்’ ஆனார். வழக்கமாக வேட்டி-சட்டை அணியும் பழக்கம் கொண்ட அப்பா ஒரு படப்பிடிப்பில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ‘பதான் சூட்’ அணிந்து வந்தார். ஆச்சரியத்தோடு பார்த்தபோது ரஜினியின் அன்புக் கட்டளைக்கு இணங்கி அதை அணிந்து கொண்டதாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை அப்பா உற்சாகமாக கொண்டாடுவார். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்போம். அப்பாவுக்கு சரவெடி மிகவும் பிடிக்கும். சிவகாசியில் உள்ள அப்பாவின் நண்பர்கள் பட்டாசு அனுப்பி வைப்பார்கள். 12 மணி வரை பட்டாசு வெடிப்பார். அப்பா ஜாலியான மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகுவார். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து பழகமாட்டார். அப்பா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 300 படங்களுக்கும் மேலாக நடித்து உள்ளார். வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள், சி.ஐ.டி. சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், காலம் வெல்லும், துணிவே துணை போன்ற படங்கள் அவரது வீர தீரத்தை பறை சாற்றும். சேலம் ரோட்டரி கிளப் கூட்டத்தில் ரசிகர் மன்றம் அப்பாவுக்கு ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட்டத்தை வழங்கினார்கள். அன்று சிந்திய ரத்தம் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடந்தபோது என்னை குதிரையில் அமர வைத்து ஓட்டினார். எனக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அதன் பிறகு குதிரையில் ஏறவே இல்லை.
அனைத்து நடிகர், நடிகைகளுடனும் நட்புரிமையோடு பழகுவார். எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு அப்பாவுக்கு நெருக்கமான உறவு இருந்தது. சிவாஜி சார் 2 முறை வீட்டுக்கு வந்து இருக்கிறார். அப்பாவை ‘சங்கரா’ என்றுதான் கூப்பிடுவார். சினிமாவில் அனைத்து கெட்டப் பழக்கமின்றி ஒழுக்கத்தோடு வாழ்பவர் நடிகர் சிவகுமார் என்று பாராட்டுவார். கலைஞர் கருணாநிதியுடனும் அப்பாவுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் வசனம் எழுதிய வண்டிக்காரன் மகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
ஒரு நாளைக்கு ‘3 ஷிப்ட்’ முறையில் அவர் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தபோது நான் மணிப்பாலில் டாக்டருக்கு படித்துக்கொண்டு இருந்தேன். அவருடன் நான் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே குறையாகும். அவருடன் பணியாற்றிய சினிமா நண்பர்கள் அவரைப் பற்றி என்னிடம் கூறும் தகவல்கள் பிரமிப்பாக உள்ளது. 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி குவைத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பா சென்று இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்துவிட்டார். மற்றவர்களுக்காக அவர் வாழ்ந்தார். அவருக்காக அவர் வாழவில்லை. இது ஒன்றுதான் குறை.
நான் கண் டாக்டராகி ஆயிரம் பேருக்கு ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆசை. அவரது விருப்பப்படியே கண் டாக்டராகி பல்லாயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன். அவரது ஆன்மா எங்களை என்றென்றும் ஆசீர்வதித்து கொண்டு இருக்கும்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,