ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது
world hepatitis day: ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது
28.7.2021
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் தீவிரமான நோய் அறிகுறியாகும். இதன் காரணமாக கல்லீரல் வீக்கமடைகிறது. கல்லீரல் வீக்கமடைவதால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த உற்பத்தி, செரிமான பிரச்சனையில் துவங்கி உடலுக்கு ஆற்றல் கிடைப்பதில் இது தடைகளை உண்டாக்குகிறது.
நமது உடலின் அனைத்து உறுப்புகளும் ஆற்றலை கொண்டே இயங்குகிறது. ஆனால் அந்த ஆற்றல் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலானது பல ஊட்டச்சத்து பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே முழு உடலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இப்படியான பெரிய உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய ஹெபடைடிஸ் பற்றி நாம் தெரிந்துக்கொள்வது முக்கியமாகும்.
ஹெபடைடிஸ்
ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது கல்லீரலை அழிக்கும் செயல்முறைகளை செய்கிறது. மேலும் இவற்றில் ஏ, பி, சி, டி மற்றும் ஈ என்று வகைகள் உள்ளன. ஹெபடைடிஸ் ஏ கடுமையானதாக இருக்கிறது. ஆனால் பி, சி, டி, மற்றும் ஈ வகைகள் நாள்பட்ட நோயாக இருக்கின்றன. இப்படி ஹெபடைடிஸ் வகையை பொறுத்து பண்புகள் மாறுகின்றன.
ஹெபடைடிஸ் ஏ
பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலம் இது பரவுகிறது. நுண்ணிய அளவில் பாதிக்கப்பட்ட நபரின் மலத்துடன் ஏற்படும் தொடர்பு ஹெபடைடிஸ் ஏ பரவலுக்கு காரணமாகிறது. இந்த தொடர்பு பொதுவான பொருட்கள் அல்லது உணவு வழியாக நிகழ்கிறது.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி, டி
இது பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், விந்து அல்லது பிற உடல் திரவங்களால் பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதன் மூலம் பெண்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இது ஒரு கடுமையான கல்லீரல் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்துடன் ஏற்படும் நேரடி தொடர்பு மூலம் இது பரவுகிறது.
ஹெபடைடிஸ் ஈ
இது நீரினால் பரவும் தன்மை கொண்டது. முக்கியமாக மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான நீர் காரணமாக இது ஏற்படுகிறது. இது மலம் தொடர்பான பொருள் செரிமான மண்டலத்திற்குள் செல்வதால் ஏற்படுகிறது.
சோர்வு, காய்ச்சல், அடர்த்தியான சிறுநீர், வெளிர் நிறத்தில் மலம், வயிற்று வலி ஆகியவை இதன் பொதுவான அறிகுறியாக உள்ளது. மேலும் சிலர் இதனால் பசியின்மை, உடல் பலவீனம், எடை இழப்பு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஆகிய அறிகுறிகளையும் பெறுகின்றனர்.
ஹெபடைடிஸ் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
ஹெபடைடிஸ் கல்லீரலில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அது பின்வரும் பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தலாம். இதனால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
தூங்குவதில் சிக்கல்
நமது நோயெதிர்ப்பு அமைப்பானது அதிகமாக பணிப்புரியும் போது அது தைராய்டு சுரப்பியில் தாக்கத்தை உண்டாக்கும். இதனால் பலவீனம், சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான நாட்களில் நாம் தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கமடைதல்
ஹெபடைடிஸ் பாதிப்பு காரணமாக கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் வயிற்று வலி ஏற்படுகிறது. மேலும் இதனால் கல்லீரலின் வீக்கம் மோசமடையக்கூடும்.
நச்சு இரத்தம்
ஹெபடைடிஸ் காரணமாக கல்லீரல் செயல்பாடு பலவீனமடைகிறது. இதனால் உடலில் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் திறனானது பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சோகை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
கல்லீரல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் நமது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். உடலில் அதிக அளவில் பிலிரூபின் இருப்பதால் இது ஏற்படுகிறது.
பித்த உறுபத்தியில் இடையூறு
கல்லீரலில் ஏற்படும் அழற்சியானது பித்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய குடலின் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நமது உணவில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்களை உறிஞ்சுவதில் பித்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்த உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு உடலுக்கு சத்து கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை அடையலாம்.
எனவே அனைவரும் ஹெபடைடிஸ் குறித்து விழிப்புணர்வாக இருப்பது முக்கியமாகும். ஹெபடைடிஸ் குறித்த மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் எனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர் உங்களுக்கு ஹெபடைடிஸ் இருக்கிறதா இல்லையா என பரிசோதித்து கூறுவார்.
Comments