பாடல் ஒரு கோடி செய்தாய்!

பாடல் ஒரு கோடி செய்தாய்!
By விக்ரமாதித்யன்

1960-களின் தொடக்கத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் இருந்த காலம்; அப்போது நான் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவன். கங்கைகொண்டானைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், ஜாபர்கான் பேட்டையில் வைத்திருந்த காயலான் கடையில் எனக்கு வேலை. அவருடைய வீடு அமைந்தகரையில். அவருக்கு மதியச் சாப்பாடு எடுத்துவர வேண்டும். அதுவும் என் வேலையில் சேர்த்தி. அந்த நாட்களில் தெருவுக்கு மூன்று நான்கு திமுக சார்பு மன்றங்கள் இருக்கும். ‘திராவிட நாடு’, ‘இனமுழக்கம்’ போன்ற பத்திரிகைகளைச் சுவரையொட்டிய சன்னமான கம்பியில் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மன்றம் ஒன்றின் நூலகத்தில்தான் கிடைத்தது, காவியக் கழகம் வெளியிட்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் முதல் தொகுப்பு. படித்து முடித்ததும், அதுவரை காணாத புதுமையை உணர்ந்தது உள்ளம். அந்தத் தொகுப்பில் இருந்த ‘பிள்ளை ஒரு தொல்லை’ என்ற கவிதையின் பாடுபொருள் இன்றைக்கும் புதிதுதான். அந்தத் தொகுப்பின் நிறைய வரிகள் நெஞ்சில் வந்து அப்படியே அமர்ந்துகொண்டன.
அந்நாளில் கவியரங்கக் கவிதையின் ஆரம்பத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும் உண்டு. கண்ணதாசன் இப்படிப் பாடுவார்:
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்துவரும்
ஒண்புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!
கண்ணதாசன் காங்கிரஸில் இருந்த காலகட்டத்தில் அவருடைய பிறந்தநாள் விழா வருஷம்தோறும் தேனாம்பேட்டை மைதானத்தில்தான் நடக்கும்; கண்டிப்பாக, கவியரங்கம் நடக்கும். அந்தக் கவியரங்கங்களில் கவிஞர், கவிதை படிப்பதைக் கேட்பது ஓர் உன்னதமான அனுபவம். ஒருமுறை கேட்ட கடவுள் வாழ்த்துப் பாடல் இது:
தந்தைக்கோர் மந்திரத்தைச்
சாற்றிப் பொருள்விரித்து
முந்து தமிழில் முருகு என்று பேர் படைத்து
அந்தத்தில் ஆதி ஆதியில் அந்தமென
வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை
வசைக்கவி
கவிஞர் வசைக்கவி பாடினால் வசை பாடப்படுபவரே மயங்கிப்போவார். ஒருமுறை அண்ணாவை இந்த விதமாக விமர்சித்தார்:
‘வடிவோடு படமெழுதும் ஓவியனைப்
போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும்?’
தி.மு.க-வை இப்படி:
கத்திரியில் வெண்டைக்காய்
காய்த்துக் குலுங்குமென்றால்
தத்துவத்தில் ஏதோ தகராறு என்று பொருள்
சிங்கந்தான் மான்குலத்தைச்
சீராட்டி வளர்க்குமென்றால்
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள்.
தியாகராய நகர் பேருந்து நிலையத்தின் அருகில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கவிஞர் பேசும்போது திமுகவை இவ்விதம் விமர்சித்திருக்கிறார்:
பேசிப் பழகிய பொய்
வாங்கிப் பழகிய கை
போட்டுப் பழகிய பை.
காங்கிரஸையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு கவியரங்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் தொண்டர்களிடம் இப்படிக் கவி பாடினார்:
நாமென்ன ஆலை அரசர்களா
ஆடாத மேனியரா?
வேலை மிக அதிகம்; வேகம் மிகக் குறைவு
சோலை இளம் காற்றைச் சுவைப்பதற்கு
நேரம் இல்லை.
விமர்சனம் என்றில்லை; கலைவாணர்
என்.எஸ். கிருஷ்ணன், காருகுறிச்சி அருணாசலம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நேரு முதலான ஆளுமைகள் மறைந்தபோது, அவர் எழுதிய இரங்கற்பாக்கள் படிக்கும்போது கண்கசிய வைத்துவிடும். அது மட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு தனக்கே இரங்கற்பா பாடியவர் அவர்:
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
அவன்பாட்டை எழுந்து பாடு!
வண்டல் நடை
கவிதை ஒரு வகை சுகம் என்றால், கவிஞரின் உரைநடை, காவேரி வண்டல்போல வளமானது. அவருடைய புஷ்பமாலிகாவும், ஞானமாலிகாவும் உரைநடையில் சிறப்பம்சம் கொண்டவை. திமுகவிலிருந்து விலகுவதற்கு முன், ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனியரசு’ பத்திரிகையில் எழுதிய ‘போய்வருகிறேன்’ கட்டுரை மறக்க முடியாதது. அதே போலத்தான் பைபிள் நடையின் சாயலில் அவர் எழுதியுள்ள இன்னொரு கட்டுரையும்.
அடுத்த வரி என்ன?
திருநெல்வேலியில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; நானும் நண்பர் சுப்பு. அரங்கநாதனும். ‘கோயில் மணியோசைதனைக் கேட்டதாரோ?’ என்ற வரியைத் தொடர்ந்து என்ன வரி வரும் என்று எதிர்பார்ப்பு. ‘கோயில் மணியோசைதனைச் செய்ததாரோ?’ என்று அடுத்த வரி வந்தது; மலைத்துப்போனோம். இரண்டு நாட்களுக்கு முன்புகூட ஒரு தொலைக்காட்சியில், ‘சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை/ ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை’ என்ற வரிகளை நடிகர் திலகம் பாடக் கேட்டதும் கண்ணில் ஏன் நீர் துளிர்த்தது?
‘பாடல் ஒரு கோடி செய்தேன் / கேட்டவர்க்கு ஞானம் இல்லை’ என்ற வரிகளை ‘கவிமூலம்’ கட்டுரை
ஒன்றின் முகப்பில் மேற்கோளாகக் காட்டியிருப்பேன். திரையிசைப் பாடல் உலகின் சாம்ராட் அவர்.
இன்றைக்கும் நான் வீட்டில் நல்ல மனநிலையில் இருக்கும்போது காலையில் குளித்துவிட்டு வந்து, தலைகாயக் காற்றாடியைச் சுழல விட்டுவிட்டுப் பாடுகிற வரிகள் இவை:
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?
(மன்னாதி மன்னன்)
சிருங்காரத்தின் தலைவன்
‘மலர்கள் நனைந்தன பனியாலே/ என் மனமும் குளிர்ந்தது நினைவாலே’ என்று ஆரம்பமாகும் பாடலில் ஓரிடத்தில் இப்படி வரும்:
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலைசீவி முடிக்க நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி.
இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களிலேயே சிருங்கார ரசத்தைக் கண்ணதாசன் அளவுக்கு வடிவாகச் சொன்னவர் வேறு யாரும் இல்லை; அதனால்தான் கண்ணதாசனிடம் இப்படிச் சொக்கிக்கிடக்கின்றேனோ என்று தோன்றுகிறது.
- விக்ரமாதித்யன், கவிஞர்,

நன்றி: இந்து தமிழ்திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,