...உள்ளதே போதும் ...." / Grigori Perelman என்ற அந்த மாமனிதர்

 ...உள்ளதே போதும் ...." 
       நம்மில் பல பேருக்கு  Gregory Peck  என்றால் யாரென்று  தெரியும்.

          ஆனால் Grigori Perelman  என்றால்?

         இவரைப் பற்றி தெரியாமல் இருப்பது வியப்பு ஒன்றும் இல்லை.

         ஏனெனில், முன்னவர்,அனைவரும் விரும்பும் திரை உலகத்தில் பிரபலமாக இருந்த  நடிகர். ஆனால் பின்னவரோ ஒரு சிறிய குழுவினரே போற்றும் கணித மேதை.

             ஐயோ !கணிதமேதையா?

     கணிதத்திற்கும் எமக்கும் காததூரம். அவரைப் பற்றி இங்கே என்ன?என்று பலர் நினைப்பது எனக்கு புரிகிறது.

          கவலைப்படாதீர்கள்.

           கணிதத்தைப் பற்றி நான் இங்கே விவரிக்கப் போவதில்லை.

             Grigori Perelman என்ற அந்த மாமனிதரை பற்றியே பதிய  வந்துள்ளேன்.

            மாமனிதர் என்றால்?

       ஆம்! அவர் தாயுமானவரை போல "உள்ளதே போதும்" என்ற மனப்பக்குவம் கொண்ட ஞானி.

        சேக்கிழார் குறிப்பிடுவதைப் போல "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராக"  வாழ்ந்துகொண்டிருப்பவர்.

            அவரைப் பற்றி புரிந்துகொள்ள சில அடிப்படை (background) தகவல்கள் தேவைப்படுகின்றன.

             கணித உலகில், 7 மிகவும் இன்றியமையாத கணித கோட்பாடுகள் என்பவற்றை தேர்ந்தெடுத்து அவைகளை உண்மை என்றோ அல்லது பொய் என்றோ அறிவியல் பூர்வமாக நிறுவுவர்களுக்கு,ஒவ்வொரு நிரூபணத்திற்கும், 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று, Clay  Mathematics Institute என்று, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு  செயல்பாடுகளை  Oxfordடிலிருந்து  மேற்கொள்ளும் ஒரு புகழ்பெற்ற நிறுவனம், 2000 மாவது ஆண்டு அறிவித்தது.

         அந்த 7 முக்கிய கோட்பாடுகளில், 1904 ஆம் ஆண்டு Henri Poincare  என்ற கணித மேதை தொகுத்த  Poincaré conjecture என்பதும் ஒன்று.

          Poincaré conjecture

 என்பது கணிதத்தில் டோபாலஜி  என்ற பிரிவுடன் தொடர்பு கொண்டது. (அதைப்பற்றி இங்கே நான் விளக்கப் போவதில்லை .ஓரளவு அதைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே ஒரு லிங்கை கொடுத்துள்ளேன் ;விரும்புவோர் அதில் உள்ள காணொளியை பார்க்கவும்)

       இந்த கணித கோட்பாட்டை பலரும் நிரூபித்த தாக பல காலகட்டங்களில் நிரூபித்த  முறையை வெளியிட்டனர். ஆனால் அவைகள் அனைத்தும் வல்லுனர்களால்  தவறானவை என்று நிராகரிக்கப்பட்டன.

         இந்நிலையில்தான் ரஷ்யாவில் 1966 ஆம் ஆண்டு பிறந்த  Grigori Perelman என்ற கணித மேதை,2002ஆம் ஆண்டு இதற்கான ஒரு நிரூபணத்தை,எந்த ஆரவாரமும் இன்றி, அமைதியான வகையில் ஒரு வலைதளத்தில் வெளியிட்டார்.

         இதை அறிந்த பல கணிதத் துறை வல்லுநர்கள் அந்த நிரூபணத்தை ஆராய்ச்சி செய்தனர். அதாவது peer-review  செய்தனர். அவ்வாறு செய்ததன் முடிவில் அவருடைய வழிமுறை சரியானது என்றும் poincare conjecture முறையாக உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அறிவுலகம் ஏற்றுக்கொண்டது.

         இது நடந்தது 2006 ஆம் ஆண்டு. இதற்காக அவரை பாராட்டும் வகையில் கணிதத்துறையில் மிகப்பெரிய விருதான Fields Medal என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவரோ அந்த பட்டத்தை ஏற்காமல் நிராகரித்தார்.

             பின் 2010 ஆம் ஆண்டு, Clay Mathematics Institute, தாங்கள் வெளியிட்ட ஏழு முக்கிய கணிதக் கோட்பாடுகளில்  ஒன்றான Poincare Conjecture என்ற கோட்பாட்டிற்கு தீர்வு கண்டதற்காக   அவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்க முன்வந்தது.

       அதையும் அவர் நிராகரித்து விட்டார்.

           அதற்கு அவர் கூறிய விளக்கம் தான் அவரை எவ்வளவு பெரிய மனிதர் என்று  உலகிற்கு பறைசாற்றியது .


             அவர்" இந்த உலகில் எனக்கு வேண்டியதை எல்லாம் நான் ஏற்கனவே பெற்று இருக்கிறேன். எனவே இந்த பட்டமும் பண முடிப்பும்  எனக்கு தேவையில்லை" என்றார்.

                Grigori Perelman 2003ஆம் ஆண்டே  கணிதத்துறையில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் கைவிட்டார்.

          இனி,கணிதத்தில்  தான் ஆராய்ச்சி செய்யப் போவதில்லை என்று ஒதுங்கியும் விட்டார்.

          அவர் விரும்பியிருந்தால் இந்த உலகில் எந்த மூலையிலும் அவருக்காக எந்த கணித துறையைச் சார்ந்த உயர் பதவியையும்  பெற்றிருக்கலாம் .ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

                 Topology பிரிவைச் சார்ந்த Poincare conjectureரை நிறுவும் முயற்சியில் அவர் பிரபஞ்சம் அளாவிய ஒரு புரிதலை பெற்றுவிட்டார்.


        அவர் 2003 ஆம் ஆண்டில் கணித ஆராய்ச்சியை கைவிட்ட பின்பு அவருக்கு எந்த வேலையும் கிடையாது; வருமானமும் கிடையாது. இருப்பினும் அவர்  எதையும் பொருட்படுத்தாமல் தன் தாயுடன் ஒதுங்கி நின்று ஏதோ ஒரு துறவியைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

               எந்த வருமானமும் இல்லாமல் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் "தனக்கு வேண்டியவை எல்லாம் தன்னிடம் உள்ளது  I have everything I want"என்று ஏன் சொன்னார் என்பதற்கான விளக்கம், அவருடைய இன்னொரு வார்த்தையில்  அமைந்துள்ளது:

       "மனித வாழ்க்கையில்  பிரபஞ்சத்தை புரிந்து கொள்வதே தலையாய பிறவிப்பயன்;அதை நான் அடைந்துவிட்டதாக நினைக்கிறேன் அதனால் எனக்கு தேவையானது எல்லாம் என்னிடம் உள்ளதாகவே உணருகிறேன்" என்பதுதான் அந்த இன்னொரு வார்த்தை. 

             இப்போது கூறுங்கள்:

           இவர் "..வீடும் வேண்டா விறலின்  விளங்"குபவரா? இல்லையா? என்று.


---ஜனார்த்தன்மூரத்தி

சென்னைComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,