15 நாடுகளுக்கு கீரை பிசினஸ்!' - அசத்தும் கோவை `கீரைக்கடை டாட்காம்'

 12 வருட ஐ.டி வேலை; இப்போ 15 நாடுகளுக்கு கீரை பிசினஸ்!' - அசத்தும் கோவை `கீரைக்கடை டாட்காம்'கொரோனா கோரப் பிடியில் சிக்கி பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தக் கொடிய காலகட்டத்தில் இயந்திரமயமாகிப் போன நம் வாழ்க்கைமுறை குறித்து பலரும் பேசி வருகின்றனர். கோவையைச் சேர்ந்த ஒருவர் இயற்கை விவசாயத்தின் ஊடே தொழில்நுட்பத்தைப் புகுத்தி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அமெரிக்காவில் ஐ.டி வேலையில் இருந்த ஶ்ரீராம்பிரசாத், அதற்கு குட்பை சொல்லிவிட்டு கீரை விற்கப் போகிறேன் என்றபோது பலரும் அதை ஏளனமாகத்தான் பார்த்திருப்பார்கள்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் கீரைக்கு ஒரு ஷோரூமை திறந்து ஆன்லைன் மூலமாக விற்கத் தொடங்கி அதில் வெற்றிபெற்று, தற்போது அமெரிக்காவிலேயே ஒரு கிளையைத் தொடங்கிவிட்டார் ஶ்ரீராம்பிரசாத். அவரிடம் பேசினோம். ``என் சொந்த ஊர் மதுரை. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, அமெரிக்காவில் ஐ.டி வேலையில் இருந்தேன்.
12 ஆண்டுகள் ஐ.டி துறையில் இருந்தாலும், எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால், ஐ.டி வேலையை விட்டு ஊருக்கே வந்துவிட்டேன். மதுரையில் ஒருமுறை என் குழந்தைக்கு கீரை வாங்கினேன். அது தரமே இல்லாமல் இருந்தது.
குழந்தைக்குத் தரமான கீரை கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடித்தோட்டம் அமைத்தேன். அதில் நல்ல ஆரோக்கியமான கீரைகள் கிடைத்தன. அதனால் அக்கம் பக்கத்தில் இருந்தும் பலர் எங்களிடம் கீரை வாங்கத் தொடங்கினர். அந்த வரவேற்பில் யோசித்ததுதான் `கீரைக்கடை டாட்காம்'. கோவைக்கு வந்தேன்.
விவசாயிகளின் உதவியோடு மக்களுக்கு நல்ல கீரை கொடுக்கலாம் என்று நினைத்தேன். நல்ல ஆரோக்கியமான கீரைகளை மக்களுக்கு வீட்டிலேயே டெலிவரி செய்ய முடிவெடுத்தோம். இயற்கை விவசாயிகளைத் தேடிப்பிடித்தோம்.
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யும் இந்தமுறைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் கோவை, மதுரையில் மட்டும்தான் எங்களால் கீரை கொடுக்க முடிந்தது. அதன் பிறகு, கர்நாடகா ஆந்திரா எனப் பல்வேறு மாநிலங்களில் இருந்து கீரை கேட்டனர். பின்னர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தனர்.
அதன் பிறகு, அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். வெளிநாடுகளில் நல்ல ஆரோக்கியமான கீரைக்கு வரவேற்பு உள்ளது. இப்போது அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு கீரை அனுப்புகிறோம்.
அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரு கிளை தொடங்கியுள்ளோம். கீரையை அப்படியே அனுப்பினால் அது தாங்காது. அதனால், அதை இயற்கை முறையில் பொடியாக்கி நல்ல முறையில் பேக்கிங் செய்து அனுப்பி வருகிறோம். க்ரீன் டிப் எனப்படும் கீரை சூப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். உப்பு, மிளகு, மஞ்சள் தூள்கள் போன்றவற்றைக் கலந்து சூப் உருவாக்குறோம்.
கிரீன் டீ குடிப்பதைப்போல, இதை டிப் செய்து பருகலாம். 12 வகையான சூப்கள் உள்ளன. அதேபோல கிரீன் மீல்ஸ் என்பதையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். கீரைகளை கூட்டு போல சமைத்து நன்றாக பேக்கிங் செய்து கொடுக்கிறோம்.
தரமான முறையில் பேக்கிங் செய்வதால், இந்த சூப் மற்றும் மீல்ஸ் 18 மாதங்கள் வரை தாங்கும். அதனால் ராணுவத்தில் கூட இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது 70-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளிடம் இருந்து கீரை வாங்குகிறோம். கிட்டத்தட்ட 130 வகை கீரைகளை விற்கிறோம்.
"மக்களுக்கு ஆரோக்கியமான கீரை கொடுக்க வேண்டும் என்ற விஷயத்துக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி, இயற்கை விதிகளை மீறி நாங்கள் எதையும் செய்வதில்லை” என்றார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,