மனிதநேய மாண்பாளர்
மனிதநேய மாண்பாளர்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில் சாப்பிடுவதற்கு கலைவாணர் சீட்டு வாங்கி வைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வருகின்ற பிச்சைக்காரர்கள், குறவர்கள் என்று எல்லாருக்கும் கொடுத்து அந்த ஹோட்டலுக்கு அவர்களைச் சாப்பிட அனுப்புவார். அந்த ஹோட்டல்முதலாளி, ‘என்னங்க! இப்படி எல்லாரையும் அனுப்பறீங்க’ன்னு கேட்டு முகம் சுளிப்பார். அதற்குக் கலைவாணர், ‘ஆமாம், அதுக்குத்தானே நீ ஹோட்டல் வச்சுருக்கே’ என்று பட்டென்று பதிலளிப்பார். கலைவாணரது டிரைவர் 25 வருஷம் தொடர்ந்து விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்காக சென்னை வாணி மகாலில் ஒரு விழா எடுத்தார். அப்போது டிரைவருக்கு 25 பவுனும் பண முடிப்பும் கொடுத்தார் கலைவாணர். தன்னிடம் கைகட்டி வேலைபார்க்கும் டிரைவருக்குப் பாராட்டு விழா நடத்தியது கலைவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைவாணரும், பழைய சோறும்…!
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!” என்று கேட்டார்.
கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், “ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.
“கேட்டீங்களா நடராசன்… எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்… அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி… மதுரமும் அசந்துவிட்டார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments