சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (4)
சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (4) இன்று
உட்லண்ட்ஸ் ஹோட்டல்
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ். இவர் பாரிமுனையில் உள்ள உடுப்பி கிருஷ்ணா என்ற ஹோட்டலில் சர்வராக வேலை செய்து கொண்டிருந்தார்.
இவரது அயராத உழைப்பைப் பார்த்து, ஹோட்டல் முதலாளி இவரிடமே அந்த ஹோட்டலை ஒப்படைத்தார். தனது கடின உழைப்பால் அந்த ஹோட்டலை ஒரு நல்ல உயர்தர சைவ உணவகமாக உருவாக்கினார்.
அதன் பிறகு பெரிய ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்த போது, ராம்நாட் ராஜாவிற்கு சொந்தமான பங்களா ராயப்பேட்டையில் இருந்தது. இந்த பங்களாவில் தான் அரசர் இங்கு வரும் போது குடும்பத்துடன் தங்குவார். அவர் வேறொரு இடம் மாறி போவதால் இந்த இடம் விலைக்கு வருவதாகத் தெரிந்து, தனது நண்பர்களின் பண உதவியுடன் அந்த பங்களாவை வாங்கி உட்லண்ட்ஸ் என்ற பெயரில் ஹோட்டல் ஆரம்பித்தார்.
அந்தக் காலத்தில் இந்த பகுதி முக்கிய மையமாக இருந்தது. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர் இங்கேதான் தங்கியிருந்தார். அப்பொழுது ஒருநாள் வாடகை ஐந்து ரூபாய் மட்டுமே.
இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று சுதந்திரம் பெற்றதை கொண்டாடும் விதமாக ராஜாஜி இந்த ஹோட்டலில் தான் பார்ட்டி கொடுத்தார்.
பிறகு இந்த ஹோட்டல் தன் கிளைகளாக அண்ணா சாலையில் தற்போது ஜெமினி பிரிட்ஜ் அருகே உள்ள செம்மொழிப் பூங்காவில் டிரைவிங் ரெஸ்டாரண்ட்டாகவும், ஆர். கே. சாலையில் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஆகவும் விரிவுபடுத்தப்பட்டது.
( படம் இணையதளத்திலிருந்து)
ராயப்பேட்டையில் உள்ள இந்த ஹோட்டலுக்கு இரண்டு நாட்களாக சென்று புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.
Comments