நட்சத்திரம் பறிப்பவனாய்/கவிதை

 நட்சத்திரம் பறிப்பவனாய்

-- -கவிதை
உன்னை பற்றிய
கனவுகள் இருந்தது
நீயோ வானமாயிருந்தாய்
என் மலர்களை வருடும்
வண்டாயிரேனென்று
நிர்ப்பந்தித்த போதெல்லாம்
நீ கைகளை விரிக்கையில்
கடலலையாய் வெடித்தேன்
வேராயிருந்ததே
நீயென்றறியாமல்;
என் காற்றோர வாசமாய்
வருவாய் என்று காத்திருக்க
பிராண வாயுவாய்
உயிர் கொடுத்திருக்கிறாய்;
கை கோர்த்து நடக்க
விரல்களை தேடும் போது
பாதையாயிருந்து
இலக்குகள் சேர்த்திருந்தாய்;
ஒரேயொரு பாடலை
யாசகம் கேட்டபோது
ஆத்மாவின் இராகமாய்
ஒலித்து நிறைந்தாய்;
இப்படியாய்
தேடியதெதுவுமாய்
இல்லாதிருந்த நீ
என் தேடல் ஓய்ந்து
தொலைந்த பிறகு தான்
ஆழ்கடலின் நீலமென
வண்ணத்து பூச்சியின்
தேகத்து கோலமென
விடிகாலை பறவையென
விழியோர வெளிச்சமென
என் வசந்தமாயிருந்தாயென்று
ஆழ் மனம் தகித்திற்று
இப்போதும் கூட
திரும்பி வருவாயென்றால்
எதுவாய் வேண்டுமென்றாலும்
இருந்து விடேனென்று
சரணடைய கூடும்
துயரமாய் என்றாலும்
தோல்வியாய் என்றாலும்
கூடவே இரேனென்று
பிராணனை அள்ளி
காலடியில் வைக்க கூடும்
என்ன செய்வேன் இப்போது!!!!!
கடிகார முட்கள்
பின்னோக்கி நகராதே

--

-டிலோஜினி மோசேஸ்

(ஜாப்னா /ஸ்ரீலங்கா)

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்