எழுத்து என்பது

 எழுத்து என்பது
 எழுத்து என்பது நேர்மையானதாக இருந்தால் அது நம் உணர்வின் வெளிப்பாடு. உணர்வுகள் அறிதலில் இருந்தும், அறிதல்கள் வாசிப்பு மற்றும் அனுபவங்களில் இருந்தும் பண்படக்கூடும்.

வீட்டைவிட்டு வெளியேறி, ஐந்து வருடங்கள் சகலத்தையும் எதிர்கொண்டு, சம்பாதிக்கத் தொடங்கிய பதினைந்து வயது பையனுக்கும், பெற்றோர் பள்ளிக்கு கொண்டு போய் விட்டு, மறக்காமல் மதியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி, பின் கூட்டிவரும் பதினைந்து வயது பையனுக்கும், வெளியில் என்ன நடக்கின்றது என்ற அளவிலேனும் அறிதல்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்!
என்னுடைய எழுத்து நேர்மையாக இருக்கும் என்றால், என் அனுபவங்கள் அதில் கலப்பது தவிர்க்க முடியாததாகிறது. கற்பனையாய் நூறு காதல்கள், காதல் தோல்விகள் குறித்து எழுதலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த வாசகருக்கு ஒரு நேர்மையான காதல்கதை நெருக்கமானதாகி விடுகிறது. வாசிப்பு அனுபவங்களின் கூட்டல்கள் உங்கள் அனுபவங்களோடு சேர்ந்துவரும் கூட்டுத்தொகை, வாசிக்கும் பழக்கம் இல்லாத எழுத்தாளரை விட எப்போதும் அதிகம்.
அதிகம் வாசித்த ஒரே காரணத்திற்காக நாம் சொல்வது எல்லாம் எப்போதும் சரியாக இருக்க முடியாது. ஒருவேளை பெரும்பாலோருக்கு சரியாக இருந்தாலும் சிலருக்கு அது தவறு என்று தோன்றும் வாய்ப்பு அதிகம். கோணங்கள் மாறுகையில், அனுபவங்கள் மாறுகையில் முடிவுகளும் மாறியே தீரவேண்டும். எழுத்துக்கு வரும் எதிர்மறைக் கருத்துகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களுக்குப் புதிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட விசயத்துக்கு மாற்றுக்கருத்து சொல்பவருக்கு எழுத்தாளரிடத்தில் பிணக்கில்லை, அது ஒரு மாற்றுக்கருத்து, அவ்வளவே.
மாற்றுக்கருத்து என்பது வேறு, மதிப்பீடு அல்லது Character assassination என்பது வேறு.
தனிப்பட்ட விருப்புவெறுப்பில், சுயலாப நோக்கில் எழுதப்படும் எழுத்துகள் எதுவென எல்லோருக்கும் தெரியும். எந்த நோக்கமும் இல்லாது, விதிவழிப்பயணம் என்பது போன்ற மனநிலையில் எழுதப்படும் எழுத்துக்கு, எவரேனும் நோக்கம் கற்பிக்கும் பொழுதுதான் எப்படி எதிர்வினை செய்வது என்பது தான் தெரியவில்லை.


சரவணன் மாணிக்கவாசகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,