150 ஆண்டு பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்க மரம்

 சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டு பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்க மரம்




சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்கமரத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டை திறந்து வைத்தார்.



சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று திறக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.


அப்போது, அங்கு பிரமிப்பூட்டும் வகையில் இருந்த மரத்தை பார்த்த அவர், அந்த மரம் குறித்து டீனிடம் கேட்டார்.

அதற்கு டீன், அந்த மரம் 150 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்கமரம் எனக்கூறி, அந்த மரத்தின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.

மக்களை தேடி மருத்துவ மைய திறப்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பழமையான இந்த மரம் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

கல்வெட்டை திறந்து வைத்தார்

உடனடியாக மு.க.ஸ்டாலின், அந்த மரத்தை பாதுகாத்து ஆவணப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று நடந்த மக்களை தேடி மருத்துவ மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், பழமையான ஆப்பிரிக்க ஆனைப்புளி பெருக்க மரத்தை பார்வையிட்டார். பின்னர், மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.

பழங்கால பொருட்களை ஆவணப்படுத்துதல், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளுதல், அருங்காட்சியகம் அமைத்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பழமையான மரத்தையும் ஆவணப்படுத்தி இருப்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை அளிக்கிறது என்று விழாவில் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டி பேசினார்.

500 ஆண்டு ஆயுட்காலம்

உலகின் பழமையான மர வகைகளில் ஒன்றான இந்த மரம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தது ஆகும். சுமார் 500 ஆண்டுகள் வரை நீண்ட ஆயுட்காலம் கொண்டது.

அரியவகை மரமான இந்த மரம், இந்தியாவில் சில இடங்களில் தான் உள்ளன. இந்த மரத்தின் இலைகள் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்தது. 37 அடி சுற்றளவுடன் 65 அடி உயரம் கொண்ட இந்த மரம் ஆங்கிலேயர்களால் இங்கு நடப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க மருத்துவ குணம் கொண்ட இந்த மரம், ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால் புராதன சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது.
















Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,