டாக்டர் கோவூர்

 டாக்டர் கோவூர்


















ஒல்லியான உருவம், சிறிய தாடி மீசை, கழுத்துப் பட்டி, ஊடுருவும் பார்வை யுள்ள கண்கள், கூரிய நாசி, வளமான குரல், அளவான பேச்சு, ஆழமான அறிவு, அர்த்தமுள்ள விவாதங்கள் சவால்கள், நாத்திக நண் பர்கள் புடைசூழல் - இவற் றிற்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் ஆபிரஹாம் கோவூர்.

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.
கேரளாவில் பிறந்து இலங்கையில் வாழந்து மறைந் தவர். கிறித்துவக் குடும்பத் தில் பிறந்தவர்தான். ஆனால் கடவுள் அருளியது பைபிள் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்து, பிறந்த நாட்டையும் துறந்து இலங்கை சென்று ஆசிரியர் பணியினை ஏற்ற வர். ஆவியுலக மோசடிகள் மனோ விகார ஏமாற்றுகள் இவற்றின் முகத்திரையைக் கிழித்தெறிந்தவர்.

ஆவி, பிசாசு தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.]

அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்


பேய் பிடித்தல் - உள் ளிட்ட நம்பிக்கைகளை அறி வியல் கோல் கொண்டு விளக்கம் தந்து மக்களின் அறியாமையை நேருக்கு நேர் நின்று விரட்டியடித்தவர்.
கடவுள் உண்டு என்று நிரூபிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அறி வித்தவர் - சவால் விட்டவர்! ஆனால் அவர் சவாலை ஏற்றுக் கொள்ள எவரும் முன் வரவில்லை. அந்த அளவுக் குப் பகுத்தறிவு நாத்திகச் சிந்தனைகளில் அறிவியல் அணுகுமுறைகளில் கம்பீர மாக வாழ்ந்து காட்டி 80 வயது வரை வாழ்ந்த மானுடம் மறக்கவொண்ணா மாமேதை.
இரவில் கல் விழுகிறது - திடீர் என்று வீடு தீப்பற்றி எரிகிறது என்று தகவல் வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று, அவற்றின் பின்னணியில் இருந்த ஏமாற்று வேலைகளை, எத்து வேலைகளை, சூழ்ச்சி வலைப் பின்னல்களை அம்பலப் படுத்திக் காட்டியவர்.
பொது மேடைகளில் அந் தரத்தில் மனிதனை மிதக்க வைப்பது போன்ற காட்சி களை அரங்கேற்றி, அதில் உள்ள உளவியலை அறிவி யல் ரீதியாக விளக்கியவர்.


இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.

டாக்டர்.கோவூரின் சவால்கள்:

  • முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
  • ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
  • கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
  • நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
  • மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
  • தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
  • பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
  • யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
  • யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
  • நீரில் நடந்து காட்டுக.
  • உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
  • யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
  • ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
  • நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
  • நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
  • மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
  • பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
  • மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
  • வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
  • ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.

அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.


ஒரு தகவலைச் சொல்லுகிறார் டாக்டர் ஏ.டி. கோவூர். டாக்டர் கோவூரும், குன்னி ராமன் என்ற பணியாளரும் (கேரளாவில்) ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென் றனர். அப்பொழுது அவ்வூர் நம்பூதிரிப் பார்ப்பான் படகில் நின்று கொண்டிருந்தான். நம்பூதிரிக்கோ துடுப்புப் போடத் தெரியாது.
கோவூர் உதவி செய்ய முன்வந்தார். குன்னிராமன் தீண்டத்தகாத ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அந்தப் படகில் ஏறியது நம்பூதிரிப் பார்பப்னருக்குப் பிடிக்கவில்லை. ஆற்றில் ஆழம் கூடத் தெரியாமல் நம்பூதிரி ஆற்றின் குதித்து விட்டான். நீந்தத் தெரியாமல் உயிருக்குப் போராடினான் நம்பூதிரி.
கடைசியில் அந்த ஈழவத் தோழன் தான் ஆற்றில் குதித்து நம்பூதிரியைக் காப்பாற்றினான்.
கண் விழித்துப் பார்த்த நம்பூதிரியைப் பார்த்து ஆத்திரத்தில் ஆற்றில் குதித்து விட்டீர்களே, இப் பொழுது உம்மைக் காப்பாற் றியது அந்த ஈழவச் சகோ தரன் தானே என்று கேட்டார் கோவூர். இதுபோல எத்தனை எத்தனை நிகழ்வுகள் அவர் வாழ்வில் உண்டு. தன் மரணத்துக்குப் பிறகு தன் உடலை கொழும்பு மருத்துவ மனைக்கு ஈந்த அந்த மனித நேய - நாத்திகப் பெருவுள்ளத்தை மரியாதையாக நினைவு கூர்வோம்! இன்று அவரின் நினைவு நாள் (1978) ஆகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,