குடும்பம்_ஒரு_கதம்பம்( 2) / நாத்தனாருக்கு குடுத்த நாக் அவுட்/செல்வி சங்கர்

குடும்பம்_ஒரு_கதம்பம்( 2) /

                                                                                                      -செல்வி சங்கர்

நாத்தனாருக்கு குடுத்த நாக் அவுட்














 என் வீட்டில் வேலை செய்யும் லஷ்மி, வாரத்தில் ஒரு நாள் கூட லீவ் எடுக்காது. ஆனால் வருஷத்துக்கு ஒரு முறை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடைக்கு போய்வர 10 நாட்கள் லீவ் எடுத்துக்கும். அவங்க சொந்த ஊரும் அந்தப்பக்கம் தான்.

இந்த முறை நாத்தனார் பையனுக்கு கல்யாணம் என்று ஒரு வாரம் லீவ் கேட்டு ஊருக்குப் போய் வந்ததில் இருந்து லஷ்மி கொஞ்சம் சுணக்கமாகவே இருந்தது.
குடும்பம் என்றால் நல்லது கெட்டது எல்லாம் தான் இருக்கும் என்று நான் எதுவும் கேட்டுக்கல.
நேற்று சாயந்திரம் வீட்டுக்கு வந்து என் கையில் ஒரு நகைப்பெட்டியை கொடுத்து அக்கா, நீங்க இதை சாமிகிட்ட வச்சு எடுத்து என்னை வாழ்த்திக் குடுங்கக்கா, என்னப் பெத்த தாய் மாதிரி நான் நல்லா இருந்தா நீங்க மட்டும் தாங்க்கா சந்தோஷப்படுவீங்க என்றாள்.
என்ன லஷ்மி திடீர்னு?
அக்கா, உங்க வீடு, கடை இரண்டிலும் வாங்கற சம்பளப்பணம் சேர்த்து வச்சு நாலு பவுன்ல ரெண்டு வளையல் வாங்கினேன்க்கா..என சந்தோஷமாக சொன்னாள்.
எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நகையை அவள் ஆசைப்படியே பூஜையறையில் வைத்து எடுத்து வாழ்த்திக் கொடுத்தேன். உடனே கைகளில் போட்டுக்கொண்டாள். வளையல் உன் கைக்கு ரொம்ப நல்லா இருக்கும்மானு சொல்லிவிட்டு, ஏன் ஊருக்கு போய் வந்ததில் இருந்து முகம் வாட்டமா இருந்தேனு கேட்டேன்.
இவர் கூடப் பிறந்த அக்காங்க நாலு பேர், காசு காசுனு புடுங்கி எடுக்கறாங்க அக்கா.
மாமியாருக்கு மாசம் ரெண்டாயிரம் அனுப்பறோம், அரசாங்க உதவித்தொகை 1000/- வருது. மாமனார் வாட்ச்மேனாக இருந்து ரிடையர் ஆனார், அவர் பென்ஷன் பணம் 5000/-க்கும் மேல வருது. எங்கூர்ல இவ்ளோ பணத்துக்கு செலவில்ல அக்கா. ஆனாலும் இவங்க அக்கா வீட்டில் இருக்காங்க என்பதால் அவங்க கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பிக்கொண்டு இருந்தோம்.
இப்ப நாத்தனார் மகன் கல்யாணத்துக்கு அரைப்பவுன் மோதிரம், புது துணிக்கு 10000/- வச்சுக் குடுத்தோம். அப்படி இருந்தும் திருப்தி இல்லாமல் நீ அம்மைக்கு காசே குடுக்கலனு என் நாத்தனார் திட்டுனாங்க.
அப்ப இவருக்கு கோவம் வந்து மாசா
மாசம் ரெண்டாயிரம் நான் அனுப்பியிருக்கேனேனு சத்தம் போட்டார்.
இல்ல உன் தம்பிதான் மாசாமாசம் பணம் அனுப்பினார்னு சொன்னாங்க.
அப்பதான் எனக்கு விஷயமே தெரியுது, இவர் அவங்கம்மைக்கு நேரடியா பணம் அனுப்பாம தம்பி கிட்ட குடுத்து அனுப்பச் சொல்லி இருக்கார், அவன் தன் கணக்கில் அந்தப் பணத்த அனுப்பி இருக்கான்னு. எதுக்குக்கா இந்த வேலை? எம்புருஷனுக்கு அறிவே இல்லையேக்கா. அவன் கூடப்பிறந்த தம்பி எவ்ளோ உஷாரா இருக்கான், இவன் குடிச்சுப்போட்டு கூறு இல்லாம இருக்கானேக்கா,
அடுத்த மாசம் இன்னொரு அக்கா பொண்ணுக்கு கல்யாணமாம், ஆளுக்கு ஒரு பவுன் போட்டு பட்டுச்சீலைக்கு காசு குடுக்கணும்னு அந்த அக்கா சொல்லி விட்ருக்கு, இவனும் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வாரான்.
இவன் என்னக்கா சம்பாதிக்கிறான்? பொளுதன்னிக்கும் குடிச்சுட்டு கவுந்தடிச்சு படுத்துக்கறான். நான் காலைல நாலு மணிக்கு எந்திச்சா, ரெண்டு அபார்ட்மெண்ட் , ரெண்டு ஹாஸ்டல் வேல முடிச்சு என் வீட்டுல சமைச்சு வச்சுட்டு கஞ்சித்தண்ணி குடிச்சுட்டு நம்ம கடைக்கும் வீட்டுக்கும் வந்து வேலைய முடிச்சுட்டு அடுத்து ரெண்டு வீட்டு வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போக மணி ரெண்டு ஆகிடும்க்கா. அதுக்கும் மேல என் வீட்டு துணி துவைச்சு காயப்போட்டுட்டு கொஞ்ச நேரம் படுப்பேன்.
இவன் கடை கடையா போய் குடிச்சுப்
போட்டு வந்து நான் ஆக்கி வச்சத தின்னுட்டு தூங்குவான்.
அவங்க அக்கா கேக்கறா, ஏன் என் தம்பி சம்பாதிக்கிறான் நான் சீர் கேட்கறேன் உனக்கேன் வலிக்குதுன்னு.
எது உங்க தம்பி சம்பாதிக்கிறாரா? நல்லா சொன்னீங்க போங்க. நான் நாய்மாதிரி பாடுபட்டு உழைச்சு உங்க தம்பிய ராஜா மாதிரி வச்சுக் காப்பாத்துறேன், என் உழைப்பில உக்காந்து தின்னுட்டு குடிச்சுட்டு இருக்கார் உங்க தம்பினு, உங்களுக்கு செய்யற சீர் அம்பூட்டும் என் காசுதான்னு நல்லா கேட்டுட்டு தான்க்கா வந்தேன்.
எம்பொண்ணு முடியாம கெடந்தப்ப ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக் குடுக்க வக்கில்லாம என் காச புடுங்கித்தின்னுட்டு பேச்சப்பாருங்க? இதுல எம்புருசன் பாகுபலி வீட்டுல வேல செஞ்ச காசு வின்யா கஃபே சம்பள காசு வச்சிருக்கேல்ல, எங்க அக்கா பொண்ணுக்கு சீர் செய்ய அதுல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்றான். பீத்தப்பய. யாரு சம்பாதிக்கிற காச யாருக்கு வாரியிறைக்கறது? அதான் நகைக்கடைக்கு போய் எனக்கு வளையல் வாங்கிக்கிட்டேன்.
மூச்சுவாங்க பேசி முடிச்சுட்டு இருக்கா ஒருவாய் தண்ணீர் குடிச்சுட்டு வரேன்னு போனா..
ஏன் லஷ்மி, உன் நாத்தனார் பொண்ணுக்கும் நீ சீர் செய்யத்தானே வேணும்?
கட்டாயம் செய்யணும்க்கா. நான் செய்வேன். ஆனா அது என் வசதிக்குட்பட்டு செய்வேன். அவங்க மூத்த மகளுக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு சீர் செய்தேன். அடுத்த மகளுக்கு அரைப்பவுன் பட்டுப்புடவை சீர் வச்சேன். இப்ப அதிகாரமா ஒரு பவுன் , பட்டுப்புடவைக்கு காசுனு கேக்கறாங்களே, இவங்க என்ன குடுத்தா வச்சிருக்காங்க, இல்ல இவங்க திரும்ப மறு சீர் செய்ய எம்புள்ளதான் உசுரோட இருக்குதா?
போதும்க்கா நான் செஞ்சதெல்லாம். இன்னமே என் வாழ்க்கைய நான் வாழ்ந்துக்கறேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கண்ணுக்கு அழகா நகைய வாங்கிப் போட்டுக்கிட்டேன். இந்த குடிகாரப்பய தன் அக்கா மகளுக்கு சீர் செய்யணும்ன்னா வேலைக்குப் போய் சம்பாதிச்சு செஞ்சுக்கட்டும், எனக்கு பிரச்னையில்ல என்று சொன்ன லஷ்மியை வாயடைச்சுப்
போய் பார்த்துக்கொண்டு இருந்தேன்..
லஷ்மி அதுக்கப்பறம் சொன்னதுதான் ஹைலைட்.!!
அக்கா, எனக்கு இவ்ளோ தைரியமும் தெம்பும் உங்களப்பார்த்துதாங்க்கா வந்துச்சி.
என்னது?
ஆமாங்க்கா. நீங்க சார்கிட்ட, அண்ணனுங்க கிட்ட பேசும்போதெல்லாம் கவனிச்சிருக்கேன், என்னையும் பலமுறை சொல்லி இருக்கீங்க, உனக்கு தேவையானத நீ வாங்கிக்க, நீ கஷ்டப்பட்டு உழைக்கறே எதுக்கு யோசிக்கணும், பயப்படணும்? உன் வீட்டு வேலைய செய்யக் கஷ்டமா இருந்தா உன் புருஷனை கூடமாட உதவி செய்யச் சொல்லுன்னு.
நானும் அன்னிக்கு ஒரு நாள் நாலு போர்வை ஊறவெச்சிருக்கேன் மாமா, தூங்கி எழுந்ததும் வாஷிங் மெஷின்ல போட்டு எடுத்துருனு சொன்னேன். சொன்னது போல துவைச்சுக் காய வச்சுடுச்சி. முன்ன எல்லாம் யோசிப்பேன் ஆம்பளைய இந்த வேலை செய்யச் சொல்றதான்னு. இங்க, சார், அண்ணன்லாம் உங்களுக்கு உதவி செய்றது பார்த்து எதும் தப்பில்லனு புரிஞ்சுகிட்டேங்க்கா.
ஆஹா..நம்மால லஷ்மி ஒருத்திக்கேனும் நன்மை விளைந்தது என்றால் நமக்கும் ரொம்ப சந்தோஷம் தானே!!
ஆனாலும் லஷ்மி அவ நாத்தனாருக்கு குடுத்த நாக் அவுட் நான் குடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான்

-

செல்வி சங்கர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,