ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு.!

 ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு.! இயற்கை வைத்திய முறை.! 💚❤️


ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு, சில உணவுக் கட்டுப்பாடுகளையும் சில இயற்கை வைத்திய முறைகளையும் பின்பற்றினால் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது. வெளுத்த பாலைவிட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்!


இரவு நேரத்தில் மூச்சிரைப்பால் (Wheezing) சிரமப்படுகிறீர்களா? கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும். இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும். இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்துவந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்


இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது. இடையிடையே பால் கலக்காத தேநீர் அருந்தலாம்


மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம்


சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே நேரம், தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம், அய்யோ எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் சேராது ’ என ஒதுக்கத் தொடங்கினால், இழப்பு கூடும்; இழுப்பும் கூடும்.


மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை ஏழரை மணிக்கு முன்னதாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது. இரவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி... கூடவே கூடாது! காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.


தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.


இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது.


ஆஸ்துமா உள்ளவர்களின் மெனு கார்டில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டியவை.சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்


ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் குடிநீரிலிட்டு, அதில் திப்பிலிப் பொடி சேர்த்துக் கொடுக்க, இரைப்பு நீங்கும்.


தூதுவளை கீரையை (கீரையின் மொத்தப் பகுதியான சமூலம்) காயவைத்து தூளாக்கி அரை தேக்கரண்டி அளவு தினம் ஒரு வேளை சாப்பிட சுவாசகாசத்தில் ஏற்படும் சளி தொல்லை நீங்கும்.


இஞ்சி துண்டுகள் சிலவற்றை ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால்சுவாசகாசம் நோய் குறையும்.


ஐந்தாறு வில்வ இலைகளுடன் இரண்டு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இப்படி சில நாட்கள் செய்தால் இரைப்பு மட்டுப்படும்.


நஞ்சறுப்பான் செடியின் நான்கு இலைகளுடன், மூன்று மிளகு சேர்த்து அரைத்து உள்ளுக்குக் கொடுக்க சுவாசகாசத்தால் உண்டாகும் இழுப்பு உடனே நிற்கும்.


அரச மரத்தின் உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுப்பதினாலே சுவாசகாசம் தீரும்.


ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு இவைகள் சேர்ந்த குடிநீரில், அல்லிக்கிழங்கின் பொடியைக் கூட்டிக்கொடுக்க


இரைப்பிருமல் தீரும்.


ஒரு பிடி துளசியைச் சாறு எடுத்து அச்சாற்றை இரண்டு பாலாடை வீதம் மூன்று வேளையும் சாப்பிட முதியவர்களுக்கு ஏற்படும் சுவாசத் தடை இறுகித் தொல்லை தரும் சளி, கபம், கோழை, மெல்லிய நீர் போன்ற சளி ஆகியவை குணமாகும்.


தோலுரித்த வெள்ளைப் பூண்டு நான்கினை எடுத்து பாலில் போட்டு வேகவைத்து, பூண்டை சாப்பிட்டு பாலையும் குடித்துவிட குளிர்காலத்தில் அதுவும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமா தொந்தரவு குறையும்.


வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச்சாறும் தேனும் கலந்து சாப்பிட இரைப்பிருமல் தீரும்.


திப்பிலி, மஞ்சள், காசாலை ஆகியவற்றை சேர்த்து இடித்து தேன் கலந்து காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம் நான்கு நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.


திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை எடுத்து அரைத்து நீர் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி அரை தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து நான்கு நாட்கள் உண்ண சுவாசகாசத்தில் ஏற்படும் சளிக்கட்டு குணமாகும்.


நஞ்சறுப்பான் இலை இரண்டு, மிளகு ஐந்து இவை இரண்டையும் சேர்த்து தினம் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.


ஆடாதோடை இலையின் ரசம் ஒரு பங்கு, தேன் அல்லது இஞ்சிச்சாறு அரைப் பங்கு இரண்டையும் ஒன்று சேர்த்து மெழுகு பதமாய்க் காய்ச்சி, இரண்டு முதல் நான்கு குன்றியளவு, நாள் ஒன்றுக்கு மும்முறை கொடுக்க இரைப்பு, ஈனை, இருமல், இளைப்பு நோய் போன்றவைகள் தணியும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை