மறக்க முடியாத, நெஞ்சில் நிலைத்த பாடல்களை தந்த கவிஞர்
மறக்க முடியாத, நெஞ்சில் நிலைத்த பல பாடல்களை நமக்குத் தந்த கவிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையையும், கவலையையும் தந்தது.
மக்கள் திலகத்தின் புகழ் பெற்ற பல காதல் மற்றும் தத்துவப் பாடல்களை எழுதியவரும், மக்கள் திலகம் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசவைக் கவி என்ற சிறப்புப் பதவியையும் வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் பல பாடல்கள் என்னை ஈர்த்து மனதில் வாழ்கின்றன. மிகச் சிறப்பாக
"இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்" என்று மெல்லிசை மன்னரால் இசையமைக்கப்பட்டு, ஜேசுதாஸ் அண்ணா பாடிய பாடல் இன்றைய நாள் முழுதும் நெஞ்சில் நிழலாடி என்னைக் கலங்க வைத்ததற்குக் காரணம் உண்டு.
இந்தப் பாடல் எனக்கு மட்டுமல்லாது, எங்கள் அப்பா, அம்மா இருவருக்குமே மிகப் பிடித்ததென்பது சிறப்பு. என் இளவயதில் கங்கு கரையின்றிப் பொங்கிப் புரையோடி அனர்த்தங்கள் விளைவித்த, விளைவிக்க முற்பட்ட போதெல்லாம் என்னைக் கடுமையாகக் கண்டித்தும், தண்டித்தும் நல்வழிப்படுத்திய என் அம்மாவை (அடிக்கடி) இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நினைத்து கண்களை ஈரமாக்கும் அற்புத வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன் என்றால் மிகையாகாது. ஒரு தாலாட்டுப் பாடல்தான் என்றாலும் அத்தனை வரிகளும் பட்டை தீட்டிய வைரங்கள்.
சிறப்பாக.......,
"ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறி கண்ட
பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நாடும் நலம் பெறலாம்!"
"பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய
பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை
பேர் சொல்லி வாழ்வதில்லை!"
அம்மா என்னைத் தண்டித்த போது என் உடம்பில் நிலைத்த தழும்புகளைத் தொட்டுப் பார்த்து அவரை நினைத்து அழுகிறேன்.......,
பாடல் வரிகளால் என் வாழ்விலும் அங்கம் வகித்து விட்ட கவிஞர் புலமைப்பித்தன் ஐயாவையும் நினைத்து அழுகிறேன்.
ஐயா, வானுலகில் என் தாயும், தந்தையும் உங்களை வரவேற்பார்கள்.
அங்கிருந்து என்னையும், உங்கள் ரசிகர்களையும் ஆசீர்வதியுங்கள்.
by
Comments