உதயம் / சிறுகதை
உதயம்
---சிறுகதை
முகுந்தன் படுக்கையில் குப்புறப் படுத்திருந்தான். ரமா அவன் அருகில் வந்து அரவணைப்பாக அமர்ந்தாள்.
அவன் தோளை மெதுவாக உலுக்கினாள்.
"முகு"
"முகுந்தா"
"இங்க பாருடா..."
"கம் ஆன் கெட்அப்"
முகுந்தன் சிரத்தையுடன் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.
"என்னடா கோலம் இது??"
"ஹேர் கட் பண்ணாம...? ஷேவ் பண்ணாம??"
அவன் பதில் பேசாமல் தரையை பார்த்துக் கொண்டிருந்தான். ரமா அவன் தலையை கோதினாள். அவன் முன் மண்டியிட்டு
தரையில் அமர்ந்தாள்.
"யூ ஷுட் கம் ஔட் ஆப் திஸ் முகு"
இப்போது அவளை மெதுவாக நிமிர்ந்து பார்த்தான்.
"என் முகுவா இது"?? என்று மனதிற்குள் நொந்து கொண்டாள். பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் அவன்முகம், இப்போது களை இழந்து வாடி இருந்தது. துறுதுறு என்றிருக்கும் அந்த கண்கள் சிவந்து ஜீவன் இழந்திருந்தது.
அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். அவன் முகத்தை தன் பக்கம் திருப்பினாள். முகு அவள் முகத்தை பார்க்க தைரியம் இல்லாதவனாய் சட்டென்று அவள் மடி மீது முகம் புதைத்து உடைந்து அழத்துவங்கினான்.
"எங்க பார்த்தாலும் அவ ஞாபகமாவே இருக்கு பெரியம்மா...I want to die" என்று
தேம்பினான்.
ரமா தவித்து போனாள்.
துக்கம் நெஞ்சை அடைத்தது. எல்லாம் விதி. ரமா பெருமூச்சு விட்டாள்.
"ஓகே...ஓகே..." என்று வாஞ்சையுடன் அவன் முதுகை நீவி விட்டாள்.
"கெட் அப் நௌ... மொதல்ல இந்த வேஷத்த மாத்து. உனக்கு நீ தான்டா தைரியம் சொல்லிக்கனும்" என்று எழச்செய்தாள்.
கவலையும் யோசனையுமாக மாடி ரூமிலிருந்து மெதுவாக கீழே இறங்கினாள்.
எதிர்பபார்ப்போடு ரமாவின் தங்கை சீதா கீழே காத்திருந்தாள். கலக்கமாக ரமாவை பார்த்தாள்.
"பிள்ளை என்ன சொல்றான் ரமாக்கா?"
என்று விசும்பினாள்.
"மொதல்ல அழாத. அவனை தைரியப்படுத்தி சரியாக்கப் பாரு. நான் ப்ரிஸ்க்ரைப் பண்ண டேப்லட்ஸ் ஒழுங்கா கொடுக்குரியா? என்று அதட்டலான தொனியில் கேட்டாள் ரமா.
"கொடுக்கறேன் ரமாக்கா. உன்ன நேர்ல பார்த்தா அவன் தெம்பாவான்னு தான் வரச்சொன்னேன்" என்றாள் கண்களை துடைத்தவாறு.
முகுந்தனுக்கு திருமணமாகி பத்து மாதங்களே ஆகியிருந்தது. காதல் திருமணம். ஊரே வாயை பிளக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. யார் கண் பட்டதோ...அவன் மனைவி விபத்தில் அகால மரணமடைந்தாள். அதன் பின் ஆறு மாதங்கள் ஓடி விட்டது. முகுந்தன் இன்னும் பித்துப் பிடித்தவன் போல் ரூமிலேயே அடைந்திருக்கிறான்.
ரமா பெங்களூரில் பிரபலமான டாக்டர். குழந்தை கிடையாது. தங்கை சீதாவின் மகனான முகுந்தனை தன் சொந்த பிள்ளை போல் வளர்த்தாள். அவன் சென்னையை விட பெங்களூரில் வாழ்ந்தது தான் அதிகம். முகுந்தனின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நிகழும் என்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
"நான் முகுவை திரும்ப கூட்டிட்டு போறேன் சீதா. அப்பத்தான் அடுத்தது என்னனு யோசிக்க முடியும்" என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.
"ஒத்த பிள்ளைனு அவனுக்காக எத்தனை கோவில் போயிருப்பேன்...இப்படி ஆகிடுச்சே...அந்த சாமிக்கு கூட கண் இல்லையே" என்று அரற்றினாள் சீதா.
"அட்...இப்பதான அழாதேன்னு சொன்னேன். போய் சாப்பாட்ட கவனி.
அவன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு.
நைட்டே பெங்களூர் கிளம்பனும்.
காலையில க்ளினிக்ல நிறைய அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு" என்று மொபைலை கையில் எடுத்தாள்.
"என்னங்க...முகு வரான். அவன் ரூமை ரெடி பண்ண சொல்லுங்க" என்று பேசிவிட்டு மொபைலை வைத்தாள். சோபாவிலேயே கொஞ்ச நேரம் படுத்தாள்.
எண்ணங்கள் பின்னோக்கி ஓடின...
மாலையும் கழுத்துமாக முகுவும் ராதிகாவும் நின்ற நாள் நெஞ்சுக்குள் மலர்ந்தது. எல்லாமே மாயை போல் இவ்வளவு விரைவாக முடிந்து விட்டதே என்று வருந்தினாள். அப்படியே உறங்கிப் போனாள்.
இருட்டத்துவங்கியிருந்தது.
முகு ரமாவின் பேச்சை மதித்து மெதுவாக கிளம்பத்துவங்கினான். நேவி புளூ டெனிம் ஷர்ட், கறுப்பு பேண்ட் அணிந்து கொண்டு கண்ணாடி முன் வெறித்தபடி நின்றான்.
இந்த டெனிம் ஷர்ட் உனக்காகவே தைச்ச மாதிரி இருக்கு...எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்க தெரியுமா?...ஐயாம் ஷ்யூர், நிறைய பேர் உன்ன சைட் அடிப்பாங்க இன்னைக்கு" என்று அவன் காதில் ராதிகாவின் குறும்பான குரல் ஒலித்தது.
முகு கண்ணாடியின் மிக அருகில் சென்று நின்றான். மேலிருந்து கீழ் வரை ஒருமுறை தன்னை உற்று பார்த்தான். கன்னங்களை இரு கை கொண்டு மேலிருந்து வருடிவிட்டான். தாடி முள் போல் கையை குத்தியத்து.
மீண்டும் ராதிகாவின் குரல்....
அவள் நினைவலைகள் அவனை துரத்தத் துவங்கின. அவளோடு குறும்பாக விளையாடிய அந்த தருணங்கள்....
"வேனாம் முகு...ப்ளீஸ் வேணாம்"
"ஒரே ஒரு வாட்டி டீ ராதீ" என்று அவளை துரத்துவான்.
அவள் படுக்கையின் மேலேறி இங்கும் அங்குமாக ஓடுவாள். ஒரே எட்டில் அவளை பிடித்து..அரைகுறையாக வளர்ந்த தாடியுடைய அவன் கன்னத்தால் அவள் கன்னங்களை தேய்த்து வெறுப்பேற்றுவான். அவள் சினுங்குவாள். அப்படி அவளை வெறுப்பேற்றுவதில் அவனுக்கு அலாதி பிரியம்....ஆனால் இப்போது எல்லாம் முடிந்து விட்டது.
ட்ரஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த தனது வாட்சை உற்று நோக்கினான்.
"ஹேய்..missing you on your Bday
mugu...
ட்ரெஸ்ஸிங்டேபிள திறந்து
பாரேன்....உனக்கு ஒரு கிஃப்ட் வெச்சுருக்கேன்..."
மீண்டும் அவள் குரல்.
வாட்சை அவசர அவசரமாக கையில் எடுத்து ட்ராவில் போட்டு அறைந்து
சாற்றினான். தலையே வெடித்துவிடும் போலிருந்தது.
கீழே இறங்க எத்தனித்தான்.
"ஹேய், சன்க்ளாஸ் மறந்துட்ட பாரு..."
அவள் குரலே தான்...
அப்படியே சில நொடிகள் நின்றான்.
"கார் சாவியும் ஞயாபக படுத்தனுமா"?
" நான் இல்லைனா நீ என்ன தான் செய்வியோ?"
இப்போது "நோ...." என்று தன் காதுகளை மூடிக்கொண்டு உரக்கக் கத்தினான்.
ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த அனைத்தையும் எடுத்து எறிந்தான்.
சத்தம் கேட்டு உறங்கி கொண்டிருந்த ரமா திடுக்கிட்டு மாடி ரூமிற்கு ஓடினாள். சீதாவும் பின் தொடர்ந்தாள். சைகையில் அவளை நிற்க சொல்லிவிட்டு தான் மட்டும் மேலே ஓடினாள். முகு தன் கையை பலம் கொண்ட மட்டும் சுவற்றில் குத்தி கொண்டிருந்தான்.
"போடி என்ன விட்டு போ..பிஸிக்கலா என்ன விட்டுப் போய்ட்டு கூடவே இருந்து என்னை ஏன் டார்ச்சர். பண்ற?...போ..போ...போடி..." என்று இன்னும் மூர்க்கமாக சுவற்றில் குத்தினான்.
முகு...முகு...ஸ்டாப் இட்..
நிறுத்து...டா....."
வீடே ரமாவின் குரலால் ஒரு நொடி அதிர்ந்து நிசப்தமானது.
முகு செய்வதறியாது தலையைப் பிடித்த வண்ணம் நின்றான்.
"மொதல்ல இந்த ரூமை விட்டு கீழ இறங்கு" என்று தரதரவென அவனை இழுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
சோபாவில் உட்காரச் செய்தாள்.
"இந்தா..ஹாவ் சம் வாட்டர்...கமான், குடி" என்று அதட்டினாள். அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து அருகில் அமர்ந்தாள்.
"இங்க பாரு முகு.... நாம நெனைக்குறது மட்டுமே நடக்கனும்கறது வாழ்க்கை இல்லை. அதை மொதல்ல புரிஞ்சுக்கோ. இப்படி நடந்திருக்க கூடாது. ஆனா நடந்துருச்சு. அதையே யோசிக்கறதுனால எதையும் மாத்த முடியாது'.
"முதல்ல எனக்கு ஏன் இப்பிடின்னு யோசிக்கறத நிறுத்து. தானாவே ஏமாற்றங்கள் மறைஞ்சுடும்".
"இன்னைக்குவரைக்கும் எங்களுக்கு ஒரு குழந்தை இல்லை. உன்னை என் புள்ளையா நெனச்சு நான் சந்தோஷமா வாழலையா? சில நிகழ்வுக்கு காலம் தான் பதில் சொல்லனும்....
நாமதான் அதுவரைக்கும் பொறுமையா காத்திருக்கனும்.
உன் வாழ்க்கை போச்சுனு நீ நினைக்கலாம்....ஆனா...நீ தான் சந்தோஷம்ன்னு நினைக்குறவங்களுக்காக நீ வாழ்ந்து தான் ஆகனும். உன் உயிர் உனக்கு துச்சமா இருக்கலாம். அதுவே இன்னொருத்தங்களுக்கு வரமா மாறும்.
"லைஃப் இஸ் அ மிரக்கிள். மேக் இட் மீனிங்க் ஃபுல்"
அவ்ளோ தான் சொல்வேன்" என்றாள் தீர்மானமாக.
சாப்பிட்டுவிட்டு எட்டு மணி போல் கிளம்பினார்கள்.
"நானே ட்ரைவ் பண்றேன் முகு. நீ என் பக்கத்துல உட்காரு" என்றாள்.
காரினுள் இருவரும் எதுவும் பேசவில்லை. ரமா வேகமாக லாவகமாக காரை ஓட்டினாள். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்...
"பெரியம்மா..."
"நான் ட்ரைவ் பண்றேன்...நீங்க ரெஸ்ட் எடுங்க என்றான்.
"ஜாக்கிரதை முகு..."என்று இடம் மாறி அமர்ந்தாள்.
முகு ஓட்டத்துவங்கினான்...அவனுக்கு ட்ரைவிங் மிகவும் பிடித்த விஷயம்...கார்ஹைவேயில் யில் சீறிப் பாய்ந்தது. அப்போது தான் அதை கவனித்தான்...இடதுபுற ஓரமாக ஒரு கார் இண்டிகேட்டர் போட்டவாறு நின்று கொண்டிருந்தது. அதை கடந்தவன்...ஏதோ தோணியவாறு வேகத்தை குறைத்தான். தன் காரை ஓரங்கட்டினான். அந்த இடம் சற்று இருட்டாக இருந்தது.
"வாட் ஹாப்பன் முகு? ஏன் நிறுத்திட்ட?"
என்றாள் ரமா சற்று கலவரத்துடன்.
வெய்ட் பெரியம்மா" என்று வேகமாக
காரை விட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாக நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்றான். அவனை தாண்டி பல கார்கள் பறந்தன...ஆனால் ரோட்டோரம் அனாதையாக நின்ற இந்த காரை கவனிக்க யாருக்கும் பொறுமை இல்லை.
மெதுவாக அந்த காரினுள் எட்டி பார்த்தான்...இவன் வயதையொத்த ஒரு இளைஞன் ஏடாகூடமாக நிலைதடுமாரியது போல் காரின் சீட்டில் சரிந்து கிடந்தான். நெற்றியில் பலத்த இரத்தக்காயம்.
அதற்குள் ரமா வந்துவிட்டாள்.
"என்னாச்சு முகு?"
"ஆக்ஸிடண்ட் போலருக்கு பெரியம்மா..."
கார் கதவை திறக்க முயன்றான்...முடியவில்லை. உதவிக்காக ஓடும் கார்களின் முன்பு கையை அசைத்து உதவி கேட்டான். அந்த இருள் நேரத்தில்
"ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணு முகு" என்றாள்.
வெய்ட்...அடி பலமா தெரியுது...ஆம்புலன்ஸ் வர வரைக்கும் தாங்காது என்றாள். ஒரு டாக்டராக காயத்தின் ஆழத்தை அவளாள் உணர முடிந்தது.
முகு மீண்டும் அவர்கள் வந்த காரை நோக்கி ஓடினான். டிக்கியை திறந்து எதை எதையோ எடுத்து வந்தான். சிறிய போராட்டத்திற்குப்பின் அந்த கார் கதவைத்திறந்து விட்டான். அந்த இளைஞனை பத்திரமாக தூக்கி வந்து தன் காரின் பின் சீட்டில் கிடத்தினான். அதற்குள் ரமா அவளுக்கு தெரிந்த மருத்துவமனைக்கு கால் செய்து அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாள்.
முகு அந்த இளைஞனின் சட்டை பாக்கெட்டை துளாவினான். ஏதோ
மின்னல் வேகத்தில் ரமா சொன்ன மருத்துவமனை நோக்கி கார் பறந்தது. அவன் மனம் முழுவதும் அந்த இளைஞனை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் மேலோங்கியிருந்தது. சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து அவசர சிகிச்சை துவக்கப்பட்டது.
முகு தன்னை ஆஸ்வாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தான். அந்த இளைஞனின் மொபைலை எடுத்தான். நல்ல வேலையாக லாக் எதுவும் இல்லை. அதில் "mom" என்று ஸ்டோர் செய்திருந்த நம்பரை டயல் செய்தான்.விவரம் சொன்னான். அவன் வீட்டார் வந்து சேர விடியற்காலையானது. முகு அமர்ந்தவாரே உறங்கியிருந்தான். ரமாவை இரவே வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.
யாரோ முகுவின் தோளை மெதுவாக தொட்டு உலுக்கினார்கள். தூக்க கலக்கத்துடன் கண் விழித்தான். அவன் எதிரே நாற்பது வயதையொத்த ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். முகு எழுந்து நின்றான்.
அந்த பெண் அவன் இரு கரங்களை பிடித்து தன் கைக்குள் வைத்து தன் கண்களில் ஒற்றி கண்ணீர் வடித்தார். குலுங்கி குலுங்கி அழுதார். அவரை சுற்றி அவருடைய சில உறவினர்கள் போலும். முகத்தில் கவலையுடன் காணப்பட்டனர்.
"என் புள்ளைக்கு அடுத்தவாரம் கல்யாணம் பா...சாமி மாதிரி வந்து அவன காப்பாத்தி கொடுத்துட்ட..அவன் உயிர காப்பாத்தத்தான்...நான் கும்பிடுற கருமாரி இந்த உலகத்துல உன்ன படைச்சுருக்கா போல...நீ எங்க வீட்டு குல தெய்வம்பா"
என்று தழுதழுத்தார். முகுவிற்கு வார்த்தையே வரவில்லை.
"கவலைபடாதீங்கம்மா" என்று கூறிவிட்டு விருட்டென்று திரும்பி பார்க்காமல் நடந்தான்.
//லைஃப் இஸ் மிரக்கிள் ...மேக் இட் மீனிங்க்ஃபுல்//
என்ற ரமாவின் அறிவுரைக்கான அர்த்தம் முகுவிற்கு இப்போது விளங்கியது.
விடியற் காலையின் மெல்லிய காற்று முகத்தில் அறைந்தது. புது நம்பிக்கை பிறந்தது போல் உணர்ந்தான்.
வெகு நாட்களுக்கு பிறகு அவன் மனம்லேசானது போலிருந்தது.
மொபைலை எடுத்தான்...
"கார் அனுப்புங்க பெரியம்மா..."
" ஆர் யூ ஓகே முகு?"
"யெஸ் ... பெர்ஃபெக்ட்லி ஓக்கே.." என்று புன்னகைத்தான்.
------ஆனந்தி முத்துக்குமரன்
Comments