நீங்க நக்கீரராக நடிக்காவிட்டால் படப்பிடிப்புக்கு வர மாட்டேன்” – சிவாஜி

 நீங்க நக்கீரராக நடிக்காவிட்டால் படப்பிடிப்புக்கு வர மாட்டேன்” – சிவாஜி





‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டாராம்.
அதற்குப் பதில் அளித்த நாகராஜன் “நீங்கள் இந்தப் படத்தில் நடித்த பின் நீங்கள் தான் சிவன் என்று மக்கள் நிச்சயம் சொல்வார்கள். அப்படிச் சொல்லலைன்னா நான் திரைப்படத்துக்குக் கதை எழுதுறதையும், திரைப்படம் எடுக்கிறதையும் விட்டு விடுகிறேன்” என்றாராம்.
திருவிளையாடல் படத்தில் நக்கீரராக நடிகர் எஸ்வி.ரெங்காராவ் அவர்களை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் ஏ.பி.என் முதலில் நினைத்தாராம்.
அவர் ஒரு சிறந்த நடிகர் தான் என்றாலும், அந்தப் பாத்திரத்தில் நன்கு தமிழ் பேசி நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்ததால் அதனைக் கைவிட்டாராம்.
அடுத்து நக்கீரராக நடிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தாராம். அதில் ஒரு விஷயம். கவியரசர் நன்றாகத் தமிழ் பேசுவார். ஆனால் அதில் ஒரு கம்பீரம் இருக்காது என்று அந்த முடிவையும் கைவிட்டாராம்.
இறுதியில் சிவாஜி நாடக மன்றத்தைச் சேர்ந்த நடிகர் தங்கராஜ் என்பவரையே நடிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. திருவிளையாடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது. மறுநாள் நக்கீரரும், சிவபெருமானும் நடிக்க வேண்டிய காட்சி படம் பிடிக்கப்பட வேண்டும். அதற்கு முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் ஏ.பி.என் அவர்களை அழைத்து “அண்ணே… நக்கீரராக நீங்களே நடிச்சிருங்க… அதுதான் நல்லா இருக்கும்” என்றாராம்.
அதற்கு இயக்குநர் நாகராஜன் “நான் நடிப்பதை விட்டு ரொம்ப நாளாச்சு. இப்பப் போய் நடிக்க வேண்டுமா?” என்றாராம். அத்துடன் அதில் நடிப்பதற்கு தங்கராஜ் அவர்களை முடிவு பண்ணியாச்சே… அவரே நடிக்கட்டுமே…” என்றாராம்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி அதற்குச் சம்மதிக்க வில்லை. “நீங்கள் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும்” என்றாராம். அப்போதும் நடிப்பதற்கு நாகராஜன் தயங்கினாராம்.
படப்பிடிப்பு முடிந்து சிவாஜி அவர்கள் வீட்டுக்குப் போவதற்கு அவருடைய சீருந்தில் ஏறிவிட்டாராம். ஏறியவுடன் நாகராஜனைப் பார்த்து “அண்ணே.. நாளைக்கு நீங்க நக்கீரராக நடிப்பதாக இருந்தால் தான் நான் சிவனாக நடிப்பேன். இல்லாவிட்டால் நான் நாளை படப்பிடிப்புக்கு வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாராம்.
அதன்பின் ஏ.பி.நாகராஜன் அவர்களே நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு தானே நக்கீரராக நடிப்பது என்று முடிவு எடுத்தாராம்.
நன்றி: தாய்

courtesy:கந்தசாமி .ஆர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி