புலமையின் தலைமையே போய் வா! *
புலமையின் தலைமையே
போய் வா!
(புலவர் புலமைப்பித்தன் அஞ்சலி)
*
புலவரே
போய் வாருங்கள்.
பொன்மனச் செம்மலின் தோழரே
போய் வாருங்கள்.
கனத்த மனத்தோடு விடைதருகிறோம்
போய் வாருங்கள்.
கண்ணீர்ச் சரத்தோடு
விடைதருகிறோம்
போய் வாருங்கள்.
*
நீங்கள் எழுதிய பாடல்கள்
செல்லுலாய்டில் செதுக்கிய கல்வெட்டு.
சொற்களுக்கு வண்ணம் தீட்டிய தூரிகை
உங்கள் எழுதுகோல்.
*
எழுத்துக்களை
எண்ணி எண்ணி வைக்கும் போதே
கற்பனையையும்
எண்ணி எண்ணிச் செதுக்கும்
கலையில் உங்களுக்கு நிகர் நீங்களே.
இசையில் உருகியோர் உலகினில் உண்டு
இசையே உருகியது உங்கள் கற்பனைகளில் அல்லவா?
*
பள்ளி கொண்டுவிட்ட பாவலரே
உங்களுக்குப்
பாடல்களைப் பள்ளிக்கூடமாக்கவும் தெரியும்
பள்ளியறை ஆக்கவும் தெரியும் .
*
நீங்கள் விடைபெற்ற
இந்த இரவில்
எம் அறைகளில்
இசை மழை பொழிகிறது
எங்கள் ஜீவனைக் கண்ணீர் நனைக்கிறது.
*
புலமையின் தலைமையே
தலைமை போற்றிய புலமையே
வயோதிகம் வழியனுப்பலாம் உங்களை
ஆனால் உங்கள் பாடல்களில் விளையாடும் வாலிபத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்.
*
மேலவைப் பதவி வகுத்தவரே
தமிழின் சந்தங்கள் எல்லாம்
அப்பதவியில் உங்களை
எப்போதும் வைத்திருக்கும்.
அது நிரந்தரமானது
அந்த அவை என்றைக்கும்
காலாவதி ஆகாது.
காற்றிருக்கும் வரைக்கும்
உங்கள் பாட்டிருக்கும்
அது வளிமண்டலத்தை விட்டுப் போகாது.
*
பிருந்தா சாரதி
*
Comments