தி.மு.க.வின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்த கோ.சி.மணி

 தி.மு.க.வின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்த கோ.சி.மணி .ஊராட்சி


மன்றத்தின் தலைவராக, ஓர் அதிகாரப்பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தி.மு.க காரர் .அரசியல் களமும் மக்களும் பெருமளவு மாறிக்கிடக்கிற இன்றைய கட்டத்தில், கோ.சி.மணியின் அரசியல் வாழ்வில் இளைஞர்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது.

குத்தாலத்திற்குப் பக்கத்தில் மேக்கிரிமங்கலம் எனும் கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்து, ஒருங் கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தவர். கோவிந்தசாமி சிவசுப்ரமணியன் என்ற இவரது பெயரை கோ.சி.மணி ஆக்கியவர் அறிஞர் அண்ணா. சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரிக்க பின்னர் அதுவே நிலைத்துப் போனது.
கட்சி, அரசியல், சாதி, மதம் எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான பணியே மக்களை நேசித்த கோ.சி.மணி. விவசாயம், கூட்டுறவு போன்ற துறைகளின் அமைச்சராக அவர் பணியாற்றி இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சராக அவர் செயல்பட்ட காலம் தமிழக உள்ளாட்சித்துறையின் பொற்காலம். எல்லாவற்றிலும் மக்களை முன் நிறுத்தியே சிந்தித்தவர். அதிகாரிகள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டாமல், தன் அனுபவ அறிவைக் கொண்டு பிரச்சினை களுக்குத் தீர்வு கண்ட அரசியல்வாதி. அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே கூட திணறி நின்ற சம்பவங்கள் நிறைய உண்டு. பள்ளிப்படிப்பைத் தாண்டா விட்டாலும் சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்தோடு பேசுகிற அமைச்சர்களில் முக்கியமானவர். அந்தளவுக்கு விவசாயம், கூட்டுறவு, உள்ளாட்சித் துறைகளின் விவரங்கள் அவரது விரல் நுனியில் இருக்கும்.
அதிகாலை 5 மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர்,சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி,ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, “கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
எல்லாவற்றையும் விட ‘நவீன கும்பகோணம்’ நகரின் சிற்பி,அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும். சொந்தக்கட்சியினர் உட்பட ஏராளமானோரின் எதிர்ப்புகளையும் மீறி, அந்தப் புகழ் பெற்ற புனித நகரத்தை மீட்டுருவாக்கம் செய்தவர் கோ.சி.மணி. அதன் மூலம் எல்லாத் தரப்பு மக்களின் அன்பையும் பெற்றவர். காவிரி டெல்டா பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவரது இடத்தைப் பிடிக்க எத்தனையோபேர்முயன்றிருக்கிறார்கள்.
‘மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி’ என்ற ‘ஒரு வார’ இதழின் வார்த்தைகள் நிதர்சனமானவை. அவரைப்போல அசாத்திய ஆளுமைத்திறனும், அஞ்சாத நெஞ்சமும் கொண்டவரை நெற்களஞ்சிய பூமி இனி எப்போது பெறுமோ?
மயிலாடுதுறைக்கான எங்களது ‘மாயூர யுத்தத்தில்’ கோ.சி.மணியைப் போல ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என ஏக்கத்தோடு எழுதியிருந்தேன். மயிலாடுதுறைக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கோ.சி.மணியைப் போன்றவர்கள் கிடைத்துவிட்டால் எப்படியிருக்கும்?
கே. எஸ். ராதாகிருஷ்ணன்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,