நன்மாறன்:

நன்மாறன்: 'எளிமை எம்எல்ஏ' காலமானார் - இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நன்மாறன்
மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நன்மாறன், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது வயது 72.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன். கடந்த 27ஆம் தேதி இரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்துவிட்டார்.
எளிமையின் அடையாளமாக மதுரை வீதிகளில் வலம் வந்த நன்மாறனின் மறைவு, மதுரை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
`உத்தப்புரம் தீண்டாமை சுவர் பற்றி சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சுக்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகளே அடுத்தகட்ட நகர்வுக்கு அடிப்படையாக அமைந்தது' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சுவாமிநாதன்.
"என்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்
கடந்த 2001, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் சி.பி.எம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு நன்மாறன் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவராகவும் மிக நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும் பெற்றவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் பாடுபட்டவர். `மேடைக் கலைவாணர்' என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டு வந்த நன்மாறன், மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைத்தவர்.
இறுதிக்காலம் வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த நன்மாறன், அண்மையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த தகவலும் வெளியானது. `இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்கூட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்தே இருக்கும்' என்கின்றனர், மதுரை சி.பி.எம் கட்சியின் நிர்வாகிகள்.
"எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு , மக்கள் நேசம் ஆகிய பண்புகளை `நன்மாறன்' என்ற ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். அவரது இயற்பெயர் ராமலிங்கமாக இருந்தாலும் மக்களும் மதுரையும் இயக்கமும் தந்த பெயர்தான் நன்மாறன்" என்கிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சுவாமிநாதன்.
தொடர்ந்து நன்மாறன் உடனான தனது பயணம் குறித்துப் பேசும் சுவாமிநாதன், ``அவரும் நானும் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் குமுளியில் அரசு பேருந்து ஏறியபோது அவரது சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை பார்த்த நடத்துநர், அதனை நம்பாமல் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே இருந்தார்.
`இந்த காலத்தில் எந்த எம்.எல்.ஏ பஸ்ஸில் வருகிறார் சார்' எனக் கூறிவிட்டு பெரிய கும்பிடு போட்டு நகர்ந்தார். ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிற்கு அருகில்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது குடியிருந்தார்.
ஒரே ஒரு அறை, அதன் ஓரம் சீலை மறைக்கப்பட்டு சமையலறையாக இருக்கும். அங்கு கட்டில் ஒன்று ஓரத்தில் கிடக்கும். தவம் என்பது துறவிகளுக்கான வார்த்தை என்றாலும் எந்த துறவிகள் இப்படி இருக்கிறார்கள்? உலகமயம், நுகர்வியம், பணபல அரசியல் ஆகியவற்றுக்கு மத்தியில் இப்படி வாழ்ந்ததைவிட பெரிய தவம் என்ன இருக்க முடியும்?" என்கிறார்.
நன்மாறன்
"எல்லிஸ் நகர் கட்சி அலுவலகத்தில் கூட்டங்கள் முடிந்தவுடன் யாராவது ஒரு தோழரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பார். கட்சி கொடுத்த டி.வி.எஸ் 50 வாகனத்திலேயே மதுரை மாநகரின் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் அவர் வலம் வந்தார். எல்லோருக்கும் நல்லவராக அவர் இருந்தார். ஆனாலும் அரசியல் எதிரிகளின் வன்முறைக்கு ஆளானதும் உண்டு. மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளின் சொற்பொழிவுகளில் அவர் அமர்ந்திருப்பார். மதுரை தெருக்களின் வரலாற்றை சுவையாகச் சொல்வார்.
அவர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் அங்கப் பிரதட்சணம் செய்ய பாதையமைத்துக் கொடுத்தார். கம்யூனிஸ்டுகள் கடவுள் வழிபாட்டை ஊக்குவிக்கலாமா? என்ற விமர்சனம் வந்தபோது, `உருள்பவர் எங்கள் உழைப்பாளி தோழர் அல்லவா? கல்லும் மண்ணும் குத்தாமல் உருளட்டுமே' என நெகிழவைத்தார். வறட்டுத்தனம் என்பதே அவரிடம் கிடையாது. ஆனால் தத்துவ விசாரங்களில் சமரசம் செய்ய மாட்டார். மக்கள் பிரச்சினைகளில் முன் நிற்பார்" என்கிறார் சுவாமிநாதன்.
தொடர்ந்து, உத்தப்புரம் தீண்டாமை சுவர் விவகாரத்தில் நன்மாறனின் முன்னெடுப்பு குறித்து பேசிய சுவாமிநாதன், `` 2008 ஆம் ஆண்டு, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பற்றி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டி சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசினார். "என்ன நன்மாறன், பெர்லின் சுவர் மாதிரி சொல்றீங்க?" என கருணாநிதி காட்டிய உடனடி எதிர்வினைதான், அடுத்தடுத்த நகர்வுகளின் தொடக்கமாக அமைந்தது.
"மேடைக் கலைவாணர்" என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர். மேல மாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் எத்தனையோ முறை அவரின் குரல் மக்களை ஈர்த்திருக்கிறது. குன்றக்குடி பெரிய அடிகளார், தமிழருவி மணியன், மாயாண்டி பாரதி, விடுதலை விரும்பி என பெரும் ஆளுமைகள் மத்தியில் ஒரே மேடையில் பேச நன்மாறன் எழுந்தால் கூட்டம் ஆரவாரிக்கும். பட்டிமன்றத்தின் போக்கை அவர் பேச்சு மாற்றிவிடும். இரவு 2 மணியைக் கடந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் உட்கார்ந்திருப்பார்கள்.
நன்மாறனின் பயணம் நீண்டது, நெடியது. வாலிபர் சங்க தலைவராக, இலக்கிய உரை வீச்சாளராக, மார்க்சிஸ்ட் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக பன்முகப் பரிமாணத்தில் சிறந்த பங்களிப்பை நல்கியவர். அவர் மதுரையின் அடையாளமாகவும் கம்யூனிச பண்புகளின் அடையாளமாகவும் அரசியல் விழுமியங்களின் அடையாளமாகவும் இருந்தவர்" என நெகிழ்ந்தார்.
 BBC News, தமிழ்


news courtesy

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,