நெடுங்காலம் கொண்டாடுவோம் நெடுமுடியை...
நெடுங்காலம் கொண்டாடுவோம்
நெடுமுடியை...
*
நெஞ்சில் நிறைந்த கலைஞன்
நெடுமுடி வேணு
மண்ணில் இருந்து மறைந்து விட்டார்.
ஆனால் நம்
மனதில் இருந்து ஒருபோதும்
மறைய மாட்டார் .
மனித உணர்வுகளின் உயிர் வடிவம்
இலக்கியம் என்றால்
அதன் மெய் வடிவம்
நடிப்புக் கலை.
உயிரும் மெய்யும் சேர்ந்தால்
அது நாடகம்.
அந்த உயிர்மெய்க் கலையின்
உன்னதக் கலைஞன் நெடுமுடி.
மெய் பேசும் மெய்
அவரது உடல்.
உலகத் தரமான
உயர்ந்த நடிப்பு
அவருடையது.
'தேன்மாவின் கொம்பத்து'
என்றொரு படம்...
அன்பு, நட்பு
காதல், மோதல்
விரோதம், குரோதம்
சில்மிஷம், பெருமிதம்
காழ்ப்புணர்ச்சி, கழிவிரக்கம்
என எத்தனை பாவம்
அந்த முகத்தில்?
நீரின் தண்மை
தழலின் வெம்மை
நிழலின் குளிர்ச்சி
மலரின் மலர்ச்சி
என அன்றாடம் நம் மனம் உணரும் உணர்வுகளுக்கு
திரையில் ஓவியமாய்
உருவம் கொடுக்கிறான்
கலைஞன்.
அதில்
துல்லியமும்
நுட்பமும் அறிந்தவன்
மகா கலைஞன்.
அதில் ஒருவர்
நெடுமுடி வேணு.
மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை
மழை நீரைச் சேகரிப்பதைப் போல்
சேகரிக்கிறது
திரைக் கலை.
அதில்
கணிசமான பங்கைத் தந்த
காத்திரக் கலைஞன்
நெடுமுடி வேணு.
பரதத்தை...
பெருந்தச்சனை...
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை...
நெடுமுடியை மறந்துவிட்டு
நினைக்க முடியுமா?
கலையால் வாழத் தொடங்கி
கலைக்கு வாழ்வைக் கொடுத்து
கலையாகவே வாழ்வை மாற்றும்
கலையை அறிந்தவன் கலைஞன்.
காலன் அவனை
இறக்க வைத்தாலும்
காலம் அவனை
இறக்கி வைப்பதில்லை.
அது தலையில் வைத்துக் கொண்டாடும்.
மலையளவு பங்களிப்பு அளித்த மகாகலைஞன் நெடுமுடியை
நெடுங்காலம் கொண்டாடுவோம் நாம்.
*
பிருந்தா சாரதி
*
Comments