கவிஞர் பிறைசூடன்

 












முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள கவிஞர் பிறைசூடன் காலமானார்.

இளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை உங்களில் பலரும் அறிந்திருக்கமாட்டீர்கள்
பிறைசூடன் தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர், ஜோதிடர், ஆன்மீக பற்றாளர் என்று பல்வேறு பணிகளிலும் திறமை பெற்றவர். பின்னாளில் நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தற்போது நடித்து முடித்த‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.
அப்பா காவல்துறையில் பணியாற்றியதால் இவரது படிப்பு தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருச்சி என இடம் மாறியபடி வலம் வந்தது. இயல்பாகவே கைவரப்பெற்ற பேச்சாற்றலும் கவியாற்றலும் நண்பர்கள் வட்டத்தில் நன்மதிப்பை அமைத்துக் கொடுத்தது. வாழ்வியல் ஆதாரம் தேடி சென்னைக்கு வந்தவர், கோடம்பாக்கத்தில் ஒரு தேநீர்க்கடையில் நண்பர்களுடன் கவிதையை அருந்திக்கொண்டிருந்தபோது அருகிருந்து கேட்டிருக்கிறார் ‘மக்கள் குரல்’ பத்திரிகையாளர் ராம்ஜி. அவரது வேண்டுகோளின்படி ‘இனிமை’ என்ற தலைப்பில் சுடச்சுட ஒரு கவிதை புனைந்து தந்திருக்கிறார் பிறைசூடன். அதிசயித்து அசந்துபோன ராம்ஜி, இவரை ஆட்டோவில் அள்ளிக்கொண்டுபோய் எம்.எஸ்.விஸ்வநாதன் முன் நிறுத்தியிருக்கிறார்.
அப்போது ஆர்.சி.சக்தி இயக்கத்தில் மோகன் நடராஜன் தயாரிப்பில் ‘சிறை’ படம் உருவாக்கத்தில் இருந்தது. அன்றைய தினம் மோகனுக்கு பிறந்த நாள். ‘என்னைப்பற்றி ஏதாவது பாடுங்கள் பார்ப்போம்’ என்று நம்பிக்கையற்ற வார்த்தைகளால் கேட்டிருக்கிறார் மோகன். ‘முத்துப்புன்னகை ராஜாவே... மோகனப் புன்னகை ரோஜாவே...’ என்று ஆரம்பித்து அத்தனைபேரையும் அசர வைத்திருக்கிறார் பிறைசூடன்.
‘எவ்வளவு வேகமாக பாட்டெழுதுவீர்கள்?’ என்று எம்.எஸ்.வி கேட்டதற்கு, ‘உங்கள் ட்யூனைவிட வேகமாக எழுதுவேன்’ என்று சொல்லி, முதல் சந்திப்பிலேயே எம்.எஸ்.வியின் வெறுப்பை வரவு வைத்துக்கொண்டார். முதல் பாடல் ‘ராசாத்தி ரோசாப்பூ...’ ஜெமினி ஒலிப்பதிவுக்கூடத்தில் ஏசுதாஸ்- வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கத் துவங்கியதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கிறது. ‘கண்டவன் எல்லாம் பாட்டெழுத வந்தா இப்படித்தான் ஆகும்’ என்று கண்டவர்களும் பேசியிருக்கிறார்கள். பின்னர் அந்தப்பாடல் ஒலிப்பதிவாகி, இவருக்கு வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து சந்திரபோஸ் இசையில் ‘செல்வாக்கு’ படத்துக்கு பாட்டெழுதினார். இளையராஜா இசையில் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ படத்துக்கு இவர் எழுத, லதா மங்கேஷ்கர் குரலில் பாட்டு பதிவானது. படம் வெளிவரவில்லை. பின்னர் இளையராஜா இசையில் ‘எங்க ஊரு காவக் காரன்’ படத்தில் எழுதிய ‘சிறுவாணி தண்ணி குடிச்சு...’ பாடல் இவரது பெயரை அடையாளம் காட்டியது.
ஒரு முறை நம் கட்டிங் கண்ணையா கவிஞர் பிறைசூடனை நேர்காணல் செய்த போது சொன்னது இது : ‘இலக்கிய சேவை, கலைச் சேவை பண்ணணும்ங்கிறதெல்லாம் கிடையாது. வாழ்வதற்குப் பணம் தேவை. அந்தப் பணம் கிடைக்க என்ன வழினு தேர்வு பண்ணியதுதான் பாடல்கள் எழுதுவது. என்னுடைய ஒரினில நேம் சந்திரசேகர், அம்மா பெயர் தனம், அதனால `தனசேகர்’ங்கிற பெயரில் எழுதினேன். அப்புறம் அப்பா பெயர் ராஜூவுடன் சேர்த்து `ராஜசேகர்’ங்கிற பெயர்ல எழுத ஆரம்பிச்சேன். கடைசியில கவிஞர் சேகர், கவிஞர் சந்துருங்கிற பெயர்ல பாடல்கள் எழுதினேன். எதுவும் வொர்க்அவுட் ஆகலை.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தாசனந்த சுவாமிகள்ங்கிறவரை சந்திச்சேன். அவர்தான் எனக்கு `பிறைசூடன்’-னு பெயர் வெச்சார். அந்தப் பெயரையும் நான் உடனே ஏத்துக்கலை. ஆல் இந்தியா ரேடியோவுல அந்தச் சமயத்துல ஒரு தலைப்புல பாட்டெழுதக் கேட்டாங்க. நான் ஆறுவிதமான பாடல்களை எழுதி ஆறு பெயர்களில் அனுப்பினேன். அதில் அவர்கள் தேர்வுசெய்தது `பிறைசூடன்’ என்ற பெயரில் எழுதிய பாடலைத்தான்.
`சரி, இனி பிறைசூடன்ங்கிற பெயரிலேயே எழுதுவோம்’னு முடிவு பண்ணினேன். அப்புறம் சுவாமிகிட்டே வந்து சொன்னேன். `சினிமாவுல பாட்டெழுத வாய்ப்பு வரும். இரண்டெழுத்துப் படத்துக்கு எழுதுவே. 501 ரூபாய் காசு கொடுப்பாங்க. அதுக்கப்புறம் 5 வருஷம் நாயா பேயா அலைவே. அப்புறம்தான் உனக்கு நல்ல நேரம் வரும். பிரபலமாவே’னு சொன்னார். அதே மாதிரி நடந்தது. நான் முதன்முதலாகப் பாடல் எழுதிய படம் `சிறை.’ அதற்குக் கிடைத்த பணம் 500 ரூபாய் செக். அப்புறம் அதன் தயாரிப்பாளர் நடராஜனைச் சந்தித்து நன்றி கூறினேன். அந்தப் படத்தின் சக தயாரிப்பாளர் மோகன் செக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, `என்னய்யா 500 ரூபாய் மொட்டையா இருக்கு. வளரட்டும்யா'னு சொல்லி ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
தாசானந்த சுவாமிகள் சொன்னது சொன்னபடி நடந்தது. அதன் பிறகு 36 படங்களுக்கு பாடல்கள் எழுதினேன். எந்தப் பணமும் கைக்கு வந்து சேரவில்லை. அதன் பிறகு `பிறைசூடன்’ங்கிற பேர்ல சினிமாவுல 2,000 பாடல்களும், தனிப் பாடல்களாக 7,000 பாடல்களும் எழுதியிருக்கேன். கிட்டத்தட்ட 10,000 பாடல்கள் எழுதும் நிலைக்கு வந்திருக்கேன்’ அப்ப்டீன்னார்
தொடர்ந்து 80களில் இசைக்கொடி நாட்டி ஆண்டுகொண்டிருந்த இளையராஜா இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான். இதற்கடுத்த ஆண்டில் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
“புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோனும்//மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கனும் மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு// உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊரறிய மாலை கட்டிப்போடு//சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்த பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் உள்ள ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணம்தான் கசக்கும்//” என்பது போன்ற வரிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் திருமண ஜோடிகளின் மனப்பொருத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பார்.
அதுவே அந்தப் பாடல் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் அனைவராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதே ஆண்டில் இயக்குநர் வசந்தின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல் அதன் இளமைத் துள்ளலான இசையமைப்புக்காக மட்டுமல்லாமல் பாடல்வரிகளுக்காகவும் ரசிக்கவைப்பது.
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் அவர் எழுதியதே.
அதே ஆண்டில் ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் சேர்ந்து பிறைசூடனின் வரிகளும் காதல் தோல்வியின் தீரா வலியை கேட்பவர் அனைவரையும் உணர வைத்தது. ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என அந்த ஆண்டில் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்களின் பட்டியல் நீள்கிறது
’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.
அந்தப் படத்தின் நாயகன் தன்னை தூக்கி வளர்த்த தந்தைவழிப் பாட்டியின் கோபத்தை போக்கும் வகையில் பாடும் ‘நடந்தால் இரண்டடி’ என்னும் பாடல் கதைச் சூழல் பொருத்தமும் பொருட்செறிவும் நிறைந்த வரிகளைக் கொண்டு ரசிகர்களை ஈர்த்தது.
பல இசையமைப்பாளர்களுடனான பயணம்
1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் நாயக அறிமுகப் பாடலும் ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.
தேவா இசையில் ‘தாயகம்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அந்தப் படத்தின் பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறை வென்றார்.
தேவா இசையமைத்த ‘குரோதம் 2’, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களான ’சத்ரிய தர்மம்’ போன்ற படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் மட்டுமல்லாமல் வசனங்களையும் எழுதினார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் வேகநடை கொண்ட காதல் பாடலை எழுதினார்.
தமிழ்த் திரையிசை உலகின் சகாப்தங்களான எம்.எஸ்.வி. இளையராஜா, ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய அரிதான பெருமையைப் பெற்றவர்களில் ஒருவர் பிறைசூடன்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி