பானுமதி

 சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரிக்க விரும்பி, முதலில் அவர் தேடிச் சென்ற கதாநாயகி பத்மினி. அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.


தேவர், நாயகி கிடைக்காத அவஸ்தையை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
‘அண்ணே ஹீரோயின் விஷயமெல்லாம் பெரிய பிரச்னையா. பத்மினி கிடைக்கலேன்னா பானுமதியை நடிக்கவெப்போம்’ என்றார் எம்.ஜி.ஆர்., அலட்சியமாக.
‘பானுமதியா…!’ தேவர் வாயைப் பிளந்தார். பானுமதி அப்போது நடித்து வந்தது, மிகப்பெரிய ஸ்டூடியோ அதிபர்களின் படங்களில். சினிமாவில், அடியாள்களில் ஒருவராக ஆஜராகி, ஓரளவு தெரிந்த முகமாக வளர்ந்துகொண்டிருந்தார் தேவர்.
எம்.ஜி.ஆரை நம்பி, சொந்தத் தயாரிப்பிலும் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.
‘அந்த அம்மா ஒத்துக்குவாங்களா…? நானும் புதுசு. டைரக்ட் பண்ணப்போற என் தம்பிக்கும் முதல் படம்’ – தேவரின் குரல், அவரையும் அறியாமல் நடுங்கியது.
‘நான் இருக்கேன் இல்ல. நானே அவங்ககிட்ட பேசி கால்ஷீட் வாங்கித் தரேன். போதுமா…!’ சொன்னதோடு இல்லாமல், தேவரை அழைத்துச் சென்று பானுமதியிடமும் அறிமுகம் செய்தார்.
‘இவர் என்னோட உயிர் நண்பர். என்னை ஹீரோவா போட்டு புதுப்படம் எடுக்கப்போறாரு. நீங்க ஜோடியா நடிக்கணும்னு கேட்க வந்திருக்காரு’.
‘அதுக்கென்ன ஆக்ட் பண்ணாப் போச்சு. சந்தோஷமா போங்க. மலைக்கள்ளன் மாதிரி உங்க படமும் சக்சஸ் ஆகும்’.
பானுமதியின் நாக்கு பலித்தது. தேவருக்கும் நல்ல நேரம் வாய்த்தது!
1955 ஜூலை 7-ல், தேவர் பிலிம்ஸின் முதல் கதாநாயகியாக பானுமதி நடிக்க, ‘தாய்க்குப் பின் தாரம்’, வாஹினியில் தொடங்கியது. 1956 செப்டம்பர் 21-ல் வெளியானது.
‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா…’ டி.எம்.சவுந்தரராஜன் – பானுமதி குரல்களிலும், ‘அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ‘என் காதல் இன்பம் இதுதானா…?’ பானுமதி தனித்துப் பாடியும் சூப்பர் ஹிட் ஆயின. இன்றுவரையில், அனைத்து வானொலிகளிலும் ஒலிக்கிறது.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளில் அது மிக அதிக லாபத்தை ஈட்டியது. முதல் முயற்சியிலேயே சுளையாக முப்பதாயிரம் லாபம் வந்ததாக தேவரே பெரும் பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
தாய்க்குப் பின் தாரம் வெளியான அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது, ரம்பையின் காதல்.
தென்னாட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர், இமேஜ் பார்க்காமல் ‘டணால்’ தங்கவேலுவுடனும் நடித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைப்போல ‘ரம்பையின் காதல்’ பல மறுவெளியீடுகளை வெற்றிகரமாகச் சந்தித்தது. அதைத்தவிர, ‘சமரசம் உலாவும் இடம்’ என கம்பீரமாக சீர்காழியின் பாடல், வான் அலைகளில் இன்றும் மிதக்கிறது.
மெகா கூட்டணி என்பார்கள். தமிழ் சினிமாவில், நிஜமாகவே அண்ணாதுரை, என்.எஸ். கிருஷ்ணன், மு.கருணாநிதி, வி.சி. கணேசன், பானுமதி என்று ஜாம்பவான்கள் ஐவர் இடம் பெற்ற ஒரே படம், ரங்கோன் ராதா.
‘தி.மு.க.விலிருந்து நம்மை பிரிந்த கணேசன்தான், எனது இந்தக் கதையில் நடிக்க வேண்டும்’ என்று அண்ணா வலியுறுத்திக் கூறினார்.
மேகலா பிக்சர்ஸ் சார்பில், கலைஞர் திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்த படம்.
திருப்புமுனையை ஏற்படுத்தும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் முதலும் கடைசியுமாக கலைவாணர். அன்றைய இளம் ஹீரோ எஸ்.எஸ். ராஜேந்திரனின் அம்மாவாக பானுமதி நடித்தார்.
1956 நவம்பர் முதல் தேதி, தீபாவளியன்று ரங்கோன் ராதா வெளியானது.
மைத்துனி தங்கம் (எம்.என். ராஜம்) மேல் காதல் வயப்பட்டு, அவளையும் சொத்துக்காக மணந்துகொள்ளும், சீமான் ‘கோட்டையூர் தர்மலிங்க முதலியாராக’ சிவாஜி கணேசன்!
மிக மாறுபட்ட உடல்மொழி, கூரிய பார்வை, கத்தி போன்ற கருணாநிதியின் உரையாடல்களை நடிகர் திலகத்தின் உதடுகள் உச்சரித்த பாங்கு, ஓங்கிய குரலில் சத்தம் போடாமல், மெல்லப் பேசியே சதி வலை விரிக்கும் கள்ளத்தனம்… அவை எதுவுமே, அதற்கு முன்போ பின்போ சிவாஜி படைத்தது கிடையாது. அப்படியோர் அமுத மழையான நடிப்பை அவரது வேறு எந்த சினிமாவிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
நெருப்பைக் கக்கும் கணவரின் சுடு சொற்களைப் பொறுத்துக்கொண்டு வாழும் மகா பத்தினியாக, புருஷனால் பைத்தியம், பேய் பிடித்தவள் என ஊராரிடம் அடையாளம் காட்டப்படும் பரிதாபத்துக்குரிய ரங்கம்மாளாக பானுமதியின் அழுகையும் ஆர்ப்பாட்டமும், ஹிட்லரையும் கண்ணீர் விடச் செய்யும்!
‘ரங்கோன் ராதாவில் நான்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும். பானுமதியால் மட்டுமே ரங்கம்மாளாகச் சிறப்பாக நடிக்க முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லி என்னையே நடிக்கவைத்தார் அண்ணா. என் நடிப்பில் அந்த அளவுக்கு அண்ணாவுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் உண்டு. நான் நடித்த பல படங்களைப் பார்த்துப் பாராட்டி இருக்கிறார். ரங்கோன் ராதா படப்பிடிப்பு நடந்த சமயம். நான் நடிக்கும் நேரத்தில், தினந்தோறும் அண்ணா செட்டுக்கு வருவார். அண்ணா எனக்கு அளித்த தனி கவுரவம் அது!’ – பானுமதி.
அரசியல் காரணமாக, ரங்கோன் ராதாவை வி.சி.கணேசன் தவிர்த்திருந்தால், தமிழ் சினிமாவின் நடிப்புக் களஞ்சியத்தில் சில வைரக்கற்கள் காணாமல் போயிருக்கும்.
‘பானுமதியா… சிவாஜியா… நடிப்புப் போட்டியில் யார் ஜெயிப்பார்கள்…?’ என அனைத்து ரசிகர்களையும் வாய் பிளக்கவைத்தது ரங்கோன் ராதா. இறுதியில், இருவருமே வென்றார்கள்.
சிவாஜியும் பானுமதியும், 1956-ம் ஆண்டின் மிகச் சிறந்த கலைஞர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை சினிமா ரசிகர் சங்கம் அதற்காக நடத்திய விழா மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. பானுமதியால், வேலைப் பளு காரணமாக நேரில் வந்து விருது பெற முடியவில்லை.
நடிகர் திலகமே பானுமதிக்கான பரிசையும் மாலையையும் பெற்றுக்கொண்டு, நேரே வாஹினி ஸ்டுடியோவுக்கு பறந்தார். அங்கு நடித்துக்கொண்டிருந்த பானுமதியிடம் அவற்றைக் கொடுத்து மனமாரப் பாராட்டினார். வேறு யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்திருக்கும் பானுமதியைத் தவிர!
பானுமதியை நடிப்பின் இமயமாக, இதயத்தில் வி.சி. கணேசன் பதியம் போட்டு வைத்ததன் பலன், நமக்கு ரங்கோன் ராதா கிடைத்தது.
ரங்கோன் ராதாவில் பானுமதியோடு நடித்ததை கணேசன் தன் சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார்.
‘கேஸ் லைட்’ என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் ரங்கோன் ராதா. அதில் நல்லவன்போல் நடிக்கும் ஒரு தீயவன் பாத்திரம். வில்லனாகவும் நடிக்க வேண்டும்; மக்களிடம் இருக்கும் நல்ல பேர் போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, மிகவும் கவனமாக நடிக்க வேண்டிய வேடம்.
கள்வனின் காதலி, ரங்கோன் ராதா இந்த இரண்டு படங்களிலும் விசேஷம் என்னவென்றால், நான் ஒரு பெரிய நடிகையுடன் நடித்தேன் என்பதுதான். பானுமதி போன்ற பெரிய நடிகையின் நடிப்புக்கு ஈடு கொடுக்க வேண்டும். நமது நடிப்புத் திறமையால்தான் அதைக் காட்ட வேண்டும். பானுமதி அம்மா மிகத் திறமைவாய்ந்த நடிகை. அவர்களுக்கு இணையே கிடையாது எனலாம்.
அறிஞர் அண்ணாவே நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அவர்களைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர்களுடன் நடிக்கும்போது, எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் மிகச் சின்னப் பையன். பானுமதி அவர்களுடன் நடித்தேன் என்பதில் எனக்குப் பெருமை!’
நன்றி: தினமணி. காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,