பாரதிராஜா பற்றி எழுத்தாளர் சுஜாதா

 பாரதிராஜா பற்றி எழுத்தாளர் சுஜாதா


பாரதிராஜா அவர்களுடன் என் நட்பு சினிமாவின் நிலயாமைகளுக்கு அப்பாற்பட்டது. அவருடைய ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது மைசூரில் அவருடன் பேசிக்கொண்டிருந்த நீண்ட இரவுகளின் ஞாபகங்கள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. அப்போது பாரதிராஜா தன் பால்ய காலங்களைப் பற்றிப் பேசினார். கிராமத்துப் பின்னணியில் வசதி சலுகைகள் எதுவும் இல்லாமல் எப்போதாவது கிடைக்கும் நெல்லுச் சோறுக்கு ஏங்கிக்கொண்டிருந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர். அத்தனை வாய்ப்பின்மைகளையும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்னும் இரு ஆயுதங்களால் வெற்றி கொண்டு இன்று தேசிய அளவில் பேசப்படும் இயக்குனராக வந்திருக்கும் இந்த மனிதரின் சொந்தக் கதையில் மூன்று நாவல்களுக்கு உரிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இவைகளை எங்கள் நட்புக்கு மரியாதையாக நான் பயன்படுத்த மாட்டேன்.
வெற்றி-தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதே சினிமாத் தொழில் தரும் பெரிய அனுபவப் பாடம். பாரதிராஜாவின் படங்கள் அனைத்தும் சினிமாக் கலையைப் பொறுத்தவரை வெற்றிகளே. அவைகள் வியாபார வெற்றியும் பெறும்போது பயன்களை அனுபவிப்பவர்களில் நண்பர்களும் தயாரிப்பாளர்களுமே அதிகம். பாரதிராஜாவுக்கு பளபளப்பான கோப்பைகளும் கேடயங்களும்
தலைமுடி மேல் ரோஜா இதழ்களும்
சட்டம் போட்டு மாட்ட சான்றிதழ்களும் இயக்குனர் இமயம் போன்ற பட்டங்களும் பொன்னாடை என்ற பெயரில் உலவும் பட்டும் சரிகையும் பவானி பெட்ஷீட்டுக்களும் துண்டுகளும்தான் அதிகம்.
எடுத்த படங்கள் எதற்கும் இவர், ‘அடடா இப்படிப்போய் எடுத்துவிட்டோமே’ என்று வெட்கப்படவேண்டியதில்லை. இதுவே இவருடைய தலையாய சாதனை. விதவிதமான கருத்துக்களை கலை நுணுக்கங்களை காட்சிகளை டெக்னிக்குகளை அவர் முயற்சி செய்திருப்பதை அவர் படங்களை முழுமையாக மறுபரிசீலிக்கும்போது தெரியும். மதங்களைக் கடந்த காதல் கதையோ, அரசியல்வாதியிடம் கண்மூடித்தனமான பக்தி கொண்டு கயவனுக்கு ரத்தம் சிந்தும் அடிமட்டத் தொண்டன் கதையோ, சரியாக வளர்க்கப்படாமல் மனம் முறிந்து தொடர்கொலைகள் செய்யும் நகர்ப்புறத்து நாகரீக இளைஞர் கதையோ யோசித்துப் பார்த்தால் அவர் எல்லா கதை வகைகளையும் முயன்றிருக்கிறார். எதற்கும் பயப்படவில்லை. அவர் இதுவரை முயற்சி செய்யாதது ஒன்றுதான். ஒரு நல்ல தமிழ் நாவலைத் திரைப்படமாக்குவது.
வாழ்வில் தக்க சமயத்தில் துணிச்சலான தீர்மானங்கள் எடுத்து இறுதியில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டவர் பாரதிராஜா. இன்றும் கோடம்பாக்கதிற்குத் தினம் தென் மாநிலங்களிலிருந்து பேருந்துகளிலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்சிலும் வந்து இறங்கி மான்ஷன்களை நாடிச் செல்லும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய முன்னோடி. அவர்களுக்குத் தெரியாத விஷயம் பாரதிராஜா போன்ற வெற்றிக்கதை பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது என்பதே. இன்றைய பாரதிராஜாவால் கூடத் தன் கடந்த கால வெற்றிப்பயணத்தை மீண்டும் தொடர முடியவில்லை. காரணம் கோடம்பாக்கம் மாறிவிட்டது. புது ஒப்பனைகள் அணிந்துகொண்டு தொலைக் காட்சியின் போட்டிக்கும், ரசிகர்களின் ஆதரவுத் தட்டுப்பாட்டிற்கும் ஈடுகொடுக்கப் புதிய தந்திரங்கள் கற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் ஓரங்கட்டப்பட்டது சோகமே.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,