கவிஞர் நா.முத்துக்குமாரின் அமெரிக்காவும்

2014ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு விழாவுக்கு அழைப்பதற்காக நண்பர் ஷங்கர் கவிஞர் நா.முத்துக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டார். உடனடியாக ஒத்துக் கொண்டவர், எனக்கு முதுகு வலி உண்டு. அதற்கு ஏற்றவாறு பயண ஏற்பாடு செய்யுங்கள் என்று மட்டும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.கடைசி நேர சில குளறுபடியால், அந்த விழாவுக்கு அவர் வரவில்லை. ஆனால் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். நாமும் சேர்ந்து செய்த ஏற்பாடுகள் சரியாக அமையவில்லையே என்ற வருத்தத்துடன், அழைத்து மன்னிப்பு கேட்டேன்.
மனிதர் பதறிவிட்டார். அதெல்லாம் ஒன்னுமில்லே. இதெல்லாம் சாதாரணம். வேறு ஒரு விழாவுக்கு வந்தாப் போச்சு என்றார். நான் விடவில்லை. இப்போதே ஒரு நாள் மட்டுமாவது டல்லாஸ் வாருங்கள். உங்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்கிறோம் என்றேன். குடும்பத்தோடு வந்திருக்கிறேன். வீட்டம்மாவுக்கும் பையனுக்கும்தான் நேரம்ன்னு வாக்கு கொடுத்து இருக்கேன்.
என்னுடைய நெருங்கிய நண்பனுக்கு (இயக்குநர் விஜய்) சென்னையில் திருமணம். பயணத்தையும் தள்ளிப் போட முடியாது. குறிப்பிட தேதியில் போக வேண்டிய நிலை. இன்னொரு வாய்ப்பு வரும். நேரில் சந்திப்போம் என்றார். அவர் தீர்க்க தரிசிதான்.
2016ல் பொங்கல் விழாவுக்காக, டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அழைக்க விரும்பி, தொடர்பு கொண்டோம். அவருடைய மகள் பிறந்த நேரம். மீண்டும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்று வருத்தம் தெரிவித்தார்.
ஏப்ரலில் சித்திரைத் திருவிழாவுக்காகவும், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காகவும் வாருங்கள் என்று அழைத்த போது, பாடல்கள் பதிவுக்காக இரவு பகலாக ஓடிக்கொண்டு இருந்தார். தமிழ் இருக்கை என்கிறீர்கள். அதனால் ஒப்புக்கொள்கிறேன் என்று நண்பர் ஷங்கரிடம் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
விமான நிலையத்தில் வந்து இறங்கியவர் சற்று சோர்வாக காணப்பட்டார். பின்னர் தனியாக காரில் வரும் போது முதலாவதாக அவர் சொன்னதே “கிளம்பும் போதே உடம்பு சரியில்லை. மனைவி போக வேண்டாமே என்று கேட்டுப் பார்த்தார். தமிழுக்கு என்று அழைத்துள்ளார்கள் அதனால் போய் வருகிறேன் என்றேன். ஓரிரு வாரங்களாக இரவு பகல் வேலை. இன்றைக்கும் நாளைக்கும் ஓரளவு தூங்கிவிட்டால் சரியாகிவிடும்,” என்பதுதான். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். யாரிடமும் சொல்லி களேபரப்படுத்தி விடாதீர்கள் என்று வேண்டுகோளும் வைத்தார். அவர் உத்தரவுப்படியே, நண்பர் மகேஷ் வீட்டில் தங்கியிருந்த போது கூட நானாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டார்கள்.
தங்கை சித்ராவிடம், விரும்பிய ரசம் சோறு கேட்டு சாப்பிட்டார். சொன்னதுபோல் நிகழ்ச்சி அன்று களைப்பு நீங்கி உற்சாகமாகி விட்டார். அடுத்த நாள் டெட்ராய்ட் பயணம். அங்கே மிஷிகன் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி. நண்பர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கிய பிறகு மீண்டும் டல்லாஸ்.
ஆஸ்டின், டெக்சாஸ் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களுடன் நேரடி சந்திப்பு. டாக்டர் ராதாகிருஷ்ணன் சங்கரன் ஏற்பாடு செய்திருந்தார். முந்தைய நாள் இரவு, ‘காலையில் சீக்கிரமாக போகணும். இங்கேயே தங்கிக் கொள்ளுங்களேன்’ என்றார். இல்லை, வீட்டுக்குப் போயிட்டு காலையிலே வந்துடுறேனே.
காலையிலே மனிதர் தயாராகி உற்சாகமாக காணப்பட்டார். ‘பல்கலைக் கழகம் போகிறோம். ப்ளேசர் போட்டுக்கட்டுமா?’ என்று கொஞ்சம் யோசித்தார். ‘எப்போதும் போடுற சட்டையே போதும். நம்ம அடையாளம் அதானே’ என்று முடிவு செய்து கொண்டார்.
காரில் மூன்றரை மணி நேரப் பயணம். வழியில் ஸ்டார்பக்ஸில் காபியும் சிற்றுண்டியும். அவரிடம் புதிய உற்சாகம் தெரிந்தது. பல்கலைக் கழக மாணவர்களைக் காண அத்தனை ஆர்வம் .. மாணவர்களும் அவருடைய பிரபலமான பாடல்களைப் பாடி வரவேற்பு கொடுக்கவும், இன்னும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தமிழ் மொழி, திரைப் பாடல்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதை, ஹைக்கூ என அசராமல் பேசிக்கொண்டே இருந்தார். மாணவர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார். டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வு.
“பாபநாசம் சிவன் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?”
“இல்லையே..”
“கூகுளில் தேடுங்கள்…” கிடைத்தது. கேட்க ஆரம்பித்தார். எடுத்து வந்திருந்த பாரதியார், வேல ராமமூர்த்தி புத்தகங்கள் படித்தார். ஒரே நாளில் அவ்வளவு நீண்ட கார் பயணம் வேண்டாமே என்று அங்கேயே தங்கினோம்.
மாலையில் சான் அண்டோனியோ ரிவர் வாக் சென்றோம். ஆற்றங்கரையோர அழகை ரசித்தவர். கடைகள், படகு சவாரி என அனைத்தையும் ரசித்தார்.
அருமையான
் சூழல் என்றவரிடம், “அடுத்த கம்போசிங் இங்கே வந்து விடுங்களேன்” என்றேன். சிரித்துக் கொண்டார்..
டல்லாஸ் திரும்பும் போது, டெக்சாஸ் ஊர்ப்பக்கம் கொஞ்சம் போலாமே என்றார். ஹைவே யை விட்டு, மாற்று சாலையில் வந்தோம். எனக்கும் அந்த வழி புதிதுதான். டெக்சாஸின் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் சாலைகள், அணைகள், சிற்றூர்கள், மாட்டுப் பண்ணைகள். எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு வந்தார்.
ஸ்டாக்யார்டில் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும், குதிரையில் வந்து சுருக்குக் கயிறு மாட்டிப் பிடிக்கும் ‘ரோடியோ ஷோ’ வை, அவரால் பாதி கூடப் பார்க்க முடியவில்லை. “கன்னுக்குட்டிக்கு சுருக்குக் கயிறு வீசிப் பிடிக்கிறாங்க.. இதை இன்னும் பாக்க முடியாது. கெளம்புங்க” என்று வெளியேறிவிட்டார்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகடமி விழாவில், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக மீண்டும் ஒரு உரையாற்றினார். அது தான் அவருடைய கடைசி உரையாக இருக்கும் என்று காலனுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக உருக்கமான வேண்டுகோள் விடுத்தவர் அத்தோடு விட்டு விட வில்லை. வீட்டிற்கு வந்ததும் நிதி திரட்டுவது குறித்து விவாதித்தார். நண்பர் முருகானந்தனிடம் உரிமையோடு உத்தரவிட்டு, ஒரு திட்டத்தையும் விவரித்தார்.
கவிஞரின் அன்புக்கட்டளையால் உந்தப்பட்ட முருகானந்தனும், டல்லாஸில் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து அரை மில்லியன் டாலர் என மிகப்பெரும் நிதியைத் திரட்ட முன்னின்றி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் சென்னை திரும்பும் நாள் வந்தது. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், “டெக்சாஸ் யுனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் பிரம்மிப்பூட்டி விட்டார்கள், அங்கு மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்,” என்றார்.
முந்தைய நாள்தான், நன்றி சொல்ல அழைத்திருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், “மாணவர்களுக்கு முத்துக்குமாரை மிகவும் பிடித்து விட்டது. இன்னொரு முறை அவரை பல்கலைக் கழகத்தின் சார்பில் சிறப்பு விரிவுரையாளராக அழைக்கலாம். பின்னர் விரிவாக பேசுவோம்,” என்று சொல்லியிருந்தார்.
கவிஞரே மீண்டும் அங்கு வருவதற்கு விருப்பப்பட்டதால், பேராசிரியர் சொன்ன தகவலைச் சொல்லிவிட்டேன். முன்னால் பார்த்துக் கொண்டிருந்தவர் என்பக்கம் சட்டென்று திரும்பிப் பார்த்தார், “நிச்சயம் வருகிறேன் தினகர். பேராசிரியரிடம் பேசலாம். அந்த வளாகமே புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் அனைவரின் அன்புப் பிடியில், டெக்சாஸ் எனக்குப் பிடித்த இடமாகிவிட்டது,” என்று சற்று உணர்ச்சிவசப்பட்டார்..
மீண்டும் வருகிறேன் என வாக்குக் கொடுத்தார்.. அதைக் காப்பாற்றாமல் போய்விட்டாரே என்ற வருத்தம் காலமெல்லாம் எனக்கிருக்கும்!
– இர தினகர்
நன்றி: தமிழ் நியூஸ்.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,