பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்

 பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்





😢
மனித இனம் தனது மூளையை பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலே பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 18 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் சுமார் 470 கோடி பேர் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட பேரிடர்களிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. 2011-இல் அணு விபத்து, பூகம்பம், சுனாமி என முப்பேரிடர்களை ஜப்பான் எதிர்கொண்டது. பேரிடர்களை எதிர்கொள்வதும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும்தான் இன்றைய உலகம் எதிர்கொண்டுள்ள சவால்.
பேரிடரை, இயற்கைப் பேரிடர் என்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். சுனாமி, புயல், பெரும்வெள்ளம், கடும் வறட்சி, நில அதிர்வுகள், பூகம்பம் நிலச்சரிவு, பனிச்சரிவு, எரிமலை சீற்றம் என இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடந்த சில பத்தாண்டுகளில் மனிதனால் உருவாகும் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி காரணமாக நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றை வரம்புமுறையின்றி பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆதிக்கவெறியும் அதிகார பசியும் நம்முள் தலைதூக்கியதன் விளைவாக நொடியில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலி வாங்கும் நவீன அழிவு ஆயுதங்களினால் நடத்தப்படும் போர், கதிரியக்க பேரிடர், தீவிரவாத நிகழ்வுகள், தீ விபத்து, சாலை, கப்பல், விமான விபத்துகள், மின்சார விபத்துகள் போன்றவை பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஒழுங்குவிதிகளுக்கு உட்படாத கட்டுமானப் பணிகளும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளும் சுரங்கப்பணி, தொழிற்சாலைகள் போன்றவற்றையும் பேரிடர்களுக்கு வழிவகுக்கின்றன. பெட்ரோலிய வளத்தைக் கண்மூடித்தனமாகச் சுரண்டுதலும் பருவநிலை சார்ந்த பேரிடர்களை ஏற்படுத்துகிறது. நாம் நினைத்தால் நம்மால் ஏற்படுத்தப்படும் இந்தப் பேரழிவுகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், இயற்கையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது
பெரிய சவாலானது.
இயற்கைப் பேரிடர்இயற்கை பேரிடர் என்கிறபோது நமக்கு சட்டென நினைவுக்கு வருவது 2015-ஆம் ஆண்டு இறுதியில் நாம் எதிர்கொண்ட பெரும் வெள்ளமும் 2004-ஆம் ஆண்டு தமிழக கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட சுனாமியும் தான். சுனாமி ஏற்படுவதற்கு இயற்கைக் காரணங்கள் ஏராளம் இருந்தாலும் கடலில் நடத்தப்படும் அணு ஆயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம் என்கிறார்கள்.
அதனால் இந்நாளையொட்டியாவது பேரழிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பேரிடர்களின் போது செய்யத் தகுந்த மற்றும் தகாத காரியங்கள் குறித்து பயிற்சியளிக்கவேண்டும். ஆபத்துக்காலங்களில் இருக்கும் இடங்களிலிருந்து தப்பிச் செல்லும் வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தல் அவசியம். பேரிடர்கால மேலாண்மையை சரியாகச் செய்வோமேயானால், பேரிடரை எதிர்கொண்டு பெருவாழ்வு வாழலாம்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,