என் தந்தை

 என் தந்தைஅண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது!’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்?’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.
ஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்?’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.
காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.
வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.
”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.
1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.
எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.
முதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.
அப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டிக்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.
அப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளனும் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார்.
அப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்… என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.
ஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’
ஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.

--காந்தி கண்ணதாசன்
சந்திப்பு: தளவாய் சுந்தரம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,