அவனுக்கென்ன தூங்கிவிட்டான்... அகப்பட்டவன் நானல்லவா

 அவனுக்கென்ன தூங்கிவிட்டான்... அகப்பட்டவன் நானல்லவா!

எம்ஜிஆரும் எம்எஸ்வியும் கண்ணதாசனும்! எம்ஜிஆர், கண்ணதாசன், எம்எஸ்வி... இந்த மூன்று திரையுலக ஜாம்பவான்களும் கோலோச்சிய அந்தக் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது என்றால் மிகையல்ல. கண்ணதாசனும் எம்எஸ்
விஸ்வநாதனும் பிறந்தது ஜூன் 24-ல். எம்ஜிஆர் இறந்தது இதே 24-ம் தேதிதான். ஆனால் அது டிசம்பர் மாதம். இந்த மூவருடனும் ஏதோ ஒரு வகையில் 24-ம் தேதி தொடர்புடையதாக உள்ளது. இந்த மூவரும் பணியாற்றிய படங்களில் பாடல்கள் பிறந்த கதைகள் பல சொல்லக் கேட்டு, அதையே கட்டுரைகளாய் பத்திரிகைகளில் படித்து ரசித்த தலைமுறை இது. அப்படி சில சம்பவங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
அவனுக்கென்ன... எம்ஜிஆர் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தின் ரிகார்டிங் நடந்த நேரம். எப்போதும் தாமதமாக வரும் கவியரசு கண்ணதாசன், இந்தப் படத்துக்கு மட்டும் சீக்கிரமாக வந்துவிட்டாராம். ஆனால் எம்எஸ்வி வரவில்லை. முந்தைய நாள் நள்ளிரவு வரை நடந்து பாடல் பதிவுகளால் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாராம் எம்எஸ்வி. விஷயம் தெரிந்த கண்ணதாசன், ஒரு தாளில் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம். அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ... இந்த வரிகள்
அருமையாக
இருந்ததால், அதையே படத்தில் எம்ஜிஆர் பாடும் சோகப் பாடலுக்கு பல்லவியாக எடுத்துக் கொண்டு, மீதி வரிகளைத் தரும்படி கேட்டு கவிஞரை குளிர்வித்தாராம் எம்எஸ்வி.
வேட்டைக்காரன் படம் தொடங்கிய நேரம். தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு கேவி மகாதேவன்தான் வழக்கமாக இசையமைப்பார். இந்த முறை வேறு இசையமைப்பாளரைப் போட தேவர் முடிவு செய்துவிட்டு, எம்எஸ்வியிடம் போனார்களாம். அதிரடியாக ஒரு தொகையைச் சொல்லி, அதை அவர் கண்முன்னே கட்டுக் கட்டாகக் கொட்ட, அதிர்ந்து போனாராம் எம்எஸ்வி. ஒப்புக் கொள்ள முடிவு செய்த நேரம், உள்ளேயிருந்து தாயார் அழைத்திருக்கிறேன். என்னம்மா என்று கேட்டவரை பளாரென்று அறைந்தாராம் தாயார். ஏன்டா.. மகாதேவன் மாமா நமக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கார். அவர் பட வாய்ப்பை நீ எப்படி வாங்கலாம், என்று கடிந்து கொள்ள, வெளியிலிருந்தவர்கள் கப்சிப்பென்று புறப்பட்டு விட்டார்கள். நேரே எம்ஜிஆரிடம் போய் விஷயத்தைச் சொல்ல, அவரும் அதிர்ந்து போனாராம். சரி, கேவி மகாதேவனே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். இதனை பின்னொரு நாளில் எம்ஜிஆர் பயன்படுத்திக் கொண்டாராம். அதை கடைசியாக சொல்கிறேன்.
அண்ணே கோவிச்சுக்கக் கூடாது... எம்ஜிஆரும் கண்ணதாசனும் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது. அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் உரிமைக்குரல் உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு. உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார். கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும். முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார் எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. 'இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?' என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்,' என்றாராம். 'நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்...,'விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!'
தாய் சொல்லைத் தட்டாத எம்எஸ்வி உலகம் சுற்றும் வாலிபன் படம் ஆரம்பித்த நேரம். படத்தில் இசைக்கு மிக முக்கிய பங்கு. எனவே எம்எஸ்வியிடம் மெட்டுக்கள் கேட்டுக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஒவ்வொரு மெட்டையும் தேர்வு செய்ய நீண்ட நாள் எடுத்துக் கொண்டாராம் எம்ஜிஆர். ஒரு நாள் நூறுக்கும் மேற்பட்ட மெட்டுக்களைப் போட்டுக் கொண்டே இருக்க, எம்ஜிஆர் எதையுமே தேர்வு செய்யவில்லையாம். எம்எஸ்விக்கு உள்ளுக்குள் கோபம். அதைக் காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தாராம். 'இந்தப் படத்துக்கு மட்டும் வேறு இசையமைப்பாளரை வைத்துக் கொள்ளுங்கள்' என்று எம்ஜிஆருக்கு சொல்லி அனுப்பிவிட்டாராம். அடுத்த நாள் எம்ஜிஆரின் கார் எம்எஸ்வியின் வீட்டுக்கு வந்திருக்கிறது. வீட்டில் எம்எஸ்வியின் தாயார் இருந்தாராம். அவரை மட்டும் பார்த்துவிட்டு எம்ஜிஆர் கிளம்ப, மகனை அழைத்த தாயார், 'எம்ஜிஆர் எவ்வளவு நல்ல மனிதர். அவரால்தானே இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாய்.. நல்ல வேலைக்காரனிடம்தான் அதிக பொறுப்புகளைக் கொடுப்பார்கள் என்பது தெரியாதா?' என்று கடிந்து கொண்டாராம். மாலையே மீண்டும் எம்ஜிஆரைப் பார்க்க வந்தாராம் எம்எஸ்வி. 'நீ முதல்ல போட்ட மெட்டையே ஓகே பண்ணிட்டேன்.. ரிகார்டிங்கை தொடங்கலாம்', என்றாராம் எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே. இடையில் நடந்த எதைப் பற்றியும் இவரும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. அந்தப் பாடல்தான்.. 'உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்...' எழுதியவர் கவியரசு கண்ணதாசன். இப்படி சுவையான சம்பவங்கள் எவ்வளவோ இருக்கின்றன இந்த மாபெரும் கலைஞர்களின் வாழ்வில். எளிமையும் நேர்மையும் திறமையும் ஒருங்கே பெற்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலம் அது!
நன்றி: பிலிம் பீட்
May be an image of 7 people and people standing
By Shankar

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி