இன்று வள்ளலார் பிறந்த தினம்

 இன்று வள்ளலார் பிறந்த தினம்



 வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.


இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.


பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.


இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.


இராமலிங்க அடிகள் கொள்கைகள்


* கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். * புலால் உணவு உண்ணக்கூடாது. * எந்த உயிரையும் கொல்லக்கூடாது. * சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. * இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். * எதிலும் பொது நோக்கம் வேண்டும். * பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். * சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. * எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.


வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்


* நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. * தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. * மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. * ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. * பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. * பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. * இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. * குருவை வணங்கக் கூசி நிற்காதே. * வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே * தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.


இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.


மகாத்மா காந்தி பிறந்த நாள்-அக்டோபர்,2.

வள்ளலார் பிறந்த நாள்-அக்டோபர்,5.

இருவரும் மறைந்த நாள்-ஜனவரி,30.

காந்தியடிகள் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்திருப்பாரேயானால்(வள்ளலார் மறைந்த 1874-இல்)

வள்ளலாரே காந்தியடிகளாகப் பிறந்தார் என்று நாம் நம்புவதற்கு இடமிருந்திருக்கும் என்று திரு.ஜெயகாந்தன் வள்ளலார்-காந்தி விழாவில் பேசிய கருத்து நினைவிற்கு வருகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,