அனுபவி ராஜா அனுபவி’

 அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்கு பாலச்சந்தரையே இயக்குநராக ஒப்பந்தம் செய்ய விரும்பினார் அரங்கண்ணல். ஆனால் தயாரிப்பாளர் அண்ணாமலையோ, கிருஷ்ணன் பஞ்சுவை இயக்குநராகப் போட ஆசைப்பட்டார். இறுதியில், அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி பாலச்சந்தரை ஒப்பந்தம் செய்ய வைத்தார் அரங்கண்ணல்.


‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் கதையை எழுதிய அரங்கண்ணல்தான் அந்தப் படத்தின் வசனங்களையும் எழுதினார் என்றாலும் அப்போது அரங்கண்ணல் தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் வசனகர்த்தா என்ற முறையில் தினமும் படப்பிடிப்புக்கு அவரால் செல்ல முடியவில்லை.
அரங்கண்ணல் எழுதித் தந்திருந்த ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் காட்சிகள் பலவற்றில் மாற்றம் தேவைப்பட்ட போதெல்லாம் அரங்கண்ணலின் அனுமதி இன்றி அவர் எழுதிய வசனங்களில் பல மாற்றங்களைச் செய்து படமாக்கி விட்டார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடுத்தவரையிலான படத்தைப் போட்டுப் பார்க்க அரங்கண்ணல் வந்தார். ஆனால், இயக்குநரான பாலச்சந்தர் அந்தக் திரையீட்டுக்கு வரவில்லை.
அரங்கண்ணல் எழுதியிருந்த வசனத்தில் பல மாற்றங்களைத் தான் செய்திருந்ததால் படத்தின் கதை, வசனகர்த்தாவாக மட்டுமின்றி படத் தயாரிப்பாளராகவும் இருந்த அரங்கண்ணல் அந்த மாற்றங்களை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற தயக்கத்தில்தான் பாலச்சந்தர் அந்தத் திரையீட்டுக்கு வரவில்லை.
படத்தைப் பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியே வந்த அரங்கண்ணல் அருகில் நின்று கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகியிடம் “பாலசந்தர் எங்கே..?” என்றுதான் முதலில் கேட்டார். “அவர் வரவில்லை…” என்று அந்தத் தயாரிப்பு நிர்வாகி சொன்னதும் ஆளை அனுப்பி பாலச்சந்தரை அழைத்து வரச் சொன்னார்.
அரங்கண்ணல் அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியுடன் தயாரிப்பு நிர்வாகி வந்தபோது நிச்சயமாக இந்த படம் பிரச்னையில்தான் முடியப் போகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் ஏறினார் பாலச்சந்தர்.
திரை அரங்கிற்கு பாலச்சந்தர் வந்ததும் “வசனங்கள்ல நிறைய மாற்றம் பண்ணியிருக்கீங்க போல இருக்கு” என்று அரங்கண்ணல் ஆரம்பித்த உடன், அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பாலசந்தர் மட்டுமல்ல… சுற்றியிருந்தவர்களும் அமைதியாகிவிட்டார்கள். “இனி எடுக்கப் போகிற காட்சிகள் எல்லாவற்றிற்கும் நீங்களே வசனம் எழுதிவிடுங்கள்…” என்றார் அரங்கண்ணல்
அவர் அப்படிச் சொன்னதும் மிரண்டு போனார் பாலச்சந்தர். அவர் எழுதிய பல வசனங்களைத் தான் மாற்றி எழுதிப் படமாக்கியதில் ஏற்பட்ட கோபத்தில்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்ற எண்ணத்தில் சற்று கலக்கத்துடன் பாலச்சந்தர் அரங்கண்ணலைப் பார்த்தபோதுதான் தான் சொன்னதை தவறான அர்த்தத்தில் பாலச்சந்தர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது அரங்கண்ணலுக்கு புரிந்தது.
உடனே உரக்க சிரித்தபடியே “ நீங்க என்னுடைய வசனத்தை மாத்திட்டீங்களே என்ற கோபத்தில் நான் அப்படி சொல்லவில்லை.. உண்மையில் உங்க வசனங்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு. இந்தக் கதைக்கு நான் எழுதிய வசனங்களில் நீங்க செய்திருக்கும் மாற்றங்களும் ரொம்ப சரியாக இருக்கு. அதனால் உங்க வசனத்தை ரசித்துத்தான் அப்படி சொன்னேன்…” என்றார் அரங்கண்ணல். அவர் அப்படிச் சொன்ன பிறகுதான் சமாதானம் ஆனார் பாலச்சந்தர்.
‘அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்குப் பிறகு எத்தனையோ படங்களை அரங்கண்ணல் தயாரித்த போதிலும் வசனம் எழுத தனது பேனாவை ஒரு முறைகூட அவர் திறக்கவேயில்லை.
அரங்கண்ணலுக்கு மரியாதை செய்கின்ற விதத்திலே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் டைட்டிலில், நடிகர்கள் பெயருக்கு முன்னாலே ‘கதை-அரங்கண்ணல்’ என்று டைட்டில் போட்டார் பாலச்சந்தர்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,