மார்க் ஆண்டனி
`அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்க..!’’ - ரகுவரன் குறித்து சுரேஷ் கிருஷ்ணா
அவருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், `பாட்ஷா' படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
"'பாட்ஷா' படத்துக்கு முன்னாடி ரகுவரன்கூட எனக்குப் பெருசா அறிமுகம் கிடையாது. நேர்லகூட பார்த்துப் பேசுனதில்லை. ஆனா, `பாட்ஷா' படத்துக்குப் பிறகு எங்க நட்பு தொடர்ந்தது. அவர் உயிருடன் இருந்தவரைக்கும் என்கிட்ட எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகிட்டார். இன்னைக்குவரைக்கும் அவர் உயிருடன் இல்லைங்கிறதை என் மனசு ஏத்துக்கவே இல்லை." - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா வார்த்தைகளில் அத்தனை உணர்ச்சிவசம்.
ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் எனப் பல கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், நடிகர் ரகுவரன். இன்றுடன் அவர் மறைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. அவருடைய நினைவு தினமான இன்று, அவருடனான அனுபவங்களைச் சொல்கிறார், சுரேஷ் கிருஷ்ணா.
`` `பாட்ஷா' படத்தின் மார்க் ஆண்டனி கேரக்டருக்குப் பல நடிகர்கள் எனக்கும், ரஜினிக்கும் மனதில் தோன்றினார்கள். பாலிவுட் நடிகர்கள் சிலரையும் பரிசீலனை பண்ணோம். ஆனா, ஆண்டனி ரோலில் நடிக்க அதிக உடல் எடை கொண்ட வில்லன் தேவையில்லை. புத்திக் கூர்மையுள்ள வில்லன் தேவை. ஏன்னா, படத்தின் ஆணி வேர், பாட்ஷா - ஆண்டனிக்கும் இடையேயான போர்தான். சுத்தி இருந்த யாரோ ஒருத்தர்தான், `ரகுவரன் செட் ஆவாரா?'னு பேசிக்கிட்டு இருந்தாங்க. `அதானே... இவரை எப்படி மறந்தோம்?'னு அப்போதான் எங்களுக்கும் தோணுச்சு. ரகுவரன்கிட்ட ஆண்டனி ரோல் பற்றிச் சொன்னேன், அவரும் நடிச்சார்.
படம் பார்த்துட்டு எல்லோருமே பாட்ஷா கேரக்டருக்கு நிகராக, ஆண்டனி கேரக்டரையும் பாராட்டினாங்க. ரஜினியும், ரகுவரனும் பேசுற எல்லா வசனங்களுக்கும் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்! ஷூட் பண்றப்போ, நான் என்ன நினைச்சேனோ, அதைவிட அதிகமான வரவேற்பு கிடைச்சது.
ரகுவரன் சார் எப்போவுமே நடிப்புல அவர் பெஸ்டைக் கொடுப்பார். புத்திசாலி நடிகர். அதிகம் அலட்டிக்காம உடல்மொழியாலேயே நடிப்பை வெளிப்படுத்துவார். அறிமுகக் காட்சியில் அவரைக் காட்டுறப்போ, அவருடைய ரெண்டு கண்ணுக்கு க்ளோஸப் வெச்சிருந்தோம். படத்துக்காக அவர் லென்ஸ் போட்டு நடிச்சார். படத்தோட மொத்தப் படப்பிடிப்பும் 55 நாள்களில் முடிஞ்சது. ஆண்டனி கேரக்டருக்கான ஷூட்டிங் அதுல 15 நாள்கள் போச்சு.
படத்துல ஆண்டனிக்கு ஆதரவு கொடுத்த `டான்'கள் பாட்ஷாவுக்கு ஆதரவு கொடுத்துப் போயிடுவாங்க. நமக்கு யாரும் இல்லையேனு விரக்தி ஆகுற அந்தக் காட்சியில ரகுவரன் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தணும். அதை அவருக்கு விளக்கிச் சொல்லிட்டேன். ஹோட்டல் ஒன்றில் கான்ஃபரன்ஸ் ஹாலில் இந்தக் காட்சியை எடுத்தோம். திடீர்னு அங்கே இருக்கிற கண்ணாடி டம்ளரைத் தன் கையாலே உடைச்சுக் கோபத்தை வெளிப்படுத்தி நடிச்சார், ரகுவரன். அவர் கை முழுக்க இரத்தக் கறை. அவர் இந்தளவுக்கு மெனக்கெடுவார்னு யூனிட்ல இருந்த யாருமே எதிர்பார்க்கல.
க்ளைமாக்ஸ்ல பாட்ஷா உயிரோட இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆண்டனி ஜெயில்ல இருந்து தப்பிச்சு தேவா வீட்டுக்கு வருவார். அந்தக் காட்சியிலேயும் ரகுவரன் நடிப்பைப் பார்த்து மிரண்டுட்டோம். சோபாவுல கம்பீரமா உட்கார்ந்துக்கிட்டு கண்ணாலேயே மிரட்டிருப்பார் அவர். ரகுவரன் கண்ல எப்போவுமே ஒரு காந்தசக்தி இருக்கும். அவருக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்துதான் வாங்கிக்கணும்னு அவசியமே இருக்காது.
டப்பிங்ல `மார்க் ஆண்டனி'னு பேஸ் வாய்ஸ்ல பேசியிருப்பார், ரகுவரன். அமிதாப் பச்சன் சார்தான் இப்படியொரு பேஸ் வாய்ஸ் பேசியிருப்பார். ரகுவரன் உடல் மட்டுமல்ல, குரல்கூட நடிக்கும்... அப்படி ஒரு வாய்ஸ் அவருக்கு. `பாட்ஷா' படத்துக்குப் பிறகு நாங்க ரெண்டுபேரும் `ஆஹா' படத்துல வேலை பார்த்தோம்.
இதுல ரகுவரன் கேரக்டர் ரொம்ப அமைதி. ஐயர் வீட்டுல இருக்கிற மூத்த பையன். இந்த கேரக்டரும் அவருக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. `பாட்ஷா' ரிலீஸாகி ஒரு வருடத்துல இந்தப் படத்துல ரகுவரன் நடிச்சார். இந்தக் கேரக்டர்ல இவரை நடிக்க வைக்குறியேனு பலரும் என்னைத் திட்டினாங்க. ஆனா, அவர் என்மேல வெச்சிருந்த நம்பிக்கை, அன்பின் காரணமா நடிச்சார். இதுல நடிச்சப்போ, அவருக்குனு ஒரு போட்டோ ஷூட்கூட பண்ணலை. அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.
பிறகு, சேர்ந்து வொர்க் பண்ணலைனாலும், நானும் அவரும் நல்ல நட்போடு இருந்தோம். ரகுவரன் எனக்கு அண்ணன் மாதிரி. அடிக்கடி போன் பண்ணிப் பேசுவார். அவர் இல்லாதது சினிமாவுக்குத்தான் நஷ்டம். எல்லாக் கேரக்டருக்கும் செட் ஆகிற ஒரு நடிகர் அவர். அவருடைய இறப்புக்கு சில தினங்களுக்கு முன்பு எனக்கு போன் பண்ணி நலம் விசாரிச்சார். சிறு வயதிலேயே இறந்துட்டார். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்துக்கிட்டேன். இந்தக் காட்சியும் சினிமா ஷூட்டிங்கா இருக்கக் கூடாதா... அவர் எழுந்து வந்துடமாட்டாரா... இப்படி ஏக்கத்தோடுதான் அவரைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்." என முடித்த சுரேஷ் கிருஷ்ணா வார்த்தைகளில் அத்தனை நெகிழ்வு, அத்தனை சோகம்!
நன்றி: விகடன்
Comments