உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?
உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?
விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.
மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம்.
உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம் 13 வைட்டமின்கள் தேவை. ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டுமா?
இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன: ஒன்று, கொழுப்பில் கரைகின்றவை மற்றும் நீரில் கரைகின்றவை.
1. கொழுப்பில் கரைகின்ற விட்டமின்கள் (வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே) நம் உடலால் சேமிக்கப்படுபவை. அதனால், இந்த விட்டமின்களை மாத்திரை உட்கொள்ளாமலே பேணிக் காத்துக்கொள்ள முடியும். இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக நீங்கள் உட்கொண்டு விடலாம். இதனால், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.
2. நீரில் கரைகின்ற விட்டமின்கள் (ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின் சி மற்றும் பி) உங்கள் உடலால் சேமிக்க முடியாதவை. இதனை, நீங்கள் சீராக உட்கொள்ளவேண்டும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அவற்றை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றுவீர்கள். ஆனால், விட்டமின் பி12-ஐ கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.
மல்டி-விட்டமின் மாத்திரைகளில் சில தாதுச் சத்துகளையும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் (Zinc) போன்றவையும் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலம் இந்த தாதுச்சத்துகள் கிடைக்கும். அதனால், இந்தச் சத்துகள் அதிகமாக தேவைப்படும் நிலையில் நீங்கள் இல்லாத பட்சத்தில், இதுவே போதுமானது.
கால்சியம் - வலுவான எலும்புக்கு உங்களுக்கு ஒரு நாளைக்கு கால்சியம் 700 மில்லி கிராம் (எம்.ஜி) தேவைப்படும்.
துத்தநாகம்
- துத்தநாகம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்துக்கும் தேவைப்படும். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 7 எம்.ஜியும், ஆண்களுக்கு 9.5 எம்.ஜியும் தேவை.
இரும்புச்சத்து - உணவு மூலம் கிடைத்த ஆற்றலை உடலுக்கு பரப்பவும், ஆக்சிஜனை ரத்தம் முழுவதும் கொண்டு சேர்க்கவும் இரும்புச்சத்து தேவை. 19 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு ஒரு நாளைக்கு 14.8 எம்.ஜியும், ஆண்களுக்கு 8.7 எம்.ஜியும் தேவை.
இலையுதிர் காலத்திலும், குளிர் காலத்திலும், விட்டமின்-டி மாத்திரையை உட்கொள்ளலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. விட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவும்; இது நம் பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். விட்டமின்-டி மக்னீசியத்தையும் பாஸ்பேட்டையும் உறிஞ்ச உதவும்.
பசியின்மை இருப்பவர்களும் முதியோரும் ஒரு குறிப்பிட்ட மல்டி விட்டமினை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். உங்களின் மருத்துவர் உங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தலாம். முதியோரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் விட்டமின்-டி மாத்திரைகளை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். உணவிலிருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு இது உதவும்.
நீங்கள் உங்கள் விருப்பமாகவோ அல்லது உடல் எடை குறைக்கவோ, டயட் காரணமாக சில உணவுகளை தவிர்த்தால், அத்தகைய உணவுகளில் காணப்படும் சத்துகளைக் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம். நீங்கள் மிகவும் குறைவான கலோரி கொண்ட டயட்டில் இருந்தால், மல்டி -விட்டமின் மாத்திரைகளை பயன்படுத்த நிச்சயம் பரிசீலிக்கலாம்.
மாத்திரைகள் தேவைப்படும் உணவு முறைகள் மற்றும் உடல்நிலை
1. பால் பொருட்கள் சேர்க்காத டயட்டில் உள்ளவர்கள், கால்சியம் மற்றும் அதன் வலுக்கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
2. இறைச்சி முட்டை, பால் பொருட்களை உண்ணாத 'வீகன்' உணவர்களுக்கு விட்டமின் பி12 மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை ஈடுகட்ட மாத்திரைகள் அல்லது டானிக் எடுத்துக்கொள்ளலாம்.
3. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இரும்புச்சத்து எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். 35 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 4.8 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை உள்ளது. 12 சதவீத பேருக்கு மிகவும் குறைவான இரும்புச்சத்து உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரை அணுகவும்.
4. பெண்களில் கருவுற முயல்பவர்கள், முதல் 12 வாரங்களில் இருக்கும் கர்ப்பிணிகளும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். இது பிறக்கும் குழந்தைக்கு முதுகு நாண் பிறவி குறைபாடு உட்பட நரம்புக் குழாய் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
பல ஆண்டுகளாக குளிரை எதிர்கொள்ள மக்கள் விட்டமின்- சி உட்கொண்டு வருகின்றனர். இது எதிர் ஆக்சிகரணிகள் (antioxidant) என்பதானால், சிறந்த உணவாக பெயர் எடுத்திருக்கிறது. ஆனால், தொற்று., நோய் கடுங்குளிருக்கான அறிகுறிகள் ஆகியவற்றை தடுக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரமே உள்ளது. நம் உடல் அதிக அளவிலான வைட்டமின் சியை சேகரிக்க இயலாது. அதனால், நீங்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது, அதிக அளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
காய்கறிகளிலும் பழங்களிலும் விட்டமின்-சி பரவலாக உள்ளது. ஓர் ஆரஞ்சுப் பழத்தில் கிட்டத்தட்ட 70 எம்.ஜி உள்ளது. அதனால், குறைபாடு என்பது மிகவும் அரிதே.
விட்டமின்களும் தாதுக்களும் தேவைப்படும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது உங்களின் வயது, செயற்பாடு அளவு, பாலினம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொறுத்தது.
விட்டமின்-டி தவிர நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் ஆரோக்கியமான சரியான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் பெற முடியும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால், பலரும் பரிந்துரை செய்யப்படும் அளவில் (Reference Nutrient Intakes - RNI) ஊட்டச்சத்துகளை உட்கொள்ளத் தவறுகின்றனர் என்று தேசிய திட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு காட்டுகிறது. அவர்கள் முறையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றவதை தவிர்த்து அவர்களே மல்டி-விட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.
நீங்கள் உரிய நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே உங்கள் உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி!
Comments