"நாம்தான், நாம் இருக்கும் இடம்தான் கடவுள்!’’ - ஓவியர் ஜெயராஜ்

 "நாம்தான், நாம் இருக்கும் இடம்தான் கடவுள்!’’ - ஓவியர் ஜெயராஜ்



"ஒருமுறை காஞ்சிப் பெரியவர் என்னை வரச் சொல்லி மகாபாரதத்துலேருந்து, அஞ்சு காட்சிகளைப் படம் வரையச் சொன்னார். வரைஞ்சு கொடுத்துட்டு வந்தேன். அதுக்காக என்னைப் பாராட்டி ஒரு தங்கக்காசும், ருத்ராட்ச மாலையும் கொடுத்தார். அந்த மாலையைத்தான் எங்க வீட்டு வேளாங்கண்ணி சிலைக்கு அணிவிச்சிருக்கேன்."
ஜெயராஜ்... 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரு கட்டத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் 47 பத்திரிகைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். `கறுப்பு வெள்ளை ஓவியம்' என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும், `வண்ண ஓவியம்' என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். சின்னக் குண்டூசி முதல் பெரிய பெரிய பொருள்கள்வரை அத்தனையையும் செய்நேர்த்தியோடு வீட்டில் அழகுற வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், இவரும் இவரது துணைவியார் ரெஜினாவும். ஓவியர் ஜெயராஜை `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்.
``கடவுள் விஷயத்துல என்னோட கருத்து மத்தவங்கள்ல இருந்து கொஞ்சம் மாறுபட்டது. உதாரணமா ஒருத்தனுக்கு 5000 ரூபாய் கடன் இருக்குனுவெச்சுக்குவோம். கடன் கொடுத்தவன் வந்து, `இப்பவே நீ பணத்தைக் கொடுத்துதான் ஆகணும்’னு சட்டையைப் பிடிக்கிறான். அந்த நேரத்துல எங்கேயோ இருந்து ஒருத்தர் வர்றார். `இந்தாப்பா 6000 ரூபாய். அவனோட கடன் 5000 ஐ அடைச்சிடு... மீதியை உன் கைச்செலவுக்கு வெச்சுக்க’னு கொடுக்கிறார். அப்போ அவன், `சார்... கடவுள் மாதிரி வந்து காப்பத்துனீங்க’னு சொல்வான் இல்லையா? அந்த ஒருத்தரை கடவுள்னு நானும் நினைக்குறேன்.
அது, 1974-ம் வருஷம். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு என் மனைவி, பிள்ளைகளோட கிளம்பிப் போனேன். ட்ரெயின் மணியாச்சி ஜங்ஷன்ல கொஞ்ச நேரம் நின்னுச்சு. அந்த நேரத்துல ட்ரெயின்ல இருந்து இறங்கி, என் பசங்களை நான் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தேன்.
அப்போ அடுத்த ட்ராக்குல ஒரு ட்ரெயின் போய்க்கிட்டிருந்துச்சு. போன ட்ரெயின் கொஞ்ச நேரத்துல சட்டுனு நின்னுடுச்சு. அந்த ட்ரெயின்ல இருந்து ஒரு மிலிட்டரி ஜவான் இறங்கி நேரா என்கிட்ட வந்தார். என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போனார். நான், `எங்கே கூப்பிடுறியோ வர்றேன். முதல்ல கையை எடு'னு ஆங்கிலத்துல சொன்னேன்.
நான் பேசின ஆங்கில வார்த்தைங்க அந்த ஜவானுக்கு உறைச்சிருக்கணும். கையை எடுத்துட்டார். அப்போதான் கவனிச்சேன். அது ராணுவ வீரர்கள், தளவாடங்களை ஏத்திக்கிட்டுப் போற பிரத்யேக ட்ரெயின்கிறதை. ஜவான், நேரா கமாண்டர்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனார். அவர் கேமராவை வாங்கி, அதுல இருந்த ஃபிலிம் ரோலை மட்டும் எடுத்துக்கிட்டு, கேமராவை கொடுத்துப் போகச் சொல்லிட்டார். குழந்தைங்களைப் படம் எடுக்குற ஆர்வத்துல மிலிட்டரி ட்ரெயின் போனதை நான் கவனிக்கலைனு அவர் புரிஞ்சிக்கிட்டார்.
இந்தச் சம்பவத்துல ஜவானைத் தோளிலிருந்து கையை எடுக்கச் சொன்னபோது கோபம்... கமாண்டர் ஃபிலிம் ரோலைப் பிடுங்கும்போது, `வேற என்ன பண்ண முடியும்'கிற ஒரு நிதானம். இந்த மனப்பான்மை கடவுள் கொடுத்தது. இத்தனை களேபரங்களும் முடிஞ்சு, நான் என் கூபேக்கு வந்தா ட்ரெயின் அதுவரைக்கும் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குக் காரணம் `காளி மார்க் சோடா கம்பெனி'யின் அதிபர் ராஜேந்திரன்தான். அவர் என் ஓவியங்களின் ரசிகர். `ஓவியர் ஜெயராஜை மிலிட்டரிகாரங்க அழைச்சிக்கிட்டுப் போறாங்க... அவர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க’னு கார்டுகிட்ட சொல்லியிருக்கார். கார்டோ, `நானும் அவர் ஓவியங்களின் ரசிகர்தான் சார்’னு சொல்லியிருக்கார். இப்படி நமக்கு நெருக்கடியான நேரங்கள்ல எங்கிருந்தோ உதவி கிடைக்குமில்லே? அப்போல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்லிப் பழகிக்குவேன். அதுதான் என்னை இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்ததுனு நினைக்கிறேன்.
பைபிள்லகூட இயேசு கிறிஸ்துகிட்ட, `யார் கடவுள்?’னு கேட்கிறாங்க. `நானே' என்று ஓரிடத்தில் பதில் சொல்றார். அந்த `நானே...’ங்கிற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு. நாம்தான் கடவுள். நாம் இருக்கும் இடம்தான் கடவுள். நாம் பார்ப்பவை எல்லாம் கடவுள்தான்... கடவுளின் அம்சம்தான். இந்தப் பேனா, இந்த மேஜை, இந்தத் தூரிகை, இந்த வண்ணங்கள் யாவும் கடவுள் என்றுதான் நினைக்கிறேன்.
கடவுள் எல்லாவற்றின் மூலமாவும் நம்முடன் தொடர்புகொள்ளத்தான் விரும்புறார். ஆனா, நாமதான் அவர் எப்படி வர்றார், எந்த ரூபத்துல வர்றார்ங்கிறதைப் புரிஞ்சிக்கத் தவறிடுறோம். இன்னொரு முக்கியமான விஷயம்... தத்துவார்த்தரீதியா முன்கூட்டியே ஒரு பதிலைவெச்சிக்கிட்டு கடவுளைத் தேடக் கூடாது.
பிறப்பால் நான் கிறிஸ்துவன். சென்னையில ஞாயிற்றுக்கிழமையானா சர்ச்சுக்குப் போவேன். தூத்துக்குடி போனா, மேரி மாதா கோயிலுக்கும் இருதய ஆண்டவர் கோயிலுக்கும் போகாம வர மாட்டேன். எப்போ சர்ச்சுக்குப் போய் ஜெபம் பண்ணினாலும், ஒரே ஜெபம்தான், `எல்லாரும் நல்லாயிருக்கணும்'னு வேண்டிக்குவேன். நேத்திக்கு இன்னிக்குன்னு கிடையாது... என்னிக்குமே ஒரே பிரேயர்தான். எல்லாரும் `நீங்க ஏன் உங்களுக்குனு எதையும் கேட்க மாட்டேங்கிறீங்க?’னு கேட்பாங்க. `எல்லாரும் நல்லா இருந்தா, நிச்சயம் நாமும் நல்லா இருப்போம்ங்கிற நம்பிக்கைதான்’னு சொல்லிடுவேன். மத்தபடி பைபிளெல்லாம் அதிகம் படிச்சது கிடையாது. ஆனா, பைபிள்ல சொல்லி இருக்கிறபடி நடக்கணும்னு என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்யுறேன்.
நான் பொறந்தது தூத்துக்குடி. படிச்சது வளர்ந்ததெல்லாம் மதுரையில. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ பொருளாதாரத்தை 1958-ம் வருஷம் படிச்சு முடிச்சேன். சின்ன வயசுல இருந்தே படம் வரைவேன். அப்பாவு மதுரை ஸ்பென்சர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவருக்கு மதுரையிலேருந்து சென்னைக்கு மாற்றல் கிடைச்சுது. நானும் வேலை தேடி சென்னைக்கு வந்துட்டேன். எனக்கு படிப்பை முடிச்சிட்டு, சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி வேலைக்குப் போகப் பிடிக்கலை.
பத்திரிகையில வேலை பார்க்கலாம்னு முடிவு பண்ணி `குமுதம்' ஆபீஸுக்குப் போனேன். அங்க எஸ்.ஏ.பி. அண்ணாமலையைப் பார்த்தேன். அவர், ரா.கி.ரங்கராஜனைப் பார்க்கச் சொன்னார். அவர் நான் வரைஞ்ச ஓவிங்களைப் பார்த்ததும், தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார். அதுக்குப் பிறகுதான் `ஆனந்த விகடன்'-ல வரைய ஆரம்பிச்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான் என் ஓவியப் பணி. ஓவியக் கலையை எல்லாரும் ஆர்வமா கத்துக்குவாங்கனு சொல்ல முடியாது. அப்படியே கத்துக்கிட்டாலும், அதுல முழுமையான வெற்றி கிடைச்சா அதுக்குக் காரணம் கடவுளோட அனுக்கிரகம்தான்.
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் என்னை வரச் சொல்லி மகாபாரதத்துலேருந்து, அஞ்சு காட்சிகளைப் படம் வரையச் சொன்னார். வரைஞ்சு கொடுத்துட்டு வந்தேன். அதுக்காக என்னைப் பாராட்டி ஒரு தங்கக்காசும், ருத்ராட்ச மாலையும் கொடுத்தார். அந்த மாலையைத்தான் எங்க வீட்டு வேளாங்கண்ணி சிலைக்கு அணிவிச்சிருக்கேன். அந்தச் சிலை எங்க குடும்ப நண்பர் டைரக்டர் மகேந்திரன் வேளாங்கண்ணி போயிட்டு வந்தபோது அன்போட பரிசா கொடுத்தது.
மகேந்திரன் சாருக்கு என் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அவரும் என்னை மாதிரியே மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவர். அவர் `நண்டு'னு ஒரு படம் டைரக்ட் பண்ணினார். அப்போ அவரோட குழந்தைகளை எங்க வீட்டுலதான் விட்டுட்டுப் போனார். அவர் குழந்தைகளும் எங்க குழந்தைகளும் நல்ல ஃபிரெண்ட்ஸ். பசங்களைக் கூட்டிக்கிட்டு அவர் காரை எடுத்துக்கிட்டு பீச், மகாபலிபுரம்னு போயிட்டு வருவோம். என்னோட மாருதி சின்ன கார்ங்கிறதால அவரோட அம்பாஸிடர்ல சுத்தி வருவோம். மகேந்திரன் சார் கொடுத்த வேளாங்கண்ணி சிலையில காஞ்சிப் பெரியவரோட ருத்ராட்ச மாலையை அணிவிச்சிருக்கேன் இதுலருந்தே என் ஆன்மிகத்தை நீங்க புரிஞ்சுக்கலாம்’’ என்று கூறி சிரிக்கிறார் ஓவியர் ஜெயராஜ்.
எஸ்.கதிரேசன்
நன்றி; விகடன்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி