கார்த்திக் புகழேந்தி

 கார்த்திக் புகழேந்தி

சென்னைக்கு வந்த போது, யாருமே அவருக்கு அறிமுகமில்லை. "பிறகு உறவு சொல்லி அழைக்கும் ஆயிரம் உயிர்களை இந்த நகரம் எனக்கு அளித்திருக்கிறது" என்கிறார். கரிசல் இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ கி.ரா-வின் வழிகாட்டுதலின்படி ‘கதைசொல்லி’ சிற்றிதழின் முக்கியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். ஞாயிற்றுக் கிழமையானால், இருக்கும் கேமராவையும், பைக்கையும் எடுத்துக் கொண்டு ஊர் பல சுற்றுவது இவரது வழக்கம்.


வட்டார வழக்கில், மனதில் தைக்கும் சிறுகதைகள் தான் கார்த்திக் புகழேந்தியின் அடையாளம். ‘வற்றா நதி’- சிறுகதை தொகுப்பு, இவருடைய முதல் புத்தகம். இரண்டாவதாய், ‘ஆரஞ்சு மிட்டாய்’ வெளியிடப்பட்டது. இளம் எழுத்தாளர்கள் வரிசையில், நிச்சயமாக ஒரு சிறப்பு இடம், கார்த்திக் புகழேந்திக்கு உண்டு.
இவரது சொந்த ஊர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி. கல்விக்கு ‘ஆக்ஸ்ஃபோர்டு நகரம்’ எனப் பெயரெடுத்த ஊர். அதே ஊரிலேயே, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வியோடு, பள்ளிப்படிப்பென்பது முடிந்து போனது. அதற்கு வீட்டின் பொருளாதாரம் முக்கியமானக் காரணம். அப்பா இளம் வயதிலேயே தவறியதால், வளர்ப்புத் தந்தையின் அனுகிரகத்தாலும், அம்மாவின் உழைப்பினாலும் தான் வளர்ந்தார். படிக்கும் போதே வேலைக்குச் சென்று, அந்த வருமானத்தை வீட்டுச் செலவிற்கு உபயோகிக்க வேண்டிய சூழல் இருந்தது.
படித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் சேட்டை தாங்காமல், ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். அந்த விடுதி நாட்களில் தான் நூலகத்தில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்த புத்தகங்கள் வழியாக கற்பனை விரியும் போது, தனியே உட்கார்ந்து எழுதத் தொடங்கினார். இவர் கையெழுத்து அழகாக இருக்கும் என்றொரு பிரம்மை. அதனால், பக்கம் பக்கமாய் எழுத தொடங்கினார். "சில காலம் கழித்து, சென்னை நோக்கி வந்தார். பகலில் பல வேலைகள் செய்தார். இரவில், சிட்டி யூனியன் பேங்க் ஏ.டி.எம் -ல் செக்யூரிட்டி வேலை. அந்த பேங்க் ஏ.டி.எம் இவருக்கு ஒரு போதி மரம். இவருடைய பல கதைகள் எழுதப்பட்டது அங்கே தான் என்கிறார்.
2009, 2010 களில் எல்லாம் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதுபவர்கள் அதிகம் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள், அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் தான் அதிகமாக தமிழில் எழுதுவார்கள். இந்த நண்பர்களுக்கென கூட்டமைப்பாய் சில குழுக்கள் இருந்தது. அதில் தினம் ஏதேனும் ஒன்றைப் பற்றி விவாதித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அப்போது நண்பர் ஒருவர், காதல் கவிதைகள் எழுத பல பேர் இருக்கிறார்கள், சமூகம் சார்ந்து எழுதுங்களேன் என்று சாதாரணமாய் சொன்னதை இவர் கொஞ்சம் தீவிரமாய் எடுத்துக் கொண்டார். அப்படித்தான், இவர் முதல் கதை எழுதிய போது நண்பர்கள் கொண்டாடினார்கள்.
பிரகாஷ் என்ற இவரது நண்பர், இவரது கதைகளைப் புத்தகமாய் வெளியிடச் சொன்னார். இவர் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சோம்பேறித்தனம். அதனால் நண்பர் இவருடன் சண்டைப் போட்டு ஆறு மாதங்கள் பேசவே இல்லைஇல்லையாம். ‘வற்றாநதி’ உருவானதற்கு அந்த நண்பர் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் கார்த்திக் புகழேந்தி.
"தென் இந்தியாவில், கோடைக்காலத்திலும் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஜீவ நதி தாமிரபரணி. அதன் காரணமாய் தான் ‘வற்றாநதி’ எனப் பெயரிட்டேன்" என்கிறார். புத்தகத்தின் உள்ளடக்கம் சிறுகதைகள். அந்த ஊர் மக்களின் காதல், சண்டைகள், கோபம், விழாக்கள், கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என பால்யம் சார்ந்த கதைகள் தான் அவை. 2014ல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டது.
சுதந்திர தினத்தின் போது, ‘ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கித் தர மாட்ட’னு நண்பர்கள் பலர் விளையாட்டாய் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனால், ஆரஞ்சு மிட்டாய் தானே வேண்டும், பிடியுங்கள், அடுத்த புத்தகத்தின் பெயரே ஆரஞ்சு மிட்டாய் தான் என்று பதில் சொன்னார். "எண்பதுகள், தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய், தம் பால்ய காலத்தை நினைவு படுத்தும். ஓட்டை காலணா, ஆரஞ்சு மிட்டாய் என்றெல்லாம் சொல்லும் போது எதுவும் தோன்றாது ஆனால் எங்கள் தலைமுறைக்குத் தான் அந்த உணர்வு தெரியும், புரியும்" என்கிறார்.
ஆரஞ்சு மிட்டாய், சிறுகதை தொகுப்பு தான். ஆயிரத்து எண்ணூறுகளில் உள்ள கதைகளும் இருக்கும், ஆயிரத்து தொன்னூறுகளில் உள்ள கதைகளும் இருக்கும். "இதற்காக பெரிய பெரிய புத்தகங்களை படித்து ஆய்வு செய்ய எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் மனிதர்கள் தான். மனிதர்களுடம் இயல்பாக, எளிதாக பழகுவதனால் பல யதார்த்தமான கதைகளை எல்லாம் கேட்கிறேன். அது தான் நான் செய்யும் ஆய்வுப் பணி" என்கிறார்.
"முழு நேரமாக படித்துப் படித்து எழுதிக் கொண்டே இருந்தால் அதன் மூலமாக வருமானத்திற்கு வழி உண்டு. மறுபுறம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத்தை, பல ஆய்வுகள் செய்து எழுதும் எழுத்தாளர், அந்த புத்தகத்தின் மூலமாக வரும் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது" என்கிறார் பதிப்பாளரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி.

-kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,