டி.ஆர்.பாப்பா என்று அறியப்படுகிற டி.ஆர்.சிவசங்கரன்
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா நினைவு தினம் இன்று
டி.ஆர்.பாப்பா என்று அறியப்படுகிற இசையமைப்பாளரின் இயற்பெயர் டி.ஆர்.சிவசங்கரன். தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1923-ம்ஆண்டு பிறந்தார் அந்த இசை மேதை. அப்பா ராதாகிருஷ்ண பிள்ளை புகழ்மிகு வயலின் கலைஞராக இருந்தார். அவரே குருநாதராக இருந்து, மகனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்தார். மாதம் ஐந்து ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்த வசதியில்லாததால் பாப்பாவின் பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மகனை இசைக்கலைஞனாக உருவாக்க முடிவெடுத்த ராதாகிருஷ்ண பிள்ளை, அப்போது முன்னணிவயலின்கலைஞராக இருந்த சிவவடிவேலுபிள்ளையிடம் சேர்த்துவிட்டார். திரைப்படங்களில் வயலின் வாசித்த சிவவடிவேலு பிள்ளையின் பெயர் பாட்டுப்புத்தகங்களில் இடம்பெற்று அவரது புகழைப் பரப்பிக் கொண்டிருந்த நேரம் அது. கச்சேரிகளில் புகழ்மிகு வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதிலும் அவர் பிரபலமாக இருந்தார். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் வயலின் பெட்டியைத் தூக்கிச் செல்வதும் பணிவிடை செய்வதும் பாப்பாவின் வேலையாக இருந்தது.
சங்கீதத்தேர்ச்சி அடைந்துவிட்டதாக உணர்ந்த பாப்பா, சின்னச் சின்ன கச்சேரிகளில் வயலின் வாசித்தார். அந்த நேரத்தில் இசை அமைப்பாளர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் அண்ணன் எஸ்.ஜி.காசி அய்யரின் தொடர்பு கிடைத்தது. காசிஅய்யர், பாடல்களின் இணைப்பு இசையையும், பின்னணி இசையையும் தத்தகாரமாகச் சொல்வார். அதற்கான ஸ்வரங்களை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் பாப்பா. அது 1946ஆம் ஆண்டு. சென்னை வானொலியில் நிலையக் கலைஞராகப் பணியாற்றிய பாப்பாவுக்கு சாத்தூர் சுப்பிரமணியம், டி.கே.ரங்காச்சாரி, ஜி.என்.பி., டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வி., ப்ளூட்மாலி ஆகிய வித்வான்களுக்கு வாசிக்கும் வாய்ப்பு வந்தது. சினிமா உலகுக்கு பாப்பாவைஅறிமுகப்படுத்தியவர் சிட்டாடல் ஜோசப் தளியத். ‘ஆத்மசாந்தி’ மலையாளப் படத்திற்கு 1951ல் இசை அமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப்படம் வெற்றியடைந்தது. கலைஞரின் கைவண்னத்தில் உருவான ‘அம்மையப்பன்’ படத்தில் ‘அம்மையப்பா அருள் புரிவாய்’ பாடல் பாட்டு ரசிகர்களால் புகழப்பட்டது.
‘‘பாடலைக் கொடுத்தவுடன் நான் பாடிக் காண்பிக்க வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்ப்பார். பலமுறை படித்து, பொருளைப் புரிந்துகொண்டு இசை அமைக்க வேண்டும் என்பேன். அவரது வற்புறுத்தலின் பேரில் உடனே ஒரு மெட்டமைத்து பாடிக்காண்பிப்பேன். வார்த்தைகள் நெருடலாக இருந்தால் மாற்றிக் கொடுப்பார். நாமும் வார்த்தைகளை சிதைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை அதிகம்” என்று குறிப்பிடுகிறார் பாப்பா. ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற காலத்தாலும் காலனாலும் அழிக்க முடியாத பாடலை, கீரவாணி ராகத்தில் அமைத்தார் பாப்பா. பாடல் இடம் பெற்ற படம் ‘ரம்பையின் காதல்’. பாப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடகரான சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் அது. பாப்பாவின் இசையமைப்பில் ஈர்க்கப்பட்ட ஜோசப் தளியத், தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்தார். ஆயிரம், இரண்டாயிரம் என்று கதாநாயகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தளியத், பாப்பாவுக்கு 15,000 ரூபாய் கொடுப்பாராம். ‘உங்கள் படத்தில் யார் ஹீரோ?’ என்றால், ‘15000 ரூபாய் வாங்கும் பாப்பாதான் என் படத்தின் ஹீரோ’ என்று பெருமையோடு சொல்வாராம்.
தளியத்தின் சிட்டாடல் நிறுவனம் எடுத்த ‘மல்லிகா’, ‘விஜயபுரி வீரன்’, ‘குமாரராஜா’, ‘இரவும் பகலும்’, ‘விளக்கேற்றியவள்’ ஆகிய படங்களுக்கு பாப்பா இசை அமைத்தார். ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பாடல் ஏ.எம்.ராஜா - சுசீலா குரல்களில் ‘மல்லிகா’ படத்தில் இடம் பெற்று, மனதுகளைக் கொள்ளையடித்தது. ‘குறவஞ்சி’ படத்தில் சி.எஸ்.ஜெயராமன் குரலில் ‘யார் சொல்லுவார் நிலவே...’ பாடல் இசையால் ஒளிவீசியது. ‘ஒண்ணுமே புரியல உலகத்திலே’ பாடல் சந்திரபாபுவின் சுந்தரக்குரலால் ‘குமாரராஜா’ படத்துக்கு விலாசமாக அமைந்தது. ‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ பாடல் ‘இரவும் பகலும்’ படத்திலும், ரசிகர்களின் மனத்திலும் இடம்பெற்றது. ‘கத்தியைத் தீட்டாதே’ என்கிற கருத்துச் செறிவுள்ள பாடல் ‘விளக்கேற்றியவள்’ படத்தில் கவனிப்புக்கு உள்ளானது. எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படத்தில் ‘சின்னஞ்சிறு வயது முதல்’ பாடல் பெருவெற்றி பெற்றது. மற்றும் ‘நல்லவன் வாழ்வான்’ போன்ற படங்களிலும் பாப்பாவின் இசை பரவலான வரவேற்பைப் பெற்றது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தால அருவியிலே’ மற்றும் ‘சிரிக்கின்றான்’ பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.
‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று பாப்பா இசையமைத்த பாடல், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ மெட்டைத் தழுவி உருவாகி, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டது. ‘வைரம்’ படத்தில் எஸ்.பி.பி.யும் ஜெயலலிதாவும் பாடிய பாடல் ‘இருமாங்கனி போல் இதழ் ஓரம்’. ‘அந்தப் பாடல்தான் நான் பாடிய பெஸ்ட் டூயட்’ என்று ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பாப்பா இசை அமைத்த ‘அருணகிரிநாதர்’ படத்தில் டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடல் ஆன்மிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் பிரகாசிக்கிற பாடலாக விளங்குகிறது. இந்தப் பாடலை மனப்பாடம் செய்து சரியாக ஒப்புவித்துவிட்டால் தொலைக்காட்சித் தொகுப்பாளினிகள் நல்ல தமிழை நமக்குத் தரமுடியும். அபிராமி அந்தாதியை நூறு ராகங்களில் இசையமைக்கும் முயற்சியில் சோர்ந்து போய்விட்டாராம் பாப்பா. சீர்காழி கோவிந்தராஜனின் ஆலோசனைப்படி மயிலை கற்பகாம்பாளை, காலையும் மாலையும் 108 முறை பக்தியுடன் வலம் வந்து வணங்கியிருக்கிறார் பாப்பா. அப்புறமென்ன? அவர் இசைத்த அபிராமி அந்தாதி இன்று உலகமெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரம் பக்திப் பாடல்களுக்கு மேல் பாப்பாவின் இசையில் பாடியிருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன். அவற்றில் ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடல் சங்கீதச்சிகரம் தொட்டு இதயங்களை வருடிக் கொண்டிருக்கின்றது. தமிழக இசைக்கல்லூரியின் முதல்வராக இருந்து பெருமை சேர்த்த டி.ஆர். பாப்பா 2004ஆம் ஆண்டு, தன்னுடைய 81ஆம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நன்றி: வண்ணத்திரை
Comments