தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு நினைவு நாளின்று!

 தமிழ் & தெலுங்கு பட உலகில் தனி ஆட்சி நடத்திய இயக்குநர் பி.ஆர். பந்துலு நினைவு நாளின்று!















சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னட, தெலுங்கு பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு. பிரம்மாண்டமான படங்கள் என்றால் அது பந்துலுவால் மட்டுமே முடியும் என்று அளவுக்கு, தான் தயாரித்து இயக்கிய படங்கள் அனைத்தையும் சிறந்த கருத்துச்செறிவும், கலையம்சமும் கொண்ட அரிய படைப்புகளாக அளித்தவர்.ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களாய் இன்றும் சொல்லப்படும் செசில் பி டெமிலியின் “டென் கமாண்ட்மென்ட்ஸ்’ வில்லியம் வைலரின் “பென்ஹர்’ போல் தமிழில் படங்கள் தயாரிக்கப்படவில்லையே என்ற குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்தவர் பி.ஆர். பந்துலு.
பொதுவாக சினிமா இயக்குநர்கள் பலரும் தங்களுக்கு எந்தக் கதையில் சுலபமாக வெற்றி கொடுக்கிறதோ அது தற்காலிகமாக இருந்தாலும், மக்கள் சலிப்படையும் வகையில் அதிலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.ஒருவருக்குக் குடும்பக் கதைகளே கைகொடுக்கும், அடுத்தவர் கிராமியப் பாடல்களிலேயே திறமை காட்டுவார். மற்றவர் மசாலாப்படங்களிலேயே வெற்றிகளை குவிப்பார். இன்னொருவர் காதல் கதைகளில்தான் சோபிப்பார். இப்படி ஒருவழிப்பாதையிலேயே வெற்றி காண்பவர்கள் மற்ற புதிய கதைக் களங்களில் நுழைவதற்கு ஆர்வம் கூடக் காட்டாதது துரதிருஷ்டம் கலந்த வேதனை. ஆனால் பந்துலுவோ பலவிதமான கதைகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு உதாரணமாகச் சில படங்கள்………(தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)
வீரபாண்டிய கட்டபொம்மன்: வெள்ளையர் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஆவேசமாய்ப் புறப்பட்ட ஒரு சரித்திர நாயகனின் வீர வரலாறு. சிவாஜிகணேசன் தனது உணர்ச்சி மிக்க நடிப்பின் மூலம் கட்டபொம்மனையே கண்முன் நிறுத்தினார். இந்தப் படத்தின் சிறப்புகளை எடுத்தரைத்தால் அது கணக்கில் அடங்காது.இருப்பினும் சில முக்கியமானவற்றை சொல்லத்தான் வேண்டும். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு வெளிவந்து பரபரப்பான வெற்றியைக் கொடுத்ததுடன், பல விருதுகளையும் தட்டிச் சென்றது. இப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஜெமினி அதிபர் வாசனும் இதைத் தயாரிக்க விரும்பினார். சிவாஜியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அது கைவிடப்பட்டதாக ஒரு செய்தியும் உண்டு. அத்துடன் தென்னிந்தியாவின் முதல் டெக்னி கலர் படம் என்ற சாதனைச் சிறப்பும் கொண்டது. (முதலில் கோவா கலரில் தயாரிக்கப்பட்டு பின் லண்டனில் டெக்னிகலராக மாற்றப்பட்டது). இப்படத்தைப் பார்த்த சில வெளிநாட்டுச் சினிமா விமர்சகர்கள் பந்துலுவை செசில் பி டெமிலிக்க நிகராகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பி.கே.பி. தலைவர் அத்வானி “என் வாழ்நாளில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. உலகின் அற்புத நடிகர்களில் சிவாஜியும் ஒருவர்’ என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன்: சுதந்திர உணர்ச்சிக்கு ஓர் உதாரண காவியம் வ.உ.சி., பாரதி, சிவா ஆகிய மூன்று கதாபாத்திரங்களிலும் முறையே சிவாஜி, எஸ்.வி. சுப்பையா, டி.கே.ஷண்முகம் ஆகியோரை அப்படியே வாழவைத்துக் காட்டிய பந்துலுவின் தனித்திறமையில் மிளிர்ந்த படம்.
சபாஷ் மீனா, பலே பாண்டியா: முழு நீள நகைச்சுவைப்படங்கள், சிவாஜி கணேசனை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மாற்றிக்காட்டிய படங்கள். அதுவும் பலே பாண்டியாவில் 3 சிவாஜி, 2 எம்.ஆர். ராதா என்று சற்றுக் கழப்பமான கதைக் களத்தைக் கொண்டதாகும். படம் பார்ப்போரை இந்தக் கதை எப்படி முடியும் என்று சிந்தித்தவர்களை, தனது கைதேர்ந்த இயக்கம் மூலம் வியக்கவும் சிரிக்கவும் வைத்த வெற்றிகண்டது பந்துலுவால் மட்டுமே முடியும்.



கர்ணன்: தலைசிறந்த கொடையாளியைப் பற்றிய புராணம், மகாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரம் என்பதால் கர்ணனைப் பற்றி மட்டும் சொல்லாமல் மகாபாரதத்தின் முக்கியச் சம்பவங்களையும் தொகுத்து கதை, இசை, பாடல், ஒளிப்பதிவு ஆகியவை அனைத்தும் பந்துலுவின் இயக்கம் எனும் கைவண்ணத்தால் பலரும் பாராட்டும் நேர்த்தியான கலைப்படைப்பாகத் திகழ்ந்தது. சிவாஜி மட்டுமின்றி மற்ற பொருத்தமான நடிகர்களும் தங்கள் தன்னிகரற்ற நடிப்பால் மகாபாரதத்தைக் கண்ணெதிரே காட்டினர் என்றால் அது மிகையல்ல! அதுமட்டுமல்ல; 1964இல் வெளிவந்த கர்ணன் படம் சுமார் அரை நூற்றாண்டுக்குப் பின் கடந்த 2010ஆம் ஆண்டு ஈடி கீஞுண்tணிணூச்tடிணிண எனப்படும் கம்ப்யூட்டர் சார்ந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மெருகேற்றப்பட்டுத் திரையிடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் மீண்டும் மகத்தான வரவேற்பு. இன்றைய தலைமுறை தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சுமார் நான்கு தலைமுறை ரசிகர்களும் படத்தின் சிறப்பை வாய் பிளந்து தங்களை மறந்து ரசித்தது தனிக்கதை!
முரடன் முத்து: முரட்டுச் சுபாவம் கொண்ட அப்பாவி இளைஞனைச் சுற்றிப் பின்னப்பட்ட கிராமியம் கலந்து நல்ல குடும்பக்கதை. எங்க பாப்பா: ராசியில்லாதவளச், தொட்டது துலங்காது என்று ஊர் மக்களால் ஒதுக்கிவைக்கப்படுகிறார் ஒரு 7 வயது சிறுமி. ஆனால் இயற்கையிலேயே பல நற்குணங்கள் கொண்ட அச்சிறுமியோ தனது அறிவுத்திறமையால் ஒரு பெரிய ரயில் விபத்தைத் தவிர்த்து, பலரைக் காப்பாற்றி ஊர்மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறாள்.
ஆயிரத்தில் ஒருவன்: எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த கடற்கொள்ளையர் களைப் பற்றிய கதை. (இதற்கு பந்துலுவால் “சின்னத கொம்பே’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் ஜெயலலிதா) ஆயிரத்தில் ஒருவன், நீண்ட இடைவெளிக்குப் பின் எம்.ஜி.ஆரின் அற்புதமான கத்திச் சண்டை நிறைந்த படம். பெரும் பகுதி கோவா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதியில் படமாக்கப்பட்டது. 65களில் வெளிவந்த இப்படம் கர்ணன் படத்தைப் போலவே டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்டு வெள்ளி விழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய படங்கள் வெற்றிகரமான 10வது நாள் என்று போஸ்டர்கள் ஒட்டும் அவலநிலையும் நினைவுக்கு வந்தது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு கடந்த இந்தப் படத்தின் தன்னிகரற்ற வெற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களை மட்டுமல்லாது, இன்றைய தொழில் நுட்பக் கலைஞர்களையும் பிரமிக்க வைத்தது.
ரகசிய போலீஸ் 115: 1960 – 65களில் இந்திய நாவல்கள், சினிமாக்களில் சி.ஐ.டி. என்ற கதாபாத்திரம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அதன் பின்னர் இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வயது வித்தியாசமின்றிப் பலரையும் கவர்ந்ததால் அந்தப் பாணியில் வந்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்று. பின்னர் பலரும் இதே பாணியைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நாடோடி: மகாத்மாவின் தீண்டாமைக் கருத்தை வலியுறுத்தும் சிறந்த கதையமைப்பைக் கொண்ட படம். தேடிவந்த மாப்பிள்ளை: குடும்பக்கதையுடன் நல்ல பாடல்கள், சிறந்த இசை, சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு மசாலாப்படம்.
இப்படி கலையுலகில் பல சாதனைகள் புரிந்த பந்துலு கடந்த 8.10.1974இல் காலமானார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,