கண்ணதாசனும் விஸ்வநாதனும்
கண்ணதாசன்
"இந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை..
'ஆமாம்,.. நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன் என்று எழுதுவதில் என்ன பொருள் ? ' என்று நண்பர்கள் கேட்கக்கூடும்.
காரணம் உண்டு.
தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங்களாக நான் சந்திக்கவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்ததில்லை. தம்பி ஏராளமான ரீ - ரெக்கார்டிங்குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.
உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாதனுக்குத் தெரியும். விஸ்வநாதனுடைய இசைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ' யில் எகிப்திய இசையைக் கேட்டேன். 'தென்றல் வந்து வீசாதோ ? " பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாடையைக் கண்டேன், அபூர்வ ராகத்தில் நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ" என்ற பாடலில் மெக்ஸிகன் ஆர்ப்பாட்டத்தைக் கண்டேன்...சொல்லி கொண்டே போனால் இடம் போதாது.
கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.
"ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.
காபூல் நகரில் தங்கி இருந்தபோது , " இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன் "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.
பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
ஆனால் அவனோடு பாட்டெழுத உட்கார்ந்துவிட்டால் பொழுது போவதே தெரியாது.
முப்பது வருடங்கள்.
தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.
எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
தம்பிக்கும், மாமா (கே.வி.மகாதேவன்) வுக்கும் அஸ்திவாரம் மிகப் பெரியது.
ஏழுவயதில் இரண்டு ரூபாய் சம்பளத்தில் கம்பெனி நடிகனாக வாழ்க்கையைத் துவங்கிய விஸ்வநாதன், பட்டபாடு கொஞ்சமல்ல. பதினாறு வயதில் வைரம் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது ஒரு நெக்லஸைத் திருடி விட்டதாகத் தம்பியைப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸார் அவனை அடித்தும் விட்டார்கள். பிறகு செட்டியாருடைய மெத்தைக்கு அடியிலேயே நெக்லஸ் கிடைத்தது.
ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.
முன்பெல்லாம் இரவு பதினேரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தால் அது ஏ.எல்.எஸ் அல்லது விஸ்வநாதனாக இருக்கும். இப்போது விஸ்வநாதன் மட்டுமே.
இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?
இரண்டும் பாதிப் பாதி.
'ஆகாயப் பந்தலிலே' இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை' பாட்டுக்குப் போடப்பட்ட இசை.
"இது நன்றாக இல்லை" என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.
' மாலையிட்ட மங்கை ' படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.
ஆயிரம் புகழ் வந்தாலும், யாரையும் எடுத்தெறிந்து பேசாத குணம், தம்பி, மாமா, புகழேந்தி மூவருக்கும் உண்டு.
நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை " என்ற பாட்டு.
எந்த இரவிலும் நான் போட்டுக் கேட்பது நான் எழுதி தம்பி இசை அமைத்து, சரஸ்வதி ஸ்டோர் பதிப்பித்த ஸ்ரீ கிருஷ்ண கானமே அதைக் கேளாமல் நான் தூங்கியதே இல்லை. இதுவரை அது போல் ஒரு பக்திப் பாடல் வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.
எழுத எழுத எவ்வளவு விஷயங்கள் வந்து குவிகின்றன எதைச் சொல்வது, எதை விடுவது ?
பெங்களூர் உட்லண்ட்ஸ், ரூம் நெம்பர் முப்பத்தாறு. 'கர்ணன்', பாத காணிக்கை' எல்லாமே அங்கேதான். "வீடு வரை உறவு " பிறந்த இடமும் அதுதான்.
பம்பாய் ஜன்பத் ஓட்டலில், எழுதி எழுதிப் பார்த்து முடியாமல் திரும்பி விட்டோம்.
நானும் தம்பியும் பாண்டிச்சேரியில் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், காரைக்குடியில் என் சுவீகாரத்தாயார் இறந்துவிட்ட செய்தி வந்தது. தம்பியின் காரை எடுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தேன்.
1962ல் நான் இறந்து விட்டதாக தம்பிக்கு யாரோ தொலைபேசியில் சொன்னார்கள். தம்பி சாரதா ஸ்டுடியோவில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு முட்டி மோதிக் கொண்டு ஓடி வந்தான். அதுபோலவே செய்தி கேட்டு எம்.வி. ராஜம்மா, எம்.ஆர்.ராதா, கிருஷ்ணன் - பஞ்சு ,பீம்சிங், ஸ்ரீ தர், சம்பத் ஆகியோர் ஓடிவந்தார்கள்! எம்.ஜி.ஆர். டெலிபோனில் துழாவினார்.
நான் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
தொலைபேசியில் வதந்தி பரப்பியது யாருமல்ல...நானே தான் !
தம்பி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.
இந்த வகையில் அவனை நான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை."
இணையத்தில் இருந்து எடுத்தது
thanks kandasamy.r
Comments