போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, வேளச்சேரியில் ரூ.160 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள்

 போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, வேளச்சேரியில் ரூ.160 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள்

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை கோயம்பேடு, வேளச்சேரியில் ரூ.160 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.108 கோடி மதிப்பில் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம்-வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 2 அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தன.சென்னை,

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் ரூ.67 கோடி மதிப்பில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பால பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தன.

4 வழிச்சாலை மேம்பாலம்

1,028 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட சர்வீஸ் ரோடு மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே 100 அடி சாலையில் ரூ.93 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் 980 மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை மேம்பாலம் ஆகும். 1.20 மீட்டர் அகலத்துக்கு மைய தடுப்புடன் கூடிய இருபுறமும் 7.5 மீட்டர் அகலம் உள்ள ஓடுதளம் கொண்ட சாலை மேம்பாலமாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் வசதி

இந்த மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சேவை சாலைகளின் அகலம் பாலப்பகுதியில் 12 முதல் 14 மீட்டர் வரையிலும், அணுகு சாலை பகுதியில் 9 மீட்டர் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

சேவைச்சாலையின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த 2 மேம்பாலங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று புதிய மேம்பாலங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

புதிய பாலங்களை திறந்து வைத்த பின்பு, வேளச்சேரி பாலத்தில் மு.க.ஸ்டாலின் காரில் பயணம் செய்து பார்வையிட்டார். அதேபோன்று கோயம்பேடு பாலத்தில் சிறிது நேரம் நடந்து சென்றும், பின்னர் காரில் சென்றும் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, புதிய மேம்பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலின்றி உற்சாகமாக மேம்பாலம் வழியாக பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பி.ஆர்.குமார், தலைமை என்ஜினீயர் (நெடுஞ்சாலை) ரெ.கோதண்டராமன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாகன ஓட்டிகளின் சிரமம் குறையும்

வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தால் தரமணி இணைப்புச் சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தரமணியில் இருந்து வேளச்சேரி புறவழிச்சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த பயன் அடைவர். விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமம் குறையும். இந்த பாலத்தின் மூலம் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம்சாலை, தொழில்நுட்ப பூங்கா சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன் பெறுவர்.

பொதுமக்கள் பயன் அடைவர்

கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் ஜெய் நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் வரை செல்கிறது.

இந்த புதிய மேம்பாலத்தால் காளியம்மன் கோவில் சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலைய நுழைவு வாயில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

திருமங்கலத்தில் இருந்து வடபழனி மற்றும் வடபழனியில் இருந்து திருமங்கலம் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தின் மூலம் பயன் அடைவர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,