தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்

 



தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு

இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை மாசு இல்லாத வகையில் கொண்டாடுவது அனைவரின் கடமை. அதிக மாசுவை ஏற்படுத்தும் குறிப்பிட்ட வகையிலான பட்டாசுகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பட்டாசுகளின் புகையால் கடுமையான சுவாசக்கோளாறு, கண்களில் நீர் வடிதல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காற்று மற்றும் நீர் மாசுபாட்டுக்கும் வழிவகுக்கிறது. சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது.

சரவெடிக்கு தடை

பேரியம் உப்பு பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகள், சரவெடிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

குறைந்த அளவு மாசுஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க பட்டாசு தொழிற்சாலைகள் முன்வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பசுமை பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளது.

2 மணி நேரம் மட்டுமே அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டுகளில் பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த ஆண்டும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல்8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி பாதுகாப்பான மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல்8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதிக ஒலி மாசுவைஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த பட்டாசுகளானசரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

வெடிக்கக்கூடாது

மருத்துவமனைகள், பள்ளிகள், கோர்ட்டு, வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களின் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது.

குடிசைகள் அதிகம் உள்ள பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதி போன்ற இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கமுடியும். இயற்கையோடு இணைந்து தீபாவளியை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,