அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்...
அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்...*
பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் உடல் சார்ந்த சிரமங்களை மட்டுமில்லாமல் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன.
மாதவிடாய் சுழற்சி தொடங்குவது முதல் கருவுறுதல், மகப்பேறு மற்றும் மாதவிடாய் சுழற்சி நிற்பது வரையிலான காலகட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களின் சுரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். அவை குறித்து இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் சார்ந்த மன அழுத்தம்.
பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை பி.எம்.எஸ் என குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பாக தொடங்கி ரத்தப்போக்கு தொடங்கிய பின் படிப்படியாக குறையும். வயது அதிகரிக்கும் போது இதன் தன்மை மாறுபடும்.
உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போதிய தூக்கமின்மை அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு சீராகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல்பருமன், தைராய்டு குறைபாடு, நேரம் தவறி உண்ணுதல், அதிக அளவு உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். இதனால் குழந்தைப்பேறு தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் தக்க சிகிச்சைகளை மேற்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும்.
அதிக வயிற்று வலி
மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பாக ஆரம்பித்து மாதவிடாய் முடிந்த சில நாட்கள் வரை சிலருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படலாம். வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
அதிக ரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை ரத்தப்போக்கு நீடிக்கும். இதனால் உடல் மிகவும் சோர்ந்து போகும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
Comments