*போனவன் போனாண்டி*/ வெ.பெருமாள்சாமி

 ....*போனவன் போனாண்டி* 

தொடர் பகுதி (2 )



*போனவன் போனாண்டி*





சங்க காலத்தில் கணவனை இழக்கும் பெண்களின் நிலையும் பெரிதும் வேறாக இல்லை. பிற்காலத்திய அவலங்கள் அப்போதும் நிகழ்ந்துள்ளன.


வெளிமான் என்ற மன்னன் இறந்துவிடுகிறான். அவனுடைய உரிமை மகளிர் மார்பில் அறைந்து அழுகிறார்கள்.. 

அது இயற்கைதான்.. 


அப்படி அடித்து அழும் போது கை வளைகள் உடைந்து சிதறுகின்றன.. 


இப்போதெல்லாம் வாழை மரத்தின் தாரில் காய்கள் முதிர்கையில் முனையிலுள்ள பூவை அரிந்து சமைத்துவிடுகிறோம்.. அரியாமல் அப்படியே விட்டுப் பாருங்கள்.. பூக்கள் ஓரிரு நாளில் பொல பொலவென்று கொட்டிவிடும்.. 


அதுபோல அவர்கள் வளையல்கள் உதிர்ந்தன என்கிறார் பெருஞ்சித்திரனார்.


"வாழைப் பூவின் வளைமுறி சிதற"                 -- (புறம் 237)


இன்னும் அவர்கள் தொடி என்னும் அணிகலன் இழப்பதை அவர்,


"தொடிகழி மகளிரின் வாடி" 

                                       -- (238)


என்று குறிக்கிறார்.


தாயங்கண்ணியாரின் பாடல் ஒன்று,


"கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி உணவின் மனைவி.." 

                             -- (புறம் 262)


என்கிறது.


"கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉ ..."   -- (புறம் 262)


என்ற வரிகள் கூந்தல் களைந்து மொட்டையடிக்கப்படுதலைச் சொல்கின்றன.


இவையெல்லாம் கணவன் இறந்த நிலையில் மகளிர் ஏற்கவேண்டிய அலங்கோலங்களாக அன்றும் இருந்துள்ளன.


பூதப்பாண்டியன் என்னும் அரசன் இறந்து, அவனைச் சிதையிலிட்டுத் தீயிடத் தயாராகின்றனர்.. 


அவனுடைய மனைவி பெருங்கோப்பெண்டு'வும் உடன் தீப்பாய்ந்து உயிர் விடத் துணிகிறாள்... ஆனால், சான்றோராகிய பெரியவர்கள் *தடுக்கிறார்கள்..*

சதி மாதா என்ற பெயரில் அவர்கள் அவளை வலியத் தூக்கித் தீயிலிடவில்லை.. அவர்கள் தடுக்கவே முனைகிறார்கள்.. 


she does it on her own volition.. it is her decision.. அப்படி அவள் முடிவெடுப்பதற்கு வலுவான காரணம் இருந்தது.. 


அவள் முன் இருந்தவை இரண்டே options :

ஒன்று - உடன் உயிர் நீத்தல்

அடுத்தது - கைம்மை வாழ்க்கை


அவள் இரண்டு நிலைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்கிறாள். மேலே பார்த்தோம்.. 

கணவன் மாண்டதும் அவன் மனைவிக்கு என்னென்ன நடக்கின்றன என்று.. அணிகலன்களை இழக்க நேர்கிறது.. கூந்தல் களையப்படுகிறது..


பூதப்பாண்டியன் மனைவிக்கு, அதன் பிறகான கைம்மை வாழ்வின் torture'ம் பெரிதாகத் தெரிகிறது.. 

அது மதிப்பிற்குரியதான பெருமிதமான தேர்வாக இருக்கமுடியாது.. 


தண்ணீரைச் சிறைக் காவலர்கள் கண்ணியமாகக் கொண்டு வந்து தரவில்லை என்று மானத்தோடு உயிர் விட்ட கணைக்கால் இரும்பொறை பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன..


"பழைய சோற்றைப் பிழிந்து அதில், நெய் சேர்க்காமல் கொஞ்சம் புளி இட்டு வேக வைத்த வேளைக் கீரையைப் பிசைந்து, அதை வெள்ளை எள் துவையலுடன் உண்டு, பாயில்லாமல் கூழாங்கல் தரையில் படுக்கிற கொடுமையைவிட,

பிணப் படுக்கை ஒன்றும் கொடியது அல்ல.. 

இதழ் மலர்ந்த தாமரைப் பொய்கையும் இந்த ஈமத் தீயும் ஒன்றுதான்" என்கிறாள்.


"பல்சான் றீரே! பல்சான் றீரே!

செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!

......  .....  .....  ......

 நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆகப்

பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!"

                                -- புறம். 246


(சூழ்ச்சி = ஆராய்ச்சி;

அடையிடை = பானையின் அடிப் பக்கத்தில்; 

பிண்டம் = சோற்று உருண்டை. 

சாந்து = துவையல்;

அட்ட = சமைத்த;

வேளை = வேளைக் கீரை; 

வெந்தை = வேகவைக்கட்ட; 

வல்சி = சோறு; 

பரல் = சிறிய கல்;

பாயின்று - பாய் இல்லாமல்;

வதிதல் = தூங்குதல்;

உயவல் = வருத்தம்;

பெருங்காடு = சுடுகாடு; 

கோடு = மரக் கொம்பு (விறகு).)


நேற்று கோப்பெருந்தேவி, இன்று பெருங்கோப்பெண்டு, இருவரும் கணவன் மேலுள்ள காதலால், அவன் இறப்பைத் தாங்கமுடியாத துயரத்தில் உடன் மாயவில்லை.


'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று ஒரு அனாதரவு நிலையைத்தான் நெடுஞ்செழியன் தேவி சொல்கிறாள்.


'உயவல் பெண்டிரேம் அல்லேம்' என்று விதவை வாழ்வின் வருத்தத்தைத் தாங்கி வாழ்வது வேண்டாம், அந்த மகளிரில் நான் ஒருத்தி அல்லள் என்கிறாள் பூதப்பாண்டியன் மனைவி.



சங்க கால அரச வாழ்வு முதல், பிரிட்டிஷ் ஆட்சியின் வறுமைக் காலம் வரை, பின்னரும் கூட,

-- இன்றைய சீர்திருந்திய போக்கு நீங்கலாக --

விதவை அவலம் அல்லது உடன் உயிர்துறத்தல் என்பது பெண்கள் மீதே இறக்கி வைக்கப்பட்ட நிலைக்கு ஏன் பொருளியலில் போய் காரணத்தை ஆராயவேண்டும்.


'பொண்டாட்டி செத்தா புருஷன் புதுமாப்பிள்ளை' 

--அவன் ஐம்பது வயதானாலும்--

என்ற சொல்லாடல் மாறவேண்டாமா..


என்ன.. ஒரேயடியாக இப்படி இறப்பு, உடன்கட்டை, விதவைக் கோலம் என்று அழுகாச்சியாகப் போகிறதே.. 

அதற்கு என்ன செய்வது.. எடுத்துக்கொண்ட பொருள் அப்படி..


'(தொடரும்)

புலவர் வெ.பெருமாள்சாமி                    -

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,