நீரிழிவு நோயால் பசியின்மை பிரச்னை வருமா?
நீரிழிவு நோயால் பசியின்மை பிரச்னை வருமா? இதற்கென்ன தீர்வு?* 💚
என் வயது 64. நீரிழிவு இருக்கிறது. க்ளிப்டகிரேட் எம் 500 மாத்திரையை காலை மற்றும் இரவு எடுத்து வருகிறேன். எனக்கு பசியே எடுப்பதில்லை. ஆனாலும் சிரமப்பட்டு சாப்பிடுகிறேன். பெரும்பாலும் இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுகிறேன். நான் எடுத்துவரும் மாத்திரை சரியானதுதானா... பசியின்மைக்குத் தீர்வு சொல்வீர்களா?
- சுகந்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``நீங்கள் எடுத்துக்கொள்வது சர்க்கரைநோய்க்கான மருந்துதான். உங்களுக்கு எத்தனை வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது, அது கண்டுபிடிக்கப்பட்டபோதும், இப்போது சிகிச்சையிலிருக்கும்போதும் ரத்தச் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்கள் இல்லை. ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய உங்கள் நிலை குறித்து உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். ஏனெனில், நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, இதயநோய்கள் போன்றவை உள்ளனவா என்று கண்டறிவது மிக அவசியம். 64 வயது என்பதால் புராஸ்டேட் சுரப்பி குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்கப்) தேவைப்படும். இந்த வயதில் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், நரம்புகள் ஆரோக்கியம் குறித்தும் அறிய வேண்டும்.
நீரிழிவு மற்றும் முதிய வயது காரணமாக இவை சார்ந்த பாதிப்புகள் வர வாய்ப்புண்டு. உங்களுக்கு புகை மற்றும் மதுப் பழக்கம் இருக்கிறதா, உணவுப் பழக்கம் எப்படிப்பட்டது, உடற்பயிற்சிகள் செய்பவரா போன்ற தகவல்கள் இல்லாததால் உங்கள் உடல் குறித்த முழுமையாக அறிய முடியவில்லை.
பசியின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். தனிமை, கவனித்துக்கொள்ள ஆளில்லாத நிலை, குடல் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஜீரண மண்டல மாற்றங்கள், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை, தவறான உணவுப்பழக்கம், தூக்கமின்மை, புகை, மதுப் பழக்கங்கள், நீண்டகால நோய்கள், மனச்சோர்வு, பயம், பீதி, விரக்தி, பதற்றம் எனப் பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இரவில் உணவைத் தவிர்ப்பது தவறு. அப்படித் தவிர்ப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு குறையும். அது தற்காலிகமானதுதானே தவிர, நிரந்தரமல்ல. எனவே, நீங்கள் சிகிச்சைபெறும் மருத்துவரிடம் எல்லா விஷயங்களையும் குறிப்பிட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிகிச்சைகளையும் வாழ்வியல் முறையையும் உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுங்கள்."
Comments