Monday, November 8, 2021

ஜான் மில்டன்

 உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் (John Milton) அவர்களின் நினைவு  தினம் இன்று (நவம்பர் 8).  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1608) பிறந்தார். தந்தை பத்திரம் எழுதுபவர், கவிஞர். படிக்கும்போதே மில்டனும் கவிதைகள் எழுதி வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார். ஷேக்ஸ்பியர் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ மதம், பைபிளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். அவரது ஆழமான இந்த அறிவுதான் பின்னாளில் உலகமே போற்றிக் கொண்டாடும் பல படைப்புகளை உருவாக்க இவருக்கு உதவியது. படித்து முடித்த பிறகு பாதிரியாராக வேண்டும் என்பது இவரது ஆசை. படித்து முடித்தவர், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். நூல்கள் வாசிப்பதில் அதிக நாட்டம் இருந்ததால், ஏராளமான அரிய நூல்களை வாசித்தார்.

 பிரான்ஸ், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். இப்பயணத்தில் விஞ்ஞானி கலிலியோவை சந்தித்தார். இதை தனது வாழ்நாளின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதினார். இதுகுறித்து ‘பாரடைஸ் லாஸ்ட்’ அமர காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 1639-ல் நாடு திரும்பியதும், பன்மொழிப் புலமை பெற்றவராக, அற்புதக் கவிஞராக அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். ஏராளமான கவிதைகளை எழுதினார். ‘ஆன் தி மார்னிங் ஆஃப் கிறைஸ்ட்ஸ் நேடிவிட்டி’, ‘ஆன் ஷேக்ஸ்பியர்’ போன்ற கவிதைகள் இவரது ஆரம்பகாலப் படைப்புகள்.

 உரைநடையிலும் முத்திரை பதித்தார். ‘தி டாக்ட்ரின் அண்ட் டிசிப்ளின் ஆஃப் டிவோர்ஸ்’, ‘ஆஃப் எஜுகேஷன்’, ‘பிலாசபி அண்ட் பாலிடிக்ஸ்’, ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்’ என பல படைப்புகள் இவரது கற்பனையில் வடிவம் பெற்றன.

l மறைந்த நண்பர் எட்வர்ட் கிங் நினைவாக ‘லிசிடஸ்’ என்ற இரங்கற் பா எழுதினார். அது ஆங்கில இலக்கிய இரங்கற் பாக்களிலேயே தலைசிறந்ததாக கருதப்படுகிறது. இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட.

 இங்கிலாந்தில் 1640-ல் புரட்சி வெடித்தது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எழுந்தன. மன்னர் ஆட்சிக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினார். முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அப்போது, இவரது பார்வை பாதிக்கப்பட்டது. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது.

 தன் பிள்ளைகள், உதவியாளர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். படைப்பு பணியையும் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான் இவரது ‘மாஸ்டர்பீஸ்’ எனப்படும் படைப்பான ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தை படைத்தார். உலகத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இக்காவியம் அந்த நாளில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

 ‘சாம்சன் அகானிஸ்ட்’ என்ற நாடக நூல் இவரது இறுதிப் படைப்பு. ஆங்கிலக் கவிஞர்களில் அதிகம் உவமைகளைப் பயன்படுத்தியவர் இவரே எனக் கருதப்படுகிறது.

 இவரை வழிகாட்டியாகவும் ஆதர்ச கவிஞராகவும் உலகம் முழுவதும் பலர் ஏற்றனர். அதில் வில்லியம் வேர்ட்ஸ்வர்த், வில்லியம் பிளேக், ஜான் கீட்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளியான ஜான் மில்டன் 66-வது வயதில் (1674) மறைந்தார்

No comments: