மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு:
மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: கனமழையால் பக்தர்கள் வருகை குறைவு
பத்தனம்திட்டா: மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு பூஜைகளுக்கு பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே முன்பதிவு செய்த 30,000 பக்தர்களில் 8,000 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். இதனால் விரைவாக தரிசனம் செய்ய முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் கொரோனா பரவல் காரணமாக தினந்தோறும் 30,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்று கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் நிலக்கல்லுக்கு வந்து நேரடியாக வந்து முன்பதிவு செய்யும் வசதி நாளை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததும் நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு தொடங்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது....
Comments