சர்வதேச சகிப்புத்தன்மை தினம்;

 இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்; தனிமனித ஒழுக்கத்தின் கோட்பாடு கடைபிடிக்க வேண்டியது அவசியம்.!



சேலம்: உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 16ம்தேதி (இன்று) ஐக்கிநாடுகள் சபை சார்பில் சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கான அவசியத்தை வலியுறுத்தவும் இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பூமியானது பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. மொழி, ஜாதி, மதம், பொருளாதாரம் என்று பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தே ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வேற்றுமைக்குள் ஒற்றுமை தான் ஜனநாயகம் என்றாலும் இது தொடர்பான தாக்குதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் மக்கள் ஆளாகும் நிலை இன்றளவும் தொடர்கிறது. இதற்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்று இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம்.


அதிலும் சமீபகாலத் தலைமுறைகள் சகிப்புத்தன்மை என்றால் என்ன? என்று  கேட்கும் நிலை நீடிப்பது வேதனைக்குரியது.  சகிப்புத்தன்மை வேண்டும் என்பது நாட்டுக்கு பிரதானமாக இருந்தாலும் அது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், அதிகாரி-ஊழியர்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் சகிப்புத்தன்மை இல்லாததால் பெரும் சங்கடங்களை சந்திக்க வேண்டியது கட்டாயமாகிறது.  தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படை கோட்பாடு தான் சகிப்புத்தன்மை. அன்பு, அரவணைப்பு, அறவாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சகிப்புத்தன்மை. இது கடந்த காலத் தலைமுறையில் நடைமுறையில் இருந்தது. பல்லாண்டுகளாக நம்மீது அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு காரணம் நமது முன்னோர்கள் காட்டிய சகிப்புத்தன்மை என்றால் அதுவும் மிகையல்ல.


இன்று உலகமே வியக்கும் பல அரிய படைப்புகளும், தாஜ்மஹல், தஞ்சாவூர் கோயில் என்பது  போன்ற வியப்பூட்டும் பொக்கிஷங்களும் அவர்களின் சகிப்புத்தன்மையால் வடிவமைக்கப்பட்டு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஞாலம் மறந்துவிட்ட சகிப்புத்தன்மையை இன்றைய தலைமுறை மட்டுமன்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதற்காகவே 1996ம் ஆண்டு முதல் சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.மனித குலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளுக்கு  அடிப்படையாக இருப்பது சகிப்புத்தன்மை. எனவே சகிப்புதன்மை என்ற ஒன்று மட்டும் மனித மனங்களில் நிலைகொண்டு விட்டால் மற்றவை அனைத்தும் தானாக மலர்ந்துவிடும். இதன்மூலம் தேசமும் பெரும் மகிழ்வுடன் பயணிக்கும் என்று நம்பிக்கை ஊட்டி வருகின்றனர் இதற்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,