என். லிங்குசாமி

இன்று 14.11.2021

கவிஞர் ,ஓவியர் திரைப்பட தரிப்பாளர் மற்றும் இயக்குனர்

 திரு என். லிங்குசாமி அவர்களின் பிறந்த நாள்



அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார் அவரின் நண்பர்

கவிஞர் பிருந்தா சாரதி

என் இனிய நண்பர் இயக்குனர் என். லிங்குசாமி அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

.
*
எல்லாச் சொல்லுக்கும்
எதிர்ச் சொல் உண்டு.
இன்பம் × துன்பம்
உயரம் × பள்ளம்
வெளிச்சம் × இருட்டு
நம்பிக்கை × துரோகம்
உறவு × பிரிவு .... என்று.
ஆனால் எதிர்ச் சொல் இல்லாத ஒரு சொல் ஆனந்தம்.
அந்நிலை அடைந்தோர்
அதிலேயே நீந்துகிறார்கள்.
மேலே சொன்ன இருமைகளில் நேர்மறை எதிர்மறை இரண்டையும்
இளம் வயதிலேயே பார்த்து அனுபவித்துக் கடந்துவிட்டவர் நண்பர் லிங்குசாமி.
வெற்றி தோல்வி
எல்லாவற்றுக்கும் அதே சிரிப்புதான். 'சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் ' என்று எதிர்வரும் துன்பங்களைப் பார்த்து சவால் விடுவது அவரது புன்னகை.
அவர் செய்த உதவிகளுக்கு விளம்பரமில்லை. ஆனால் தக்க சமயத்தில் அவரைக் காத்தது. அது நிஜம்.
மாதம் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கிய அதே லிங்குசாமியைத்தான் இப்போதும் பார்க்கிறேன். இருவரும் உதவி இயக்குனராகப் பணியாற்றியபோது பார்த்த அதே லிங்குசாமியைத்தான் அவர் இயக்குனராகவும் நான் வசனகர்த்தாவாகப் பணியாற்றும் இந்நாட்களிலும் காண்கிறேன்.
கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ள எவ்வளவு ஆர்வத்தோடு வருவாரோ அந்த ஆர்வம்தான் இப்போதும்... ஒரு புதிய காட்சி தோன்றிவிட்டால் அர்த்த ராத்திரி ஆனாலும் அலைபேசியில் அழைப்பார். படைப்பார்வம்தான் தன் சொத்து என மனதால் நம்புபவர். அன்று முதல் இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதே உழைப்பு
அதே நேரம் தவறாமை
அதே ஈடுபாடு
அதே படைப்பார்வம்
அதே ரசனை
அதே நட்பு
அதே ஆனந்தம்.
முதல் படம் ஆனந்தம் இயக்கியபோதும்
பத்தாவது படம் இயக்கும்போதும்
பல படங்களைத் தயாரித்தபோதும்
அதே லிங்குசாமிதான்.
வாழ்க நண்பா
மேலும் பல வெற்றிகள் கண்டு
மாறாப் புன்னகையோடு
மலை போல் வாழ்க....
*
அன்புடன்
பிருந்தா சாரதி


=====================================



,இவரின் கவிதைகள் மற்றும் ஓவியங்களை பிரபல எழுத்தாளர் இந்துமதி அவர்கள் பேஸ்புக்ல எழுதிய பதிவினை இங்கு பதிவிடுகிறேன்

இவரின் கவிதையாற்றலை நாம் காணமுடிகிறது

இதோ அந்த பதிவு:


லிங்கூ
ஆசிரியர்-லிங்குசாமி
பதிப்பகம்-விகடன் பிரசுரம்
+
டிஸ்கவரி புக்
பேலஸ் (பி) லிட்;
பக்கம்--136
116
விலை-ரூ 125
ரூ110.
லிங்கூ- இரண்டு புத்தகங்களுக்கும் தலைப்பு ஒன்றே. இரு வேறு பதிப்பாளர்கள். தலைப்பு ஒன்றே. ஆசிரியரும் ஒருவரே..இது முதல் புதுமை!
இரண்டாவது புதுமை தன் பெயரையே தான் எழுதிய கவிதைத் தொகுப்புக்களுக்கு வைத்திருப்பது தன்னம்பிக்கை! கம்பீரம்! திறமை! ( இப்போது விகடன் பிரசுர லிங்கூ வை எடுத்துக் கொள்வோம்.)
இவரை இன்னொரு ராவணன் என்று தான் நான் சொல்வேன். அத்தனை முகங்கள். ராவணனின் பத்துத் தலைகளும், முகங்களும் அவனது அசாத்தியமான பத்துத் திறமைகளின் குறியீடே தவிர, பத்துத் தலைகளல்ல என்பது என் அபிப்பிராயம். அதே அடிப்படையில் தான் லிங்குசாமியையும் ராவணன் என்கிறேனே தவிர வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. இயற்கையை எப்படி ரசிக்கிறாரோ, மழையை எப்படி ரசிக்கிறாரோ, மின்னலை எப்படி ரசிக்கிறாரோ, செடியை, மரத்தை, பூவை எப்படி ரசிக்கிறாரோ அப்படியே சீதையின் முக லாவண்யத்தையும் அது போலவேதான் ரசித்திருப்பார்.
லிங்குசாமியின் பன் முகங்கள்:-
சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்.
மிகச் சிறந்த
டைரக்டர்.
ஆகச் சிறந்த
கவிஞர்.
அற்புதமான
ஓவியர்.
நல்ல
நிர்வாகி.
அனைவருக்கும்
நண்பர்.
மேன்மையான
மனிதர்.
ஆளுமை நிறைந்தவர்.
ஆன்மீகத்தில்
உச்சம் தொட்டவர்.
சீடர்களை உணர்ந்த குரு
அவர்களை உணரவைக்கும்
குருவும் கூட..
இவை அனைத்திற்கும் மேல்
ஒப்பற்ற ரசனைகளின் உறைவிடம்.



கவிஞனின் அடிப்படையே ரசனை தான். ரசனையும், மென்மையும், ஆழமான உண்மையும், புரிதலும் கொண்ட மனங்களே கவிதை எழுதும். கவிதையை ரசிக்கும்.
லிங்கூகூ--லிங்குசாமியை நான் அழைப்பது இப்படித்தான். லிங்கூகூ எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் பிரியமானவர். மனதை நெருங்கினவர். அவரது அன்பையும், பாசத்தையும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். அவரது கோபத்தைக் கூட பழகியவர்களே அறிவார்கள்.
' சோ' வெனப் பெய்து முடித்த மழைக்குப் பின்னர் சுளீரென்று அடிக்கின்ற வெய்யில் போல அவரது கோபம். மறு நிமிடமே வெய்யிலை மூடும் மேகம் மாதிரி அன்பும், பாசமும்.
லிங்குசாமி ஒரு அசாதாரணமான கலவை.
வானவில்லின் நிறச்சேர்க்கை.
அற்புதமான கலைடாஸ் கோப்!
விகடன் பிரசுரித்த 'லிங்கூ' வில் இவர் எழுதியிருக்கும் அணிந்துரையே நான் மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் சான்று!
நான் எழுதுவதை விட லிங்குசாமி எழுதியிருப்பதை அப்படியே தருகிறேன். எப்பேர்ப்பட்ட கவித்துவம் என்பதை உணருவீர்கள். கம்பன், கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி இவர்களையொத்த ரசனைக்காரர் எனவும் அறிவீர்கள்.
"கவிதைகளை வாசிக்கும் போது அவற்றை எழுதியவர்கள் மீதான என் மதிப்பும், நேசமும் அளவிட முடியாதது. அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்களின் பின்னணி என்ன என எது குறித்தும் கேட்கத் தோணாமல் அவர்களைக் கை குலுக்க நினைக்கிறது மனது. என்னைச் சிலிர்க்க வைத்த அந்தக் கவிதைகள் மட்டுமே அவர்களின் அடையாளம்.
லட்சம் பக்கங்களில் எழுதினாலும், உணர்த்த முடியாத ஒன்றை, சில வார்த்தைகளிலேயே இத்தனை நுட்பமாக இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது!
நல்ல கவிதைகளை வாசிக்கும் போது ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் மாறிவிடுகிற மனம் எனக்கு.
இந்தச் சிலிர்ப்பும், பேரார்வமும் என்னையும் பேனா எடுக்க வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு நல்ல கவிதையை வாசித்த கணமே ஒரு மலராக மலர்ந்து விடுகிறது மனது. எத்தனை அழகியலான பார்வை!
ரத்தினச் சூருக்கமான வர்ணிப்பு!
"எனக்கு அவளைத் தெரியும்
அவ்வளவுதான் தெரியும்."
காதலை, இதைவிட வேறெப்படிச் சொல்லிவிட முடியும்? எல்லோரும் பகிர்ந்தாலும் எப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாகப் பூக்கிறது இந்தக் காதல்!
வானத்தைக் கிழித்து வரும் மின்னலைப் போல்,
திருவிழாக் கூட்டத்தில் நம்மைத் திரும்பிப் பார்த்து விட்டுச் செல்லும் ஓர் அழகிய பெண் போல்,
மழை தொடங்குகிற-
இல்லை முடிகிற இடத்தைப் பார்க்கும் சிலிர்ப்பைப் போல்,
தாயின் கைக்குள் ஒடுங்கிக் கொள்கிற குளிர் காலத்துக் குழந்தையைப் போல்
நல்ல கவிதை என்னை மாற்றி விடுகிறது.
தியானத்தில் அமரும் போது ஒரு மணிநேரம் அப்படியே இருந்தால், ஒரு நிமிட கணம் எதையுமே நினைக்காத-எதுவுமே தோணாத ஒரு மனநிலை உருவாகும். நல்ல கவிதையை வாசிக்கும் கணம் எனக்கு அத்தகையதே....
இது போதாதா..?
இதைவிட ஒரு கவி மனதை வேறு எப்படிச் சொல்லி விட முடியும்?
இவை அனைத்தையும் அப்படியே திருப்பிச் சொல்லத் தோன்றுகிறது லிங்கு விடம்.
"ஒப்பற்ற கவிஞன் நீ
ஒப்பற்ற ரசிகன் நீ"- என்று அறைகூவல் விடுக்க வேண்டும் போலவும் இருக்கிறது.
லிங்கு தகப்பன் சாமியோ இல்லையோ..
தாயின் சாமி
"அப்படியே அம்மா மாதிரி
இருக்கீங்க.."
எல்லோரும் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
"அப்படியாம்மா..." என
உன்னிடமே கேட்டிருக்
கிறேன்.
முழுசாய்
தன்னையே எனக்குத்
தந்த அம்மா உனக்கு...
தன்னைத் தந்த அம்மாவுக்குத் தன்னையே சமர்ப்பணம் பண்ணியிருக்கிறார் இவர்.
இவரது அம்மாவை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு நாள் முழுவதும் அவரோடு பேசியிருக்கிறேன். இவரது சினிமா ரசனைதான் லிங்குவிற்கு. இவர் சினிமாவைத் தேடி ஓடி வந்த காரணமே அம்மாதான். லிங்குவும் அம்மாவும் சீட்டு விளையாடுவதைப் பார்க்க வேண்டுமே.. சளைத்தவர்கள் இல்லை இருவரும். இதில் அம்மாவோ பிள்ளையோ இல்லை. வெறும் போட்டியாளர்கள் மட்டுமே .. தாய்க்கும் மகனுக்கும் அப்படி ஒரு அந்நியோன்யம். சினேகம்!
முதல் கவிதை-
"விக்கல் வரும் போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ"
"சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல"
ஆஹா! லிங்கூ!
"நல்ல வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ வகுப்பறைக்குள் வந்தாய்"
"இரண்டு விஷயங்கள் மட்டும்
அப்படியே மனதில் நிற்கிறது
முதன் முதலில் கடல் பார்த்தது
கவிதாவைப் பார்த்தது"
"ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால்கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்"
"இந்த
இடிச் சத்தத்திற்கு
அவளும் பயந்திருப்பாளோ"
"இது என்ன
அந்தப் புறா
சொல்லி வைத்த மாதிரி
உன் வீட்டுக்கும் என்வீட்டுக்குமாய்ப் பறக்கிறது."
வெறும் காதல் கவிதைகள் மட்டுமே இல்லை.
"இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்"
"ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை"
"மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள்"
"எப்போதும் குடையோடு செல்லும்
தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில்
நல்ல மழை"
"மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில்."
ஒரு கவிஞனின் பார்வை எந்த அளவுக்கு நீள்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு.
"கோலம் போடத் தேவையில்லை
வாசல் முழுக்க
உதிர்ந்து கிடக்கின்றன
பூக்கள்"
"சுமை தாங்கிக் கல்லை
கடந்து செல்கிறாள்
கர்ப்பிணிப் பெண்"
" அரிசியைச் சுமந்து வரும் எறும்பு
சிரிக்கிற மாதிரியே தெரிகிறது"
"பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு"
"வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில்
நியூட்டன்"
நான் சொல்வது கொஞ்சம். இன்னும் இந்த நூலை சிலாகித்து நூலின் பின்னால் எழுதியிருப்பவர்களின் வரிசை நீநீளம்..
அறிவுமதி
கே.பாலச்சந்தர்
ஷங்கர்
பார்த்திபன்
தேனுகா
வசந்தபாலன்
ரா.கண்ணன்
பிருந்தா சாரதி
நா.முத்துக்குமார்
ராஜு முருகன்
யுகபாரதி
கலாப்ரியா
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
தவிர ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியம் இவரே.
பார்த்திபன் தன் கவிதைகளைக் கிறுக்கல்கள் என்பார்.
லிங்குசாமி தன்
ஓவியங்களைக் கிறுக்கல்கள் என்கிறார்.
மொத்தத்தில் லிங்கூ தன் கவிதைகளாலும் ஓவியங்களாலும் நம்மைக் கிறுக்குப் பிடிக்கவே வைக்கிறார்...

-இந்துமதி



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,