வல்லிக்கண்ணன்
ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணன், பிறந்த நாளின்று:!🌺
வல்லிக் கண்னன் என்றால் முதலில் மனத்தில் தோன்றுவது அவரது கட்டுரைகள்தான். சிறுகதை ஆசிரியர் அழகிரிசாமி, நாவலாசிரியர் தி.ஜானகிராமன் என்றெல்லாம் சொல்வது மாதிரி வ.க.வுக்கு ஓர் அடைமொழி கொடுக்க வேண்டுமானால் கட்டுரையாளர் வ.க. என்றே கொடுக்க வேண்டியிருக்கும்.
அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதினார் என்பது மட்டுமல்ல இந்த அடைமொழிக்குக் காரணம். அவரது ஆற்றல் அதிகம் வெளிப்பட்ட துறை இதுதான் என்பதே இந்த அடைமொழியின் முக்கிய காரணம்.
வல்லிக்கண்ணனது கட்டுரைகளைப் பற்றி முக்கியமான சில விஷயங்களை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அவைகள் கட்டுரை என்ற அளவில் மிக நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டவை.
பிசிறில்லாத ஒழுங்கு, விஷயங்களைத் தொகுத்துச் சொல்வதில் இயல்பான தன்மை, சிடுக்கில்லாத தெளிந்த நடை, ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படித்துமுடித்தவுடன் மனத்தில் ஏற்படும் முழுமை உணர்வு, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதும் ஒரே தொனியில் பேசும் ஆற்றல், மிகுந்த சிரமத்தின் பேரில் தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி - இவையெல்லாம் வ.க. கட்டுரைகளின் பொதுத் தன்மைகள்.
தகவல்களைப் பொறுத்தவரையில் எழுத எடுத்துக்கொண்ட விஷயங்கள் முற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற நேர்மை உணர்ச்சி அவரிடம் நிறைய உண்டு.
இந்த நேர்மை உணர்ச்சியை வல்லிக்கண்ணனது இயல்பாகவும், அவரது கட்டுரைகளின் இயல்பாகவும் ஒருசேரக் குறிப்பிடலாம்.
அவரது திறனாய்வை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவர் தகவல் தரும் ஆற்றலை மறுத்ததில்லை. பழந்தமிழுக்கு ஒர் உ.வே.சா. போல புதுத் தமிழுக்கு வல்லிக்கண்ணன் என்று சொன்னால் அது மிகையில்லை.
ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய பணியை வல்லிக்கண்ணன் தனியொரு மனிதராக நின்று செய்தார்
Comments