திருவண்ணாமலைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்

 திருவண்ணாமலைக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.! வரும் 20ம் தேதி வரை கோயிலில் தரிசனம் செய்ய, கிரிவலம் செல்ல தடை; எஸ்பி பவன்குமார் தகவல்



திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை தரிசிக்க ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆனால், உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில், படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது. ஆனாலும், பெரிய அளவிலான திருவிழாக்கள் மற்றும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் இன்னும் நீடிக்கிறது.  


எனவே, கடந்த 20 மாதங்களாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கிறது. அதேபோல், பிரசித்தி பெற்ற தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கான தடையும் தொடர்ந்து 2வது ஆண்டாக நீடிக்கிறது. அதன்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருக்கிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எஸ்பி பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அண்ணாமலையார் கோயிலில் இன்று பகல் 1 மணி முதல்20ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை.


கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, கோயிலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்கள் கிரிவலம் செல்வதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆளில்லா குட்டி விமானங்களை (ஹெலிகேம்) பறக்கவிட்டு, கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வடக்கு மண்டல ஐஜி தலைமையில், 3 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நாளை முதல் ஈடுபட உள்ளனர். அதோடு, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க, திருவண்ணாமலையை இணைக்கும் பிரதானமான 9 சாலைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.


அதேபோல், மாவட்ட எல்லைகளில் செக்போஸ்ட் அமைக்கப்படுகிறது. மேலும், நாளை மறுதினம் (18ம் தேதி) முதல் 21ம் தேதி அதிகாலை வரை, திருவண்ணாமலை நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாத நிலையில், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், நகருக்குள் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகருக்குள் வர இலவச டவுன் பஸ் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,