சலீம் அலி

 🦉உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் சலீம் அலி பிறந்த தினம் - இன்று - நவம்பர் = 12💐





🎯“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர்,


🎯இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.


🎯1896 – ஆம் ஆண்டு நவம்பர் 12 – ஆம் தேதி மும்பையில் ஒரு எளிய குடும்பத்தில் பத்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து தன் மாமாவால் வளர்க்கப்பட்டார்.


🎯சலீம் அலி பதினோரு வயது சிறுவனாக இருந்தபோது தனக்கு அன்பளிப்பாக கிடைத்த விளையாட்டு துப்பாக்கியால் விந்தையாக தெரிந்த குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதை உன்னிப்பாக கவனித்த போதும் அவரால் அதை இனம் காண முடியவில்லை.


🎯எனவே, அதை எடுத்துக்கொண்டு பம்பாயில் இயங்கிவந்த ‘பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்திற்குச் சென்றார். அப்பொழுது அச்சங்கத்தின் செயலராக இருந்த வால்டர் மல்லார்டு என்பவர் அது சாதாரணக் குருவி அல்ல என்றும், மஞ்சட் கழுத்துக் குருவி என்றும் விளக்கினார்.


🎯அதைக் கேட்டு “அட! பறவையில் கூட இத்தனை ஜாதிகளா? ” என்று வியந்த சலீம் அலி அன்றிலிருந்து பறவைகளின் பழக்கவழக்கங்கள், சுற்றுச் சூழல் இயல்புகள், நடவடிக்கைகள் பற்றி அறியும் ஆவல் கொண்டார். தொடர்ந்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க ஊழியராகச் செயல்பட்டார்.


🎯1913 – ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்து பம்பாய் தூய சவேரியார் கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து படிப்பில் நாட்டம் இல்லாததாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் ஈடுபடலானார்.


🎯அப்போது அவரது மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. பர்மா, மலேசியா ஆகிய இடங்களில் தென்பட்ட புதுப் புது விதமான பறவை மாதிரிகள், இறகுகள், தூவல்கள் ஆகியவற்றை சேகரிக்கத் துவங்கினார்.


🎯பறவைகள் குறித்து முறையாக அறிந்து கொள்ள உரிய நூல்கள் இல்லாத காலம் அது. அதை நினைத்து வருந்திய சலீம் அலி பிறகு தாமே சேகரித்த மாதிரிகளைக் கொண்டு குறிப்புகளை உருவாக்கிக் கொண்டார்.


🎯இவரது ஆர்வத்தை உள் நாட்டில் எவரும் கண்டு கொள்ளாததால் ஜெர்மனியின் பெர்லினிலிருந்த உயிரியல் பேராசிரியர் எர்வின் ஸ்ட்ரெஸ்மான் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.


🎯பின் 1927 – ஆம் ஆண்டு தன்னுடன் பர்மிய பறவை இனங்கள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு பெர்லினுக்கு சென்றார். அங்கு சலீமின் ஆராய்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார் ஸ்ட்ரெஸ்மான்.


🎯1930 – ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் 1932 – ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மற்றும் கொச்சி பறவைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை “கேரளப் பறவைகள்” (The Birds of Kerala) என்ற அரிய நூலாக வெளியிட்டார்.


🎯பின் இம்பீரியல் ஆய்வு குழுமத்திற்கு (Imperial Agricultural Research Council) பறவையியல் ஆய்வுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்.


🎯வெளிநாட்டுப் பறவைகள் குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டாத அவர் நம் நாட்டு பறவைகள் குறித்து அறிந்துக் கொள்ளவே நிறைய இருக்கிறது என்று கருதினார்.


🎯நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1942 – ஆம் ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.


🎯இந்திய சுதந்திரத்திற்குப் பின் பண்டித ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்புறவின் தொடர்ச்சியாக தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைக்க இவர் ஆற்றியத் தொண்டு மகத்தானது.


🎯“கண்டுப்பிடிப்பு என்பது வெறும் புதுமைகள் நிகழ்த்துவதில் இல்லை. அந்தத் துறை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முனையும் எத்தனிப்பே, முக்கியமானது” என்பது கண்டுப்பிடிப்பைக் குறித்து இவர் கொண்டிருந்த கொள்கை ஆகும்.


🎯1948 – ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். தில்லான் ரிப்லீயுடன் இணைந்து சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்.


🎯1955 – ஆம் ஆண்டு இவரது சிங்கப்பூர் நண்பர் லோக் தாவோவின் பொருள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் பயனாக “சிக்கிம் பறவைகள்” (Birds of Sikim) என்ற நூலை வெளியிட்டார்.


🎯பின்னர் 1974 – ஆம் ஆண்டு “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக வெளிவந்தது.


🎯தன்னார்வத்தினால் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய இவருக்கு மேற்கூறிய விருதுகளும், ஜே. பால் கெயிட்டி வனவிலங்கு பாதுகாப்பு விருதும், தேசிய பறவை பேராசிரியர் விருது எனப் பல பாராட்டுகள் தேடி வந்தன.


🎯1987 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இந்திய மாமேதை இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஆனால் “ஒரு குருவியின் வீழ்வு” (The fall of a saprrow) என்ற அவரின் சுயசரிதை மூலம் இந்திய இளைஞர்களுக்கு பல அரிய உண்மைகளைக் கூறிவருகிறார்.


இத்துனை சாதனை படைத்தவரை பெருமைபடுத்தும் விதமாக கோவை ஆனைகட்டியில் " சலீம் அலி பறவைகள் சரணாலயம் அமைக்கபட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,