கமல்ஹாசன்,

 கமல்ஹாசன்

இன்று இவரது பிறந்தநாள்
'கில்லாடி ஊரிலே, யாரடா கூறடா மல்லாடி பாா்ப்போமா,வாங்கடா'' என தனது திறமையின் மீது அபார நம்பிக்கை கொண்ட கமல்ஹாசன்,

இந்திய திரையுலகை மல்லுக்கு நிற்க அழைப்பு விடுத்த திரைப்படம் 'ஆபூர்வ சகோதரர்கள்'. இந்த திரைப்படம் இந்திய சினிமாவிலும், கமல்ஹாசன் திரை வாழ்விலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது ஆபூர்வ சகோதரர்கள். எம்ஜிஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம், 1973-ஆம் ஆண்டு வெளியாகி, அதற்கு முன் வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்திருந்தது. இந்த சாதனையை 1979-ஆம் ஆண்டு வெளியான சிவாஜியின் 'திரிசூலம்' முறியடித்தது. இதை 1982-ஆம் ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் 'சகலகலா வல்லவன்' முறியடித்தது. ஏழாண்டுகளுக்குப் பின் அந்த சாதனையை 'அபூர்வ சகோதரகள்' மூலம் மீண்டும் முறியடித்தவர் கமல்.
நாயகன் திரைப்படத்துக்கு விமர்சன ரீதியில் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு கமல்ஹாசனை பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட செய்தது. யாரும் நினைத்து பார்க்காத, தொட தயங்கிய கதையம்சங்களைக் கொண்ட பல சோதனை முயற்சிகளை செய்ய வைத்தது. நாயகனைத் தொடர்ந்து வந்த 'பேசும் படம்' ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. அதன்பின் வந்த 'சத்யா'வை இளைஞர்களின் வரவேற்பை பெற்றது. 'சூரசம்ஹாரம்' வழக்கமான போலீஸ் கதையாக அமைந்தது. 'உன்னால் முடியும் தம்பி' பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தான் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'ஆபூர்வ சகோதரர்கள்' திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது.
ரசிகர்களின் ரசனையை அறுவடை செய்வதில் கைத்தேர்ந்தவர் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தில் இரட்டை வேடம் என்பதால், இரு கதாப்பாத்திரங்களையும் தனித்துக் காட்ட விரும்பினார் கமல். அந்த மெனக்கெடலில் தோன்றியது தான் இன்று வரை பேசு பொருளாக இருந்து வரும் அப்பு கதாப்பாத்திரம்.அவரது குருநாதர் பாலசந்தர் உயரம் குறைந்தவராக நடிக்கும் யோசனைக்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த பாத்திரத்தை எப்படி செதுக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதில் கவனம் செலுத்தினார்.
உயரம் குறைந்தவராக நடித்து 10 நாள்களில் படமாக்கப்பட்ட 3 காட்சிகள் மட்டும் 500 அடி நீளம் கொண்டதாக இருந்தது. கமல்ஹாசன் , சிங்கீதம் சீனிவாசராவ், அனந்து, லெனின் உள்ளிட்டோருக்கு ஒன்றும் புலப்படவில்லை. அப்போது பஞ்சு அருணாச்சலத்துக்கு அந்த காட்சிகளை காட்டினார் கமல்.
கமலின் சிரத்தையை மெச்சிய பஞ்சு அருணாச்சலம், அப்புவை மையமாக வைத்து கதையை எழுதினார். திரைக்கதையை கமலும், வசனங்களை கிரேஸி மோகனும் எழுத, படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இசைஞானி இளையராஜாவின் இசையும் ஆபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இன்னும் அழகாக்கியது.
கதை: ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியான சேதுபதி (கமல்), அந்த ஊரின் பெரிய மனிதர்களான தர்மராஜ் (நாகேஷ்), சத்யமூர்த்தி (ஜெய்சங்கர்), பிரான்சிஸ் அன்பரசு(டெல்லி கணேஷ்), மற்றும் நல்லசிவம் (நாசர்) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வரும் அவர்கள், சேதுபதியை சித்ரவதை செய்து கொலை செய்து விடுவார்கள். நிறைமாத கர்ப்பினியான அவரது மனைவி காவேரிக்கு (ஸ்ரீவித்யா) கட்டாயப்படுத்தி விஷம் கொடுக்கப்படும்.அவர்களிடம் இருந்து தப்பிச் செல்லும் காவேரிக்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று முனியம்மாவிடம் (மனோரமா) ராஜாவாக (கமல்) வளர்கிறது.
காவேரியிடம் இருக்கும் அப்பு (கமல்) சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது தந்தையின் இறப்புக்கு காரணமானவர்கள் குறித்து தெரிந்து கொள்ளும் அப்பு அந்த 4 பேரை திட்டமிட்டு சர்க்கஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொலை செய்கிறார். அப்பு செய்யும் கொலைகளில் எதிர்பாராத விதமாக ராஜா மாட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் இறுதி காட்சியில் அனைவரும் ஒன்றாக சேரும் போது, தான் செய்த கொலைகளுக்காக சிறை செல்வார் அப்பு.
மேலோட்டமாக பார்த்தால் தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் பிள்ளைகளின் கதை. ஆனால் கமல்ஹாசன் அப்படி செய்யவில்லை. இந்த திரைப்படத்தில் அப்புவாக வரும் கதாப்பாத்திரத்துக்காக உயரம் குறைவான உருவத்தில் நடித்தார். சிஜி உள்ளிட்ட எந்தவிதமான தொழில்நுட்பமும் பெரிதாக இல்லாத காலம் அது. 90-ஸ் கிட்ஸ் எல்லோருக்குமே இந்த படத்தில் கமல்ஹாசன் எப்படி அந்த தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதை அறியும் ஆவல் பல ஆண்டுகளாக இருந்து வந்ததை மறக்க முடியாது.
அதற்கு முன் தமிழ் சினிமா தனது ரசிகர் பட்டாளத்தை திரைப்படங்கள் மூலம், வயல்வெளி, கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குள் அழைத்துச் சென்றது. அவர்களை தனது ஆபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் மூலம் சர்க்கஸ் கூடாரத்துக்குள் கூட்டி வந்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெமினி சர்க்கஸில் படமாக்கப்பட்டது.
ஆபூர்வ சகோதரர்கள் படத்திற்குப் பின்னர் இரண்டு சகோதரர்கள் கதையென்றால் இருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேறுபாட்டை வைத்தாக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ்சினிமா இயக்குநர்கள் தள்ளப்பட்டார்கள். அதே நேரம் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் கதை, உருவ ஒற்றுமை உள்ள இரண்டு சகோதரர்கள் கதைக்கும் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
பிற மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை தங்கள் மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். ஆனால் நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களை ரீமேக் செய்ய பலரும் தயங்குவர். அப்படி ஒரு படம் தான் ஆபூர்வ சகோதரர்கள். சிலர் தங்கள் கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு காட்சியை கடத்துவதில் வல்லவர்கள்.சிலர் தொழில்நுட்பத்தை கையாண்டு ரசிகர்களை வியக்க வைப்பதில் சிறந்தவர்கள்.ஆனால் கமல்ஹாசன் இந்த இரண்டிலும் தலைசிறந்தவர்.
அப்புவின் ரகசியம்
அப்பு கமல் வரும் காட்சிகளைப் படமாக்குவதற்கு மட்டும் ஓராண்டு எடுத்துக் கொண்டாா்களாம். கமல் தன்னைக் குள்ளமாகக் காட்டிக் கொள்வதற்கு கோட் உள்ளிட்ட முழுக்கை ஆடைகளை மட்டுமே அணிந்திருந்தார்.படத்தில் அப்பு இடம்பெறும் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் கலர்புல்லாக படமாக்கப்பட்டது.
அப்படி இருந்தால் தான் மக்களின் பார்வை கதாபாத்திரத்தின்மேல் விழுவதைவிட அதைச் சுற்றி இருக்கும் பொருள்களின் மீது அதிகமாக இருக்கும். சில காட்சிகளில் காலைக் கட்டிக் கொண்டும், சில காட்சிகளில் குழிகளைப் பறித்தும், சில காட்சிகளில் செயற்கைக் கால்களைப் பயன்படுத்தியும் படமாக்கியிருக்கிறார்கள்.
நன்றி: தினமணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,